உங்களுடன் ஒரு சில சொற்கள் (1997)

உங்களுடன் ஒரு சில சொற்கள்
ந. முருகானந்தம்
பதிப்பாசிரியர்

அன்புடையீர்,

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். 1997 ஆம் ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டு. இந்தியா சுதந்திரமடைந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்ற் ஆண்டு. இவ்வாண்டில் இந்தியாவின் வளர்ச்சியையும், தமிழகத்தின் வளர்ச்சியையும் எண்ணிப் பார்ப்பது பொருத்தமானதாகும். இவ்வெண்ணம் விமர்சனக் கண்ணோட்டத்திலிருப்பின் இன்னும் சிறப்பானதாகும். ஆக்கபூர்வமான விமர்சனமே வளர்ச்சிக்கு வித்து. இவ்வித்தினை விதைக்கும் வண்ணம் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் இப்புத்தாண்டு நூலினை வெளியிடுகின்றது.

இந்நூலில், தமிழ்நாடு: நேற்று-இன்று-நாளை என்ற பொதுத் தலைப்பின் கீழ் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான துறைகளில், ஆசிரியர் பலர் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். இவ்வல்லுநர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் எங்களுக்கு உதவியவர்கள்: அமர்ர் குன்றக்குடி அடிகளார் துணைவேந்தர் ஞானம், பேராசிரியர் அறவாணன், திரு. ரெங்கராஜன், திரு. நெடுமாறன் ஆகியோர். குன்றக்குடி அடிகளார் அவர்கள் இந்நூலின் மையக்கருத்திலும், அமைப்பிலும் மிகுந்த அக்கறை காட்டினார்கள்.

பேராசிரியர் அறவாணன் அவர்கள் இச்சங்கத்தின் சார்பில் இந்தியாவில் ஒருங்கிணைப்பாளராய்ப் பணிபுரிந்துள்ளார். கட்டுரையாளர் தொடர்பு, கட்டுரைகளைப் பெறுதல், அச்சுத்திருத்தம் முதலிய பெரும் பணிகளில் அவரும் உதவிகள் செய்துள்ளார். இப்பணியில் இவருக்குத் துணை நின்றவர் திரு. பழ. முருகப்பன். இந்நூல் வெளிவருவதற்குப் புதுச்சேரிப் பல்கலைக்கழகம் கொடுத்த ஆதரவு குறிப்பிடத்தக்கது.

தமிழக வளர்ச்சியில் மிகுந்த ஆர்வங்காட்டி இந்நூல் திட்டத்தைச் செயல் முறையில் கொண்டு வருவதற்கு நியூ ஜெர்சியிலிருந்து உதவியவர்கள்: தமிழ்ச் சங்கத் தலைவர் அன்பரசன், நிறுவனர் சுந்தரம், திரு. கே.எம்.சுந்தரம், திருமதி ஆனந்தி, திருமதி சாரதாம்பாள், திருமதி சும்த்திரா ஆகியோர் நூற்செலவுகளைச் சரிகட்டப் புரவலர்களை அணுகுதல், விளம்பரங்கள் சேர்த்தல் முதலியவற்றில் இவர்கள் வகித்த பங்கு பாராட்டத்தக்கது.

இந்தியாவில் கட்டுரைகளைக் கணிப்பானில் அச்சுக்கோர்த்து உதவியவர் புதுச்சேரி திரு. கோபிநாதன் (க்ளோபல் கிராபிக்ஸ்). அமெரிக்காவில் இந்நூலுக்கு நல்வடிவம் நல்கியவர் மேரிலாந்து குப்புசாமி அவர்கள். இவருக்கு இப்பணியில் உதவிக்கரம் கொடுத்தவர்கள் திரு. சங்கரபாண்டியும், திரு. துக்காராமும்.

இந்நூலுக்கு மணம் தருவது இதிலுள்ள கட்டுரைகள். இதன் ஆசிரியர்கள் பல அலுவல்களுக்கிடையிலும் சம்பந்தப்பட்ட துறைகளில் ஆய்வு செய்து விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார்கள். இது சமூக முன்னேற்றத்தில் இவர்களுக்குள்ள அக்கறையையும் ஈடுபாட்டையும் காட்டுகிறது.

குணம் நாடிக் குற்றமும் நாடுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பார்வை. இப்பார்வையினால் இந்தியாவும் தமிழகமும் வளர்ச்சி பெற வேண்டும். அதற்கு அறிஞர்களும் பத்திரிகைகளும் மாணவர்களும் பாடுபட வேண்டும். இதற்கு இந்நூல் சிறிதளவேனும் பயன் தருமெனில் அதுவே இதன் வெற்றி.

ஏப்பிரல் 19, 1997                                       ந. முருகானந்தம்
சாமர்வில்                                                  திட்ட அமைப்பாளர்                                                                                                                                                        நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்