Star Mountain

My travels and other interests

சமூகம்தமிழ்நாடு நேற்று இன்று நாளை

குடிமை உணர்வு (1997)

குடிமை உணர்வு
இ.ஜே. சுந்தர்

குடிமைப் பண்புகள் விரிந்தவை. தமிழ் மக்கள் வாழ்வோடு தொடர்புடைய குடிமை உணர்வின் இன்றியமையாப் போக்குகளே ஆயப்படுகின்றன. நேற்றும் இன்றும் குடிமை உணர்வில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. குடிமை உணர்வை அரசியலும், மக்கட் தொகையும், வறுமையும், கல்வியும் பாதிக்கின்றன.

குடிமைப் பண்பின் முக்கிய கூறாகச் சுகாதார உணர்வு உள்ளது. தமிழ் நாட்டில் மேற்கொண்ட மருத்துவத்துறை கள ஆய்வுகள் மக்களின் சுகாதாரக் கண்ணோட்டத்தை உணர்த்து கின்றன. சாலைகளே பொதுக் கழிப்பிடங்களாகவும், பொதுக் கழிப்பிடங்கள் குடிமைப் பண்புக்கு மாறாகவும் விளங்குகின்றன.

மத நம்பிக்கைகள் பலவும் குடிமைப் பண்பிற்குக் களங்கம் விளைவித்துள்ளன. சுவரொட்டிக் கலாச்சாரமும் அதன் உச்சகட்டமான வெட்டுரு கலாச்சாரமும் குடிமைப் பண்பின் சீரழிவுக்கு அடையாளங்கள். குடிமை உணர்வுடையோர்க்குத் தமிழகச் சாலைகளின் நிலையும் பயன்பாடும் கவலை தருகின்றன. நாளிதழ்களில் இது தொடர்பாக வந்துள்ள செய்திகள் குடிமைப் பண்பின் நலிவைக் காட்டுகின்றன. தமிழகத்தில் நில மாசு, நீர் மாசு, காற்று மாசு பெருகி வருகிறது.

குடிமைப் பண்பைக் குலைக்கும் செயல்களாக எச்சில் துப்பல், வரிசை மீறல், குழாயை மூடாமல் விடல் போன்றவை அமைகின்றன. எனினும் குடிமை உணர்வு, தமிழகத்தில் பல தனி மனிதர்காளாலும், அமைப்புகளாலும் காப்பாற்றப்பட்டு வளர்க்கப்படுகின்றது. குடிமைப் பண்பை வாழ்வு நெறியாகக் கொண்டு துவங்கப்பட்ட எக்ஸ்நோராஅமைப்புத் தமிழகத்தில் தோன்றி, இந்தியாவையும், உலகையும் மாற்றி வருகிறது. இந்த அமைப்பினர் தமிழகத்தில் குறைந்த காலத்தில் நிறைந்த சாதனைகள் ஆற்றி வருகின்றனர்.

புதிய ஆட்சியினர் குடிமைப் பண்பை வளர்க்கச் செய்யும் முயற்சிகளின் வெற்றி மக்களின் விழிப்புணர்வைச் சார்ந்ததாகும். 30 ஆண்டுகளாகக் கொட்டப்பட்டுவரும் குப்பைகளை அகற்ற ஓட்டேரி மக்கள் காட்டிய தீவிர எதிர்ப்பிற்கு, நீதிமன்றம் அளித்த தீர்ப்புக் குடிமை உணர்வுக்குக் கிடைத்த வெற்றியாகும். குடிமை உணர்வுக்கு எதிரான போக்குகள் காணப்பட்டாலும், குடிமை உணர்வு மலரும் வாய்ப்புகளும் ஒளிவிடுகின்றன. சட்டமும், கல்வித் திட்டமும், தொண்டு அமைப்புகளின் அயராத உழைப்பும் குடிமைப் பண்பை தமிழகத்தில் நிலை நிறுத்தும் வழிகளாகும்.

 “உன் அயலானை நேசி” என்பதன் விரிவே குடிமை உணர்வாகும். இதுவே குடிமக்கள் வாழ்வின் அடிப்படைக் கூறாக விளங்க வேண்டும். ஒரு நாகரிக சமுதாயத்தின் இதயமாகக் குடிமைப் பண்பே மிளிர்கிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பண்பட்டு வரும் வாழ்க்கை முறைக்குச் சொந்தக்காரர்களாகத் தமிழ் மக்களிடம் குடிமை உணர்வு விடுதலைக்குப் பின் எப்படி இருந்தது? இன்றைய ஆட்சியில் எப்படி இருக்கிறது? நாளை எப்படி மேம்பட வேண்டும்? என்ற ஆய்வின் நோக்கைச் செயல்படுத்த, நூல்களை விட தனி மனிதர்கள், பலரின் சந்திப்புகளே துணை செய்தன. குடிமையியல் தொடர்பான நூல்கள் நூலகங்களில் மருந்துக்குச் சிலவே உள்ளன. அனைத்தும் பல ஆண்டுகளுக்கு முந்தியவை. அவையும் தீண்டுவாரற்று தூசி படிந்து உள்ளன. இந்நிலையில் தம் களப் பணியில் கண்ட பசுமையான அனுபவங் களைப் பகிர்ந்து கொண்ட குடிமை உணர்வாளர்கள் சிலரின் நேர்காணலே ஆய்வுக் கட்டுரைக்கு ஆழம் சேர்த்துள்ளது. தமிழக இதழ்கள் சிலவும் குடிமை உணர்வை உசுப்பும் செய்திகளைப் படங்களுடன் வெளியிட்டுக் குடிமைப் பண்பு காத்து வருகின்றன. கட்டுரையின் கருத்துகளில் கனம் சேர்க்க இதழ்கள் அளித்த செய்திகள் மிகவும் பயன்பட்டுள்ளன.

குடிமைப் பண்பு பற்றிய கூறுகள் மிக விரிந்தவை. ஆனால் கட்டுரையின் பக்கங்களோ எல்லை வகுத்தவை. எனவே தமிழ்நாட்டு மக்கள் வாழ்வோடு தொடர்புடைய, அவர்களைப் பாதிக்கின்ற இன்றியமையாப் போக்குகளை மட்டும் கவனத்தில் கொண்டு ‘குடிமை உணர்வு’ ஆயப்படுகிறது.

குடிமை உணர்வு – நேற்று

நேற்றும் இன்றும் ஒன்றே!

விடுதலை பெற்றதிலிருந்து இன்றைய ஆட்சிக்கு முந்தைய காலம் வரையிலும், இன்றைய ஆட்சிக் காலத்திலும் குடிமை உணர்வுகளின் அடிப்படையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. பெரும்பாலான நிகழ்வுகளும் போக்கும் இரு காலத்திற்கும் பொருந்தும். எனவே கட்டுரையின் மிகுதியான பக்கங்கள் இவ்விரு காலத்திற்கான பொதுவான செய்திகளை விரிவாக விளக்க முற்படுகின்றன.

அரசியலும் குடிமை உணர்வும் :

ஆங்கில ஆட்சியாளர்கள், அடிமைப் படுத்திய குடிமக்களிடம் கூடக் குடிமை உணர்வை வளர்த்தார்கள். ஆங்கிலேயர் காலத்தில் குடிமையியல், மாணவர்களுக்குப் பாடமாக விளங்கியது. விடுதலைப் போராட்ட உணர்வோடு, குடிமை உணர்வும் கூட வளர்ந்தது. “நாமிருக்கும் நாள் நமது” என்று முதுங்கியபோது குடிமை உணர்வு விழிப்பு பெற்றது. ஆங்கிலேயர் ஆட்சி மறைந்து தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மலர்ந்தபோது குடிமையியல் பாடப்புத்தகத்தில் மட்டும் இருந்தது. அதனைத் தொடர்ந்த கழக ஆட்சிகளில் மாணவர்களுக்குப் பாடமாக இருக்கும் தகுதியையும் அது இழந்தது. காரணம் அரசியல் காட்சிகள் எவற்றிற்கும் குடிமை உணர்வில் நாட்டமில்லை. அரசியல் கட்சிகளின் எந்தத் தேர்தல் அறிக்கைகளிலும் குடிமையுணர்வை மையப்படுத்தி வாக் குறுதிகள் தரப்பட்டதே இல்லை.

குடிமையியல் அறிஞர் பேராசிரியர் எஸ். ஷெலிம் மற்றும் எம்.பி. வியாஸ் ஆகியோர், இந்தியர்கள் குடிமையுணர்வு அற்றுப் போனதற்கு அரசியல் சீரழிவின் வெளிப்பாடுகளாக ஆறு காரணங்களை முன் வைக்கிறார்கள். இவை அப்படியே தமிழகத்திற்கும் பொருந்தும்.

  1. உள்ளாட்சி அமைப்புகளில் பொது நலனுக்காவன்றி, சுயகௌரவத் திற்காகவே மக்கள் உறுப்பினர் களாகின்றனர்.
  2. மக்களிடம் எளிதாக செல்வாக்குப் பெறும் பொருட்டு, உள்ளாட்சி சட்டங்களைக் கடுமையாக நடை முறைப்படுத்தாமையுடன், வரிகளை விதிக்காமலும் விட்டு விடுகின்றனர்.
  3. சாதி, குழு, கட்சி வேறுபாடுகள் காரணமாக, உள்ளாட்சி உறுப்பினர் களிடையே ஒற்றுமை நிலவ முடிவதில்லை.
  4. சமூகத்திற்கு எந்த நற்பணியும் செய்ய முடியாது என்பதையறிந்து, திறமையான மனிதர்கள் தேர்தலில் நிற்பதில்லை.
  5. போதிய கல்வியறிவின்மை, வேட்பாளர் களிடமும், உள்ளாட்சி உறுப்பினர் களிடமும் குடிமை விழிப்பைத் தடை செய்துள்ளது.
  6. உள்ளாட்சி அமைப்புகளைப் பாதிக்கவும் கட்டுப்படுத்தவும் மக்கள் எண்ணம் வலுவாக இல்லை.

மக்கட் தொகையும் குடிமை உணர்வும் :

1871இல் 1.58 கோடியாக விளங்கிய தமிழக மக்கட் தொகை 75 ஆண்டுகளில் விடுதலை பெற்றபோது 3 கோடியாக மட்டுமே உயர்ந்தது. ஆனால் 1991 இல் 5.56 கோடியாகப் பல்கிப் பெருக்கெடுத்துள்ளது. கி.பி. 2000இல் 6.39 கோடியாக உயர வுள்ளது. மக்கட் தொகை பெருகும் வேகத்தில் தமிழகத்தில் அடிப்படைத் தேவைகள் பெருகவில்லை. அடிப்படை அன்றாடத் தேவைகளுக்காகப் போராட வேண்டிய சூழலில் குடிப்பண்புகளைக் காற்றில் பறக்கவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கட் தொகை பெருக்கம் ஏற்பட குடிமையுணர்வில் சுருக்கம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது.

பொருளாதாரமும் குடிமை உணர்வும் :

உணவு உட்கொள்ளும் அடிப்படையில் ஒப்பிடுகையில் இந்தியாவிலேயே வறுமை யான மாநிலமாகத் தமிழகமே விளங்குகிறது, என மருத்துவ ஆய்வுக்கான இந்தியக் குழு (ICMR) அறிவித்துள்ளது. ஒரு நபரின் அன்றாடப் புரதத் தேவை 44 கிராம்; கலோரி அளவு 2400. தமிழக மக்களின் சராசரி முறையே 36 கிராம்; 1468 ஆக உள்ளன.

வறுமைக் கோட்டிற்குக் கீழ் கிராமங்களில் 73.80ரூ மக்களும், நகரங்களில் 71.1ரூ மக்களும் தமிழகத்தில் வாழ்கிறார்கள். ஒரு வேலை உணவிற்காகப் போராடும் கொடிய வறுமை குடி மகனை, அடிப்படைத் தேவைகளுக்கே இன்னும் போராடும் அடிமையாக்குகிறது. சாலை ஒழுங்கோ, சுற்றுப்புறத் தூய்மையோ அவனுக்கு அப்பாற்பட்ட ஆடம்பரங்களாகி விட்டன. மேல் நடுத்தர, பணக்கார மக்களால் மட்டும் தமிழ்நாட்டில் குடிமையுணர்வு பற்றி எண்ணிப் பார்க்க முடிகிறது.

கல்வியும் குடிமை உணர்வும் :

தமிழகத்தை விட மிகுந்த மக்கள் நெருக்கமும், தமிழகத்தை அடுத்த நிலையில் வறுமையும், மிகுந்த கேரளாவில் மட்டும் குடிமை உணர்வு போற்றும்படி உள்ளது எவ்வாறு? இவ்விரு அவலங்களையும் சரிக்கட்டும் மருந்தாகக் கேரள மக்களுக்கு விளங்குவது கல்வியாகும். இந்தியாவிலேயே படித்த மக்கள் மிகுதியாக வாழும் இச்சிறு மாநிலத்தில் வறுமையும், மக்கட் தொகையும் குடிமை உணர்விற்குத் தடைக்கல்லாக இல்லவே இல்லை. தமிழகத்தில் எழுத்தறிவு விகிதம் 63.72%, கேரளத்தில் 90.59% என்ற ஒப்பீடு குடிமையுணர்வில் கல்வியின் பங்கைத் தெற்றென விளக்கும்.

சுகாதாரமும் குடிமை உணர்வும் :

உடல் தூய்மை காக்க வேண்டியது சமூகக் கடமை, தூய்மையின்மை குடி மக்களிடம் நோய்கள் பரவ வழிகோலும் என்பதால், குடிமை உணர்வுமிக்க தனிமனிதன் சுகாதாரத்தைப் பேணுதல் அவசியம். தமிழ்நாட்டு மக்களின் சுகாதார நிலையைக் கணிக்க, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மாணவர் குழுவுடன் டாக்டர் டி.என். ஆத்மராமன், தஞ்சை, நெல்லை, வடஆற்காடு, தென்னாற்காடு பகுதிகளில் நிகழ்த்திய கள ஆய்வில் கண்டறிந்த கீழ்கண்ட உண்மைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.

  1. 60% மக்கள் மட்டுமே நாள் தோறும் குளிக்கின்றனர்.
  2. குளிப்போரில் 45% மக்களே ‘டாய்லெட் சோப்பு’ பயன்படுத்துகின்றனர். எஞ்சியோர் கடலை மாவு, அரிசி மாவு போன்றவற்றைத் தேய்த்துக் குளிக்கின்றனர்.
  3. 70% மக்கள் வெட்ட வெளியில் மலங் கழிக்கின்றனர்.

இந்தப் புள்ளி விவரம் விமானம், கீழ் பறந்து எடுத்த உலகச் சுகாதார நிறுவனத்தின் ஒளிப்படங்களாலும் உறுதி செய்யப் பட்டுள்ளது. கிராமப்புறங்களில் தமிழ் மக்கள் வெட்ட வெளியில் மலங்கழிப்பது உடலியல் நிகழ்வாக மட்டுமல்லாது ஒரு சமூக நிகழ்வாகக் கொள்வதாகக் தெரிகிறது. ஒருவருக்கொருவர் ஏறத்தாழ 3 அடி தூர இடைவெளியில் காணப்படுகின்றனர். வீட்டுப் பிரச்சினை தொடங்கி அகில உலக அரசியல் வரை இந்நேரத்தில் பேசி முடிக்கின்றனர். பண்டுதொட்டு நிலவி வரும் இப்பழக்கத்தால், கழிவறை அமைத்துக் கொடுத்தும் மக்கள், “அதில் காலைக் கடனை நிறைவேற்ற இயலவில்லை” என்கின்றனர்.

  1. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளில் 50% போர்களுக்குத் தலைப்பேன் காணப்படுகிறது.
  2. 67% வீடுகளில் தனியாக குளியலறையோ, கழிவறையோ இல்லை. இதே குழுவினர் சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் 100 நடுத்தர மக்களிடம் (மாத வருவாய் ரூ.1500-3000) மலங்கழுவும் முறை பற்றி ஆய்வு நிகழ்த்தினர். சீராக மலங்கழுவ குறைந்த அளவு 3 லிட்டர் தண்ணீர் பயன்படுத்த வேண்டும். ஆனால் இம்மக்கள் 250 மி.லிட்டர் கொள்ளளவு உள்ள ‘சொம்பை’க் கொண்டே அரை குறையாகக் கழுவுகின்றனர். கழுவிய கரங்களை அம்மக்கள் சோப்புப் போட்டுத் தூய்மை செய்வதேயில்லை. 100 பேர்களின் கரங்களைப் பரிசோதித்ததில் டைபாய்டு மற்றும் காலரா கிருமிகள் 40ரூ மக்களின் கரங்களில் காணப்பட்டன.

கிராமிய மக்கள் மட்டுமின்றி நடுத்தர நகர மாந்தரும் சுகாதார உணர்வின்றி வாழ்வதையே உணர முடிகிறது.

தமிழக நகரங்களின் ஒவ்வொரு சாலை ஓரமும் மக்களால் பொதுக் கழிப் பிடங்களாகவே கொள்ளப்படுகின்றன. புகழ்பெற்ற குடிமை உணர்ச்சியாளர் எம்.பி. நிர்மல் அவர்களிடம் குடிமை உணர்வு பற்றி விவாதித்தபோது, “என் இளமைக்காலத்தில் தெருவில் சிறுநீர் கழிக்க அச்சமாக இருக்கும். காரணம் ‘போலீஸ்காரர்’ பிடித்துக் கொள்வார். இப்போது ‘போலீஸ்காரர்களே’ தெருவில் சிறுநீர் கழிப்பதைப் பார்க்க முடிகிறது” என்று குறிப்பிட்டது குடிமைப் பாதுகாவலர்களே குடிமைப் பண்புகளை முடமாக்கியதை உணர்த்துகிறது.

இந்திய புவியியல் பற்றி ஆய்ந்தெழுதிய ஓ.எச்.கே. ஸ்பேட் என்பார், தமிழக நகரங்கள் பலவற்றின் அவலங்களைக் கண்டுவிட்டு, சோழ நாட்டுச் செழுநகரான குடந்தையும் சுகாதாரச் சீர்கேடு அடைந்துள்ளதைக் “கும்பகோணம் காலைப் பொழுதில் நகரமாகவும், இரவில் பொதுக் கழிப் பிடமாகவும் விளங்குகிறது” என்று நையாண்டி செய்துள்ளார். உணவகங்கள், கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் போன்றவற்றின் அருகே குடிமையுணர் வின்றி மக்கள் சிறுநீர் கழிப்பது மட்டுமன்றி, தம் உயிர்மீது கூட உணர்வின்றி மின்சாரக் கம்பிகள் அருகேயே சிறுநீர்க் கழிக்கத் தயங்குவதல்லை. “இங்குச் சிறுநீர் கழித்தால் சாவாய்” என்ற எச்சரிக்கைப் பலகையை மின் தூண்களுக்கருகே பலவிடங்களில் காணமுடிகிறது. எனினும் கவலையற்று இங்குச் சிறுநீர் கழிப்போரையும் காணமுடிகிறது. இவர்களில் சிலர் மின் அதிர்ச்சி ஏற்பட்டு மாண்டு போனதாக நாளிதழ்களில் செய்தியும் காணமுடிகிறது.

உண்ணும்போது பலர் பார்க்க உண்ணாமல் மறைந்து உண்பதையே விரும்பும் மக்களில் பலர், சிறுநீர் கழிக்கவும், மலங்கழிக்கவும் மறையாமல் பொது விடங்களில் கூச்சமின்றி இருப்பது விந்தையிலும் விந்தை.

பொதுக் கழிப்பிடங்கள் பலவும் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை; அப்படிப் பராமரிக்கப்பட்டால் கழிவறைகள் தவறான நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப் படுகின்றன. வட சென்னையில் மகளிர் கழிப்பிடங்கள் சில கள்ளச்சாராய கிடங்குளாகப் பயன்படுத்தப்படுகின்றன. சென்னையில் புகழ்பெற்ற தொழிற்சாலைகள் சிலவற்றில் கழிப்பிடங்கள் தொழிலாளர்களின் சூதாடும் இடமாக விளங்குகின்றன. கல்லூரிக் கழிப்பிடங்களில் பார்வை கூசுமளவுக்கு ஆபாச சொற்றொடர்களும், படங்களும் காணப்படுகின்றன. மாணவர்களின் பாலியல் கோளாறுகளின் வெளிப்பாடுகளை ஒவ்வொரு கல்லூரிக் கழிப்பறையும் சொல்கிறது. சென்னையின் புகழ்வாய்ந்த இசுலாமியக் கல்வி நிறுவனமான கல்லூரியின் கழிப்பறைச் சுவர்கள் அனைத்தும் ‘திருக்குறள்’ மயமாக உள்ளன. ஆம், வழக்கமான குறள்களில் சிறு சொற்றொடர்களை மாற்றித் திருக்குறளை ஆபாசப்படுத்தியிருக்கின்றனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் நுழையும் இடத்தில் இந்தப் பார்வை அவலம் மனமாசு ஏற்படுத்திக் கொண்டிருந்தும், குடிமையுணர்ச்சியுடைய மாணவர்களோ, நிர்வாகமோ, இதை அழிக்க முன்வரவில்லை.

திறந்த வெளியில் இயற்கை அழைப்பை ஆண்கள் நிறைவேற்றுவது போல, எளிதாகப் பெண்களால் முடியாது. சிறப்பாக நகரங்களில் வாழும் ஏழை மகளிர் நிலை பரிதாபத்திற் குரியதாகும். மகளிர் பொதுக் கழிப்பிடங்கள் பலவும், சமூக விரோதிகளின் வணிகக் கிடங்குகளாக மாறிவரும் நிலையில், வட சென்னையில் ஏழை மகளிர் பங்கு கொண்ட ஒரு கருத்தரங்கில் ஒரு பெண்மணி இவ்வாறு வருந்திக் கூறினார். “ஆதவன் விழித்துக் கொண்டால் ஆண்கள் விழித்துக் கொள்வார்கள். எனவே ஆதவன் விழிக்கும் முன் நாங்கள் எங்கள் காலைக் கடன்களை வெட்ட வெளியில் இருட்டுப் போர்வைக்குள் முடித்துக் கொள்ள வேண்டியவர்காளக இருக்கிறோம்.”

மதங்களும் குடிமை உணர்வும் :

மதத்தின் பெயரால் ஏதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு காரணத்திற்காக அறிமுகப் படுத்தப்பட்ட சில சடங்குகளும், பழக்கங்களும் இன்று குடிமைப் பண்புக்குப் பகையாகி வருகின்றன. போகிப் பண்டிகை நேரத்தில் சென்னை நகரத்தின் பலவிடங்களில் பழைய குப்பைகளுடன் வாகன டயர்கள் கொளுத்தப்படுகின்றன. இதனால் புகையும் சேர்ந்து சென்னை நகரமே மூடி மறைகிறது. அளவற்ற சூழலியல் கேடு விளைவிப்பதுடன், இப்புகையால் அனைத்துலக விமானங்கள் தரையிறங்கத் தடுமாறுகின்றன. இவ்வாண்டு இந்தப் புகைப்படலம் போகி நாளில் மிக அடந்து காணப்பட்டதன் விளைவாகப் “பிரிட்டிஷ் ஏர்வேஸ்” விமான நிறுவத்தினர் லண்டன் விமான நிலையத்தில் இவ்வாறு அறிவித்தனர். “சென்னைக்குச் செல்லும் விமானம் இன்று தரையிறங்க முடியாது. காரணம் இன்று போகி, நகர் முழுவதும் மக்கள் புகையைக் கிளப்பி விட்டுள்ளதால் விமானம் கீழிறங்க வழியில்லை. புகை மறைந்த பிறகே விமானம் கிளம்பும்.” உலகெங்கும் மக்கள் காற்று மண்டலம் மாசுபடுவதைப் பற்றிக் கவலைப்படும் நேரத்தில், தமிழ் மக்கள் நகரையே புகை சூழ வைத்த அநாகரிகத்தை இந்த லண்டன் அறிவிப்புப் பறை சாற்றிவிட்டது. நம் குடிமைப் பண்பைத் தலைகுனிய வைத்துவிட்டது.

நட்ட நடுவீதியில் பண்டிகை நாட்களில் சிறப்பாக ஆயுத பூசையின் போது பூசணிக் காய் உடைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆயுத பூசை நாளிலும் ஒவ்வொரு நகரத்திலும் வாகன விபத்துகளும் அதனால் காயங்களும், சில சமயம் இறப்பும் நிகழ்ந்து கொண்டேயிருக் கின்றன. தங்கள் வீடுகளும் கடைகளும் தூய்மையாக இருப்பதற்காக, அனைத்துக் குப்பைகளையும் தெருவில் போடும் மக்களே தமிழகமெங்கும் குடிமைப் பண்பைக் குழிதோண்டிப் புதைப்பவர் ஆவர்.

மதத்தின் பெயரால் ஒலிபெருக்கிகள் அலர வைக்கப்படுகின்றன. இதைக் குடிமையுணர்வுடன் தடுத்து நிறுத்துவது மதவிரோதச் செயலாகக் கருதப்படுகிறது. பொதுமக்களின் குடிமைப் பண்பை விட மதப்பண்பு மேலோங்கி நிற்கும் தமிழகத்தில் சத்தத்தின் சங்கடத்தைத் தவிர்க்க முடிவதில்லை.

சத்தத்தின் உச்சமாக விளங்குவது தீபாவளிக் காலம். குடிமை உணர்வு அறவே அற்றுப் போகும் காலமும் அதுவே. எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும், யாரும் பட்டாசு வெடிக்கலாம், என்ற அவிழ்த்துவிட்ட நிலையை வேறு எங்கும் காண முடியாது. காதைச் செவிடாக்கும் வெடிகளின் முழக்கமும், வெடித்துச் சிதறும் பட்டாசுகளின் குப்பைச் சிதறலும், சுற்றுப்புறத்தை மாசாக்கும் புகையும், உயிர் பறிக்கும் ஆபத்தும், விழிப்புள்ள குடி மக்களால் கண்டு கொள்ளப்படாமல் மதவிழா என்ற போர்வையால் கண்மூடப்படுகின்றன;

வீடுகளில் தொற்றுநோய் பரப்பும் உயிரினங்களை வளரவிட்டு தமிழ்ச் சமூகத்தின் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கவும் சில மத நம்பிக்கைகளே காரணமாகின்றன. “டைப்பாய்டு” போன்ற கொடிய தொற்று நோயக்கிருமிகளைச் சுமக்கும் கரப்பான் பூச்சிகளை ஒழிக்க பாமர மக்கள் முன்வருவதில்லை. கரப்பான் இருக்கும் இடம் இலட்சுமி இருக்கும் இடம் என நம்பப்படுகிறது. உணவில் விழுந்து நம் உயிரைப் பறிக்கும் பல்லிக்கும் காஞ்சிபுரத்தில் கோயில் உள்ளது. ‘ராபிஸ்’ என்ற உயிர்கொல்லி நோய்க்குக் காரணமான தெரு நாய்களைக் கவலையற்று வீதிகளில் நடமாட விடுகின்றனர். நாய்க்கு, திருச்சி அருகே பைரவன் கோயில் கட்டியுள்ளனர். “கோமாதா என் குலமாதா” என்று பசுமாட்டை வழிபடும் மக்கள் பசுவின் சாணத்தை வீட்டில் பூசியும், மூத்திரத்தைக் குடித்தும் வருவது மதம் வழி வந்த அறியாமையாகும். பசுவின் சாணத்திலும், மூத்திரத்திலும் உயிருக்கு உலை வைக்கும் டிட்டேனஸ் கிருமிகள் (Clotidius Titanus) மலிந்துள்ளன. இப்படி மத நம்பிக்கைகள் பலவும் குடிமைப் பண்பிற்குக் களங்கம் விளைவித்துள்ளன.

சுவரொட்டிக் கலாச்சாரமும் குடிமைப் பண்பும்:

தமிழக வீதியெங்கும் கேட்பாரற்றுக் காணப்படும் சுவரோட்டிகள் ஒட்டப்படும் இடங்களுக்குத் தூய்மைக்கேட்டினை ஏற்படுத்துவதுடன், வழிபோக்கர் கண்களுக்கும் உள்ளத்திற்கும் மாசு விளைவிக்கின்றன. சுவரொட்டித் தொடர்பாக நிகழும் சில நிகழ்வுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஒரு குடிமை உணர்வுடன் அவ்வப்பொழுது படம் பிடித்துக் காட்டி செய்தி வெளியிட்டு வருகிறது. எடுத்துக் காட்டிற்கு 1992 இல் மட்டும் இவ்விதழ் ஒளிப்படத்துடன் வெளியிட்ட சில நிகழ்வுகளைக் காண்போம் :-

  1. மதுரை நகரெங்கும் ஒட்டப்பட்ட பெண்களை இழிவுப்படுத்தும் சுவரொட்டிகளை அகற்ற வேண்டி குடிமை உணர்வுடையோர் சிலர் கொட்டகை உரிமையாளரிடம் வேண்டினர். காவல் துறையிடம் முறையிட்டனர்; அதிகாரிகளை வற்புறுத்தினர்; மக்களிடம் இதுபற்றிய விழிப்பை ஏற்படுத்த முயன்றனர். எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. எனவே லேடிடோக் கல்லூரி மாணவிகளே நேரடி நடவடிக்கையில் இறங்கினர். ஏணிகளைச் சுவரில் சார்த்தி நீண்டதூரிகைகளால் இளம்பெண்களே இந்த ஆபாச உருவங்களைக் கறுப்பாக்கி அழிந்தனர். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 16-3-92).
  2. கோவை நகரில் சுவரொட்டி ஓட்டுவோர் சுவர்களை மட்டுமின்றி, கண்ணில் பட்ட இடமெல்லாம் தமதாக்கி விடுகின்றனர். பொதுத் தொலைபேசி சிற்றறைகளைக் கூட அவர்கள் விட்டு வைப்பதில்லை. இதனால் பொதுத் தொலை பேசியகங்களை மக்கள் இனங்காண முடியாமல் திணறுகின்றனர். இவை அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள் என்பதால், பாதிக்கப்படுவோர் அவற்றை அப்புறப்படுத்தவும் அஞ்சு கின்றனர். (இ. எக்ஸ்பிரஸ் 11-5-92).
  3. சென்னை மெரினா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் காணப்படும் சிலைகளில் மிகச் சிறந்த தாகக் கருதப்படுவது உழைப்பாளர் சிலையாகும். உன்னதமான இந்த நினைவுச் சின்னத்தைத் தமிழ் மக்கள் எவ்வாறு மதிக்கின்றனர்? எல்லா வகை சுவரொட்டிகளும் அடர்த்தியாகச் சிலையின் பீடப் பரப்பெங்கும் ஒட்டப்பட்டுள்ளன. சுவரொட்டி யொன்றைக் கிழித்தால் உள்ளே இன்னொன்று தோன்றுகிறது. கிழிக்கக் கிழிக்க ஒன்றன் மேல் ஒன்றாக ஆறு அடுக்கு வரை சுவரொட்டிகள் இங்கு ஒட்டப்பட்டுள்ளன. (இ. எக்ஸ்பிரஸ். 14-1-92)

ஆபாச சுவரொட்டிகளைத் தடுத்து அரசு அவ்வப்பொழுது போடும் சட்டங்கள் எவையும் இன்று வரை நடைமுறைப்படுத்தப் படாமலேயே உள்ளன. குடிமை உணர்ச்சியுடைய அமைப்புகள் மட்டும் அவ்வப்பொழுது சுவரொட்டிகளைக் கண்டித்தும் அகற்றியும் வருகின்றன.

சுவரொட்டி கலாச்சாரத்தின் உச்ச கட்டமாக அ.தி.மு.க. ஆட்சியில் விஸ்வரூபம் எடுத்ததுதான் ‘கட் அவுட்’ கலாச்சாரமாகும். போக்குவரத்திற்கு இடையூறாகவும், தலையில் விழும் அபாயத்துடனும், பூத வடிவில் நிறுத்தப்படும் அரசியல் பிரமுகர்களின் வெட்டுருக்கள் அகற்றப்பட வேண்டும் என்ற குடிமை உணர்வு நல்லோர் வற்புறுத்தியும் ஆட்சி அகற்றப்படும் வரை இந்தக் கலாச்சாரம் தொடரவே செய்தது. கடவுளர் வடிவிலேயே முதலமைச்சருக்கு ‘கட் அவுட்’ வைக்குமளவுக்கு இப்போக்குத் தொடர்ந்தது. ஆட்சியின் மேல் கசப்பு ஏற்படும் ஆட்சியாளர்கள் தோல் வியுறுவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாயிற்று. குடிமை உணர்ச்சியை மதிக்காவிடின் அப்புறப்படுத்தப்படுவோம் என்ற அச்ச உணர்வை அடுத்த ஆட்சிக்கு இந்த கட் அவுட் கலாச்சாரம் உணர்த்தியதன் விளைவாகவே புதிய முதலமைச்சர் தமக்குக் ‘கட் அவுட்’ வைத்தவர்கள் மேலேயே நடவடிக்கை எடுத்தார்.

குடிமைப் பண்புகளும் சாலைகளும் :

தம் இல்லம் அல்லது கடை தூய்மையாக இருக்க வேண்டும், என்பதற்காக வீட்டுக்கு வெளியே குப்பையை வீசும் போக்கு, பெரும் பான்மையான குடிமக்களிடம் காணப் படுகிறது. இதன் விளைவாகச் சாலைகளும், தெருக்களும் பெரிய குப்பைத் தொட்டிகளாக விளங்குகின்றன. எனவே எவ்வளவு ஆடம்பரமும் தூய்மையும் மிளிரும் விட்டில் வாழும் செல்வனாயினும், அவன் சாலைக்கு வரும்போது ஏழையாகிறான். எல்லோருக்கும் பொதுவானதை தனிக் கவனத்துடன் எல்லோரும் காக்க வேண்டும் என்ற குடிமை உணர்வை புறக்கணித்தமையால், எல்லோரும் துன்புறுகின்றனர். குப்பைத் தொட்டி, கழிப்பறை, காட்டாறு, திறந்த சாக்கடை, குடியிருப்பு, சந்தை, வழிபாடுத்தலம், குளியல் அறை, அரசியல் அரங்கம் போன்றவற்றிற்கு மறு பெயர் சாலைகள் ஆகும்.

தெருக்கள் மக்கள் நடமாட்டத்திற்கும், போக்குவரத்திற்கும் மேற்கண்ட பயன் பாட்டிற்கும் மட்டுமன்றி விலங்குகளின் வாழ்விடமாகவும் விளங்குகின்றன. சென்னை வீதிக்கு முதல் முறையாக வந்த ஒரு ஜப்பானிய சகோதரி வியப்புடன் “திறந்த வெளி மிருகக்காட்சிச் சாலையைத் தெருவிலேயே வைத்துவிட்டீர்கள்” என்று கூறியது மிகையில்லை. ஆடுகள், மாடுகள், எருமைகள், குதிரைகள், நாய்கள், பன்றிகள், கழுதைகள், பூனைகள், குரங்குகள், கீரிப்பிள்ளை ஆகிய விலங்கினங்கள் எந்தத் தடையுமின்றி சாலைகளின் குறுக்கும் நெடுக்கும் உலா வருவதைக் காண முடிகிறது. விலங்குகளை அப்புறப்படுத்துவதாக அரசியலாளர்கள் அவ்வப்பொழுது அறிவிக்கிறார்கள். ஆனால் இன்று வரை நடைமுறைப்படுத்த முடிய வில்லை.

குடிமை உணர்வுடையோருக்குக் கவலை தரும் மற்றொரு நிகழ்வு இடை விடாமல் சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்கள் ஆகும். கழிவுநீர், குடிநீர், மின்சாரம், தொலைபேசி ஆகியன சாலையோடு தொடர்புடையன. மாநகராட்சிக்கு அல்லது நகராட்சிக்கு சொந்தமான சாலைகளை இத்துறையினர் தோண்டுகின்றனர். பொது மக்களுக்கு இடையூறாக இவை இருக்குமென்ற உணர்வு இத்துறையினர்க்கு இருப்பதில்லை. தோண்டிய பள்ளத்தை மூடும் பொறுப்பு மாநகராட்சி-நகராட்சி அமைப்புகளைச் சார்ந்தது. ஆமை வேகத்திலேயே இவை பள்ளத்தை மூடியும் பழைய நிலைக்குச் சாலைகளைக் கொண்டு வருவதில்லை.

தோண்டிய சாலைப் பள்ளங்கள், மூடப்படாத சாக்கடைகள் இவற்றால் பொதுமக்களுக்கு நேரும் இன்னல்களையும் ஆபத்துகளையும் பற்றிய செய்திகளையும் படங்களையும் குடிமையுணர்வுடன் சில நாளிதழ்கள் வெளியிட்டு வருகின்றன. மூடப்படாத சாக்கடைக்கு ஒரு சிறுவன் பலியான சோகச் செய்தியை 23-1-92 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு கவலையுடன் கீழ்க்கண்டவாறு வெளியிட்டுள்ளது.

“கே. மோகன்ராஜ் என்பவர் பல்லவன் போக்குவரத்தில் நடத்துநராகப் பணி யாற்றுகிறார். அவர் 5 வயது மகன் யு.கே.ஜி. வகுப்பில் படிக்கிறான். பள்ளியிலிருந்து தாயுடன், சென்னை கே.கே. நகரிலுள்ள டாக்டர் நடேசன் சாலையில் சிறுவன் நடந்து வரும்போது, எதிர்பாராதபடி காணப்பட்ட திறந்த சாக்கடையில் வீழ்ந்து விட்டான். செய்வதறியாது தாய் கதறியபோது ஒரு சைக்கிள்காரர் ஓடிவந்து 4 அடி பள்ளத்தில் இறங்கி சிறுவனைப் பிணமாகவே மீட்க முடிந்தது.”

இதே போல தொலைபேசித் துறை தோண்டிய வாகன விழுங்கிப் பள்ளம் பற்றிய செய்திகளையும், ஒளிப்படத்தையும் 29-1-92 இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு இவ்வாறு வெளியிட்டது.

“சென்னையில் உள்ள பரப்பரப்பான சாலைகளில் ஒன்று நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை, இங்குத் தொலைபேசித் துறை தோண்டிய நீண்ட பெரிய பள்ளத்தைப் பாருங்கள். பள்ளத்திற்குத் தடுப்பு இல்லை. எச்சரிக்கை அறிவிப்பு இல்லை. இரவில் வரு வோரை எச்சரிக்கும் பிரதிபலிப்புத் தகடுகள் இல்லை. விபத்தை வலிந்து விளைவிக்கக் கூடிய மிகச்சரியான இடம் இது.”

தமிழகச் சாலைப் போக்குவரத்துப் பலவகை வாகனங்களையும் உட்கொண்டது. நடந்து செல்வோர், மிதிவண்டிகள், இரு சக்கர மோட்டார் வண்டிகள், ஆட்டோக்கள், கார்கள், பேருந்துகள், சரக்குந்துகள் இவற்றோடு சாலையில் மாட்டு வண்டிகளும் இடம் பிடிக்கின்றன. விலங்குகள், மனிதர்கள் எந்த நேரமும் சாலையில் குறுக்கிடும் அபாயமும் இருந்துகொண்டேயிருக்கிறது. சாலையைப் பயன்படுத்துவோரிடம் குடிமை உணர்வு மங்கியிருப்பதால், சாலை விதிகள் சர்வசாதாரணமாக மீறப்படுவதை எங்கும் அன்றாடம் காணமுடியும். மோட்டார் வாகங்களுக்கு உரிமம் வழங்குவதில் காணப்படும் அளவற்ற கையூட்டு முறை காரணமாக, யாரும் எளிதில் உரிமம் வாங்கிவிட முடிகிறது. மனித உயிர் சம்பந்தப்பட்ட இந்தத் துறையில் காட்டப்படும் அசட்டையும், கையூட்டு முறையும் ஒரு திரைப்படத்திற்குக் கருவாகுமளவுக்குப் பெரிய சமூகத் தீமையாக வளர்ந்துள்ளது. ‘இந்தியன்’ என்ற தமிழ்திரைப்படம் போக்குவரத்துத் துறையின் கொடிய ஊழலையும், விளைவுகளையும் தத்ரூபமாகச் சித்தரிகிறது. போக்குவரத்துக் குற்றங்களைத் தட்டிக் கேட்க வேண்டியவர்களே தவறு செய்யும்போது பாமர மக்களிடம் குடிமை உணர்ச்சி மங்குவதில் வியப்பில்லை. “போலீஸுக்குச் சட்டமில்லையா?” என்ற தலைப்பில் ஒளிப்படத்துடன், சுட்டி மே 83 இதழில் வந்துள்ள கீழ்கண்ட செய்தி மங்கி வரும் குடிமை உணர்ச்சியை மெய்ப்பிக்கும்.

“இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் புகைப்படத் துறையைச் சேர்ந்த ஹாரி மில்லர் எடுத்து வெளியிட்ட நிழற்படம் இது. போக்குவரத்துக் குற்றங்களைப் பிடிப்பதற் காகச் சமீபத்தில் அமைக்கப்பட்டது நடமாடும் நீதிமன்றம். நெடுஞ்சாலைகளின் நடுவே போடப்படும் மஞ்சள் கோட்டை மீறிச் செல்லும் வாகனங்களுக்கு இந்த நீதிமன்றம் தண்டனை வழங்கும். போலீஸ் ஊர்தியே நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் மஞ்சள் கோட்டைக் கேட்பாரற்றுத் தாண்டி, திரும்பிச் செல்வதை மில்லரின் காமிரா படம் எடுத்துவிட்டது. (ஊர்தி எண் TMO 189)”

சுட்டி அவரிடம் கேட்ட கேள்வி : மஞ்சள் கோட்டை போலீஸ் ஊர்தி தாண்டுவதைப் படமெடுத்து வெட்டவெளிச்சமாக்கினீர்களே! அதன் எதிரொலி என்ன?

ஹாரி மில்லர் : எதுவும் இல்லை. நான் பலமுறை போலீசார் தாங்கள் போடும் போக்குவரத்துச் சட்டங்களைத் தாங்களே மீறுவதைப் படம்பிடித்து எழுதியிருக்கிறேன். இப்போது போலீஸ் ஊர்தியே இப்படி சட்டத்தை மீறுவது எல்லாவற்றையும் விட மோசமானது. நிறைய பணம் செலவு செய்து, மஞ்சள் பெயின்ட் வாங்கிக் கோடு போடுகிறார்கள். ஆனால் அவர்களே தங்கள் சட்டங்களை மீறும்போது, பாவம் படிக்காத லாரி டிரைவரோ, டாக்சி டிரைவரோ இவர்கள் சட்டத்தைப் பின்பற்றும்படி எப்படி இவர்கள் எதிர்பார்க்க முடியும்? கையும் களவுமாகப் புகைப்படம் பிடித்துக் காட்டியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அந்த இடத்திலேயே மற்றவர்களுக்குப் பாடம் புகட்டுவது போல தவறு செய்தவருக்குச் சீட்டுக் கிழித்திருக்க வேண்டும். என்னிடம் ஒரு நூலகம் வைக்குமளவுக்கு இதுபோன்ற புகைப்படங்கள் உள்ளன.

இந்தப் புகைப்படமும் கட்டுரையும் வெளியானவுடன் “இவ்வளவு மோசமாக நடந்திருக்கிறதே இதைப் பார்த்தும் போலீஸ் தலைமை என்னதான் செய்து கொண்டிருக்கிறது? என்று ஒருவர் கூட கடிதம் எழுதவில்லை. மக்களின் மந்தத்தன்மை அந்த அளவுக்கு இருக்கிறது. மக்கள் அசட்டையாக இருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் கவலைப் படுவதில்லை”.

சாலைக்குக் குறுக்கே ரயில்பாதை குறுக்கிடும் இடங்களில் ரயில்வே கதவுகள் மூடப்பட்டிருப்பின், அவை திறக்கும் வரை மக்கள் காத்திருக்கத் தயாரில்லை. கிட்டத்தட்ட எல்லா ரயில்வே கதவுகளின் கீழ்ப்பகுதியும் உடைக்கப்பட்ட நிலையை ஏறத்தாழ எல்லா ஊர்களிலும் பார்க்க முடிகிறது. தங்கள் பாதுகாப்பிற்காகவே கதவுகள் மூடப் படுகின்றன என்ற உணர்வைப் புரிந்து கொள்ளாதவர்களே பலர்.

சூழலில் கேடுகளும் குடிமை உணர்ச்சியும் :

பஞ்ச பூதங்களில் நெருப்பைத் தவிர ஏனைய நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றை உலக மாந்தர் அறிந்தோ அறியாமலோ மாசுப்படுத்தி வருகின்றனர். அப்படி மாசுபடுத்துவதற்குக் குற்ற உணர்ச்சி அடைகின்றனர். எதிர்ப்பும் வலுத்து வருகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள் தீவிர மடைந்து வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை இயற்கையை மாசுபடுத்து கிறோம் என்ற உணர்வு கூட இன்னும் பாமர மக்களுக்கு ஏற்படத் துவங்கவில்லை. மாசுபடுத்துவோர்க்குத் தடைச்சட்டங்களும் நடைமுறையில் இல்லை.

நில மாசு :

நகரங்களிலிருந்து திரட்டப்படும் எல்லா வகை குப்பைகளும் நகரை ஒட்டியுள்ள அல்லது நகருக்குள் காணப்படும் பள்ளங்களில் திணிக்ககப்படுகின்றன. மக்கிப்போகின்ற குப்பைகள் தவிர பிற அழியாத ஆபத்தான நச்சுப் பொருட்கள் மண்ணிற்கு நிரந்தர கேடு விளைவிக்கின்றன. தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் நிலையங்களும் வெளி யேற்றும் கழிவுகள் பல இடங்களில் மண்ணிற்குள் புக அனுமதிக்கப்படுகின்றன. நிலத்தடி நீரை இவை நச்சாக்குகின்றன. வடக்குத் தமிழ் நாட்டில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், மேல்விசாரம் பகுதிகளில் இந்நிலை மிகுந்துள்ளது.

நீர் மாசு :

வள்ளலாரும், வள்ளல் பச்சையப்பா முதலியாரும் ஒரு காலத்தில் குளித்து மகிழ்ந்த தூய கூவம் நதி சென்னைக்கு இன்று தீரா அவமானச் சின்னமாகிவிட்டது. காரணம், நகரத்துச் சாக்கடைகள் அனைத்தும் இந் நதியில் கலக்கிவிடப்பட்டு, அது சாக்கடை நதியாகிவிட்டது. அடையாறு, பாலாறு போன்ற நதிகளும் கழிவுகளை அளவுக் கதிகமாகச் சுமந்து சாக்கடைகளாவே விளங்குகின்றன. திருச்சி நகரத்தில் ஓடும் அகண்ட காவிரியைக் கூட சில இடங்களில் அளவற்ற கழிவுகளால் மக்கள் கலங்கப் படுத்தியுள்ளனர். திருச்சியில் உள்ள அம்மா மண்டபம் படித்துறை மக்கள் குளிக்கும் தகுதியை இழந்துவிட்டது.

சோழ நாட்டுத் தெளிந்த வாய்க்கால்கள் சாக்கடைகளாகி வருகின்றன. அண்மைய எடுத்துக்காட்டு:

“திருச்சி இராமகிருஷ்ணா தியேட்டர் பின்புறம் முக்கிய சாலையையொட்டி ஓடும் வாய்க்காலின் பெயர், ‘மானம் கெட்ட வாய்க்கால்’. முன்பெல்லாம் இதில் தெளிந்த தண்ணீர் ஓடிய காலத்தில் அதிகாலையில் இந்த வாய்க்கால் ஓரம் காலைக்கடன்களை முடித்துவிட்டு இதிலேயே இப்பகுதி மக்கள் குளித்து வந்தனராம். இதனால் இப்படியொரு பெயர் ஏற்பட்டதாம். இப்போது மக்கள் பெருக்கத்தால் இந்தக் கால்வாயில் கழிவுநீர் கலந்து கழிவு நீர் ஓடையாக மாறிவிட்டது”. தேவி – வார இதழ் 22-1-97.

கடலுக்குள் கழிவுளைச் செலுத்தி, கடல் வாழ் உயிரினங்களை மாய்த்து வரும் போக்கு ஒருபுறமிருக்க, கடலின் கரைகளையே பதம் பார்த்துக் கடல் அரிப்புக்கு வழிகோலும் கொடுஞ்செயல்களும் ஒருபுறம் தமிழகத்தில் நடைபெறகின்றன. 25-1-92 “இந்தியன் எக்ஸ்பிரஸ்”. வெளிப்படுத்திய கடல்மண் திருட்டுப் பற்றிய கீழ்க்கண்ட செய்தி குடிமை உணர்ச்சி இல்லாதோரைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தக் கூடும்.

“சென்னையை அடுத்த ஈஞ்சம் பாக்கத்தில் கடல் அலைகளை ஒட்டிய ஈரமணற் பரப்பில் லாரிகள் மணலைச் சுரண்டி எடுத்தவண்ணம் உள்ளன. 54 லட்சம் டன் கடல் மண் 1-1,2 மாதங்களில் எடுக்கப்பட்டதன் விளைவாக 200 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் உள்ள பெரும் பள்ளம் அங்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புயல் நேரத்தில் அப்பகுதிக்கு ஆபத்து ஏற்படக் கூடும் 24 மணி நேரமும் நிகழும் இம்மணல் திருட்டுக்கு உள்ளூர் மீனவர்கள் சிலரும் உடந்தையாக உள்ளனர். இவ்வாறு நாள்தோறும் 30 முதல் 40 லாரி மணல் வெளியாகிறது. ஒரு லாரி அளவு கடல் மண்ணின் விலை ரூ.90 ஆகிறது. பாதிக் கடல் மண்ணோடு ஆற்று மணலையும் கலப்படம் செய்து இவர்கள் ஒரு லாரி மணலை ரூ.700க்கு விற்பனை செய்கிறார்கள்.”

காற்று மாசு:

நகரெங்கும் மோட்டார் வானகங்கள் விடும் புகை எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தாலும், அதற்குத் தீவிரமான கட்டுப்பாடுகள் ஏதும் நடைமுறைப் படுத்தவில்லை. “கனவுக் காட்சி” போல புகை மண்டலத்தை எழுப்பிச் செல்லும் மோட்டார் வாகனம் நூற்றுக்கணக்கான குடிமக்களின் மூச்சு மண்டலத்தைக் குலைத்து வருவதைத் தடுத்து நிறுத்தாமல் போக்குவரத்துக் காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

சென்னை அப்பல்லோ மருத்துவ மனையின் மூச்சு மருத்துவ ஆலோசகராக விளங்கும் மார்பு நோய் நிபுணர் ஆர்.பி. இளங்கோ அவர்களிடம் உரையாடியபோது,

“மாசு கட்டுப்பாட்டு வாரியம் இறந்துவிட்டது” என்றார். மேலும், “சென்னை நகரில் மூச்சு தொடர்பான நோய்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதற்கு மாசாகி வரும் காற்றே காரணம். காற்றில் கலக்கும் நச்சுசுக்காற்றின் அளவு, அதன் வீரியம், மனிதர் மேல் ஏற்படும் பாதிப்புகள் இவை பற்றி இனிமேல் தான் முழுமையாக ஆய வேண்டியிருக்கிறது. குடி தண்ணீர் மாசானால், கொதிக்க வைத்துக் குடிக்கலாம். காற்று மாசானால் மக்கள் தப்ப வழியே இல்லை. காற்று மாசு பற்றிய விழிப்பைத் தொண்டு நிறுவனங்கள் துணையோடு விரைவில் ஏற்படுத்த விருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.

உலகெங்கும் புகை பிடிப்போர் எண்ணிக்கை குறையும்போது தமிழகத்தில் மிகுந்து வருவது வருந்துதற்குரியதாகும். குடிமை உணர்ச்சியின்றிப் பொதுவிடங்களில் புகை பிடித்து, சுற்றியிருப் போரையும் மௌனப் புகைஞர்களாகத் தண்டித்து வரும் போக்கு இங்குக் குறையவில்லை. புகை பிடித்தல் இன்னும் இங்க நாகரிகப் பழக்கமாகவே கருதப்படுகிறது. மேலை நாடுகளில் புகை பிடிப்பவரைத் தொழு நோயாளியாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கோ திரைப்படக் கதாநாயகன் சிகரெட்டுக் குடிப்பதை உயர்நாகரிகமாக, சித்தரித்துக் காட்டுகிறார்கள். சிகரெட்டுக் குடிக்கும் கதாநாயகனின் பாவனைகள் இளைஞர்கள் பலரைப் புதிய புகைஞர்களாக்குகின்றன. அண்மையில் மிக வெற்றிகரமாக ஓடிய “காதல் கோட்டை” படத்தில் நாயகன் பல கோணத்தில் புகைவிட்டுக் கொண்டிருக்கும் காட்சிகள் இதற்குச் சான்று.

குடிமைப் பண்பைக் குலைக்கும் பிற செயல்கள் :

அன்றாட வாழ்வில் சிற்றூராயினும், பேரூராயினும், தமிழ் மக்கள் மத்தியிலே காணப்படும் சில பொறுப்பற்ற செயல்கள், குடிமைப் பண்புக்குப் புறம்பாக விளங்குகின்றன. அவை வருமாறு.

எச்சில் துப்பல் :

“இங்கே எச்சில் துப்பு” என்ற இடத்தை விட்டு மற்ற பொதுவிடங்களில் எச்சிலும், வெற்றிலை உமிழ்வையும் துப்பும் பழக்கம் படித்தோரிடமும் உள்ளது. எச்சில் கறை இல்லாத இரயில் நிலையமோ, பேருந்து நிலையமோ, அலுவலங்களோ, அலுவலக படிக்கட்டுகளோ காண்பது தமிழகத்தில் அரிது. எச்சில் துப்புவதைத் தவிர்க்க இதனால் சுவர்களில் கடவுள், உருவத்தைச் சலவைக் கல்லில் பதிக்கிறார்கள்.

வரிசை மீறல் :

“கியூ” வரிசையில் நின்று முறையாக பொறுமையாகச் செயல்படுவதை விட்டு, வலிமை மிக்கவர் முதலில் முட்டிமோதி சாதித்துக் கொள்வதைப் பலவிடங்களிலும் பார்க்கலாம். பெண்கள், முதியோர் ஆகிய யோரை முட்டி மோதிவிட்டுப் பேருந்தில் இப்படி ஏறும் இளைஞர்களை அன்றாடம் காணலாம். “க்யூ” வரிசை கட்டாயமாக்கப்படும் இடங்களில், திருட்டுத்தனமாகவோ, தந்திர மாகவோ நடுவில் நுழைவதை ஒரு சாதனையாக நினைப்பவர்கள் இருக் கிறார்கள்.

குழாயை மூடாமல் விடல் :

பொதுவிடங்களில் குழாயைத் திறந்து தண்ணீரைப் பயன்படுத்திய பின், பலரும் குழாயை மூடுவதில்லை. எனவே அழுத்தினால் மட்டும் நீர் வருவதும், விட்டால் நின்று விடுவதுமான அமைப்புடைய குழாய்களையே இரயில் நிலையங்கள், உணவு விடுதிகள் போன்ற இடங்களில் பொருத்துகிறார்கள். தண்ணீர் குடிக்கும் “டம்ளரைக்” கூட மக்கள் திருடிச் சென்றுவிடுவதால், டம்ளரைக் கூட சங்கிலியால் பிணைத்துப் பாதுகாக்கும் நிலை பலவிடங்களில் ஏற்பட்டுள்ளது.

முன் பதிவை மதியாமை :

வரிசையில் கால்கடுக்க நின்று முன்பதிவு பெற்று இருக்கையைப் பெற்றாலும் இரயில் வண்டியில் நம் இடம் நமக்குப் பாதுகாப்பாக இருப்பதில்லை. முன்பதிவு செய்யாமல் நுழையும் பலர் பதிவு செய்து உட்கார்ந்திருப்போரை நெருக்கிக் கொண்டு உரிமையுடன் உட்காருகிறார்கள். கடைசி வரை பயணத்தைக் கசப்பாக்குகிறார்கள்.

சென்னையிலிருந்து காலையில் கிளம்பும் கோவை எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு வண்டிகளில் அன்றாடம் இந்த அத்துமீறலைக் காணலாம். இரயில்வே நிர்வாகம் முன்பதிவு செய்யும் குடிமக்களின் உரிமை பறிபோவது பற்றி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

பொதுத் தொலைபேசி அவலம் :

காசு போட்டுப் பேசும் தொலை பேசிகள் பலவும் குடிமையுணர்ச்சியற்ற மக்களின் தவறான செயல்பாடுகளால் தமிழகத்தில் செயல் இழந்து விட்டன. ஆளில்லா தானியங்கி பேசிகளை இயக்க முடியா நிலைக்குத் தொலைபேசித் துறையே வந்துவிட்டது. வானொலி நேர்காணல் ஒன்றில் தொலைபேசி மேலாளர் இதனை இவ்வாறு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

“கருவிகளில் உள்ள தாமிரத்திற்காக அதை உடைக்கிறார்கள். நாணயங்களுக்குப் பதிலாக வாசர்களையும் உலோகத் துண்டு துச்சாணிகளையும் போடுகிறார்கள். எங்களால் ‘பூத்’களை நிர்வகிக்க முடியவில்லை. (“சுட்டி” 15 மே 82)

சென்னை விமான நிலையங்களிலும், இரயில் நிலையங்களிலும் காசு போட்டுப் பேசும் தொலைபேசிகள் பெரும்பாலனவை இயங்குவதேயில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

குடிமை உணர்வுகள் தமிழகத்தில் அறவே இல்லை என்ற குற்றச்சாட்டைப் பல தனி மனிதர்களும், அமைப்புகளும் பொய்யாக்கி வருகின்றனர்.

குடிமைப் பண்பை வாழ்வு நெறியாக் கொண்டு 19-11-1988 அன்று சென்னையில் துவக்கப்பட்டது தான் “எக்ஸ்நோரா” என்ற இயக்கம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளராகப் பணியாற்றிய எம்.பி. நிர்மல் என்பார் இந்த நிறுவனத்தைச் சரியான தொலைநோக்குடனும், திட்டங்களுடன் துவங்கினார். துவங்கிய சில ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் மாவட்டங்களிலும், இந்தியாவின் மாநிலங்களிலும், இந்த அமைப்பின் கிளைகள் பரவத் தொடங்கின. எட்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் உலகின் பல நாடுகளிலும் இவ்வியக்கம் தன் அலைகளைப் பரப்பியுள்ளது.

“உலகத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொண்டு நிறுவனமாக எக்ஸ்நோரா தான் இருக்க முடியும்” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் (26-4-92) இதழில் எழுதியுள்ளது. அண்மையில் உலகஅவை ஒன்றில் ஜெர்மானியக் குடியரசுத் தலைவர், “எக்ஸ்நோரா தான் வளரும் நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகச் சிற்றூராம் குன்றத்தூரில் பிறந்த ஒரு தமிழரால் தமிழ்நாட்டில் தோற்று விக்கப்பட்ட இந்த குடிமை இயக்கம் இன்று சாதி, மன, இன, மொழி, நாட்டு எல்லைகளைக் கடந்து ஏறத்தாழ 28,000 தொண்டர்களுடன் வலிமையோடு குடிமைப் பண்புகளை எல்லாத் திசைகளிலும் விதைத்து வருவது தமிழ் மண்ணிற்குக் கிடைத்த பெருமையாகும். இவ்வியக்கத்தினர் குடிமை உணர்ச்சியை மலரச் செய்ய சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.

கோவலத்தில் வாலிபர் சாதனை :

சென்னை மாமல்லபுரம் பாதையில் அமைந்த சுற்றுலா கிராமம் கோவலம். “இங்கு எங்குத் தேடினும் ஒரு பொதுக் கழிப்பறை கூட இல்லையே, கடல் மணலில் மக்கள் காலைக் கடன்களை முடிக்க வேண்டியிருக்கிறதே” என்று ஒருமுறை எக்ஸ்நோரா தலைவர் நிர்மல் வருந்திக் கூறியதை மாற்றி அமைக்க 25 வயது இளைஞர் நாராயணன் முன்வந்தார். படிக்காத கிராமவாசியான இவர் எக்ஸ்நோராவின் தூய்மைக் கொள்கைகளால் விடுதியான “பிஷர்மெனஸ் கோவ்” நிர்வாகத்தை அணுகி உதவி நாடினார். சுற்றுலாத்துறைக்கு விண்ணப்பித்தார். யாரும் இவர் குரலுக்குத் துளியும் செவி சாய்க்கவில்லை. மனந்தளராத இந்த இளைஞர், ஊர்த் திருவிழாவில் ஒலி பெருக்கியில் பொதுமக்களிடம், ஊரின் கழிப்பறைத் தேவையை எடுத்துச் சொல்லி, பணம் தர வேண்டா, செங்கல், மணல், சிமெண்ட் தாருங்கள் என்று மனமிரங்கிப் பேசினார். உடனே பலன் கிடைத்தது. கட்டடப்பொருட்கள் சில நாட்களில் குவிந்தன. அழகான கழிப்பறைகளை ஊருக்குக் கட்டிக் கொடுத்தார். ஊர் தூய்மையானது. இதைக் கண்ட ஊராட்சி ஒன்றியத் தலைவர் அவரை அணுகிக் கேட்டார். “தம்பி! ஊருக்குப் பஸ் ஸ்டாண்டு இல்லை. இதே மாதிரி கட்டிக் கொடு”.

அமெரிக்கரைக் கவர்ந்த குடிசைப்பகுதி :

சென்னை சைதாப்பேட்டையில் உள்ளது வெங்கடாபுரம் என்ற குடிசைப்பகுதி. இது குப்பைக் கூளங்கள், கழிவுப் பொருட்கள் இவற்றின் அணிவகுப்பு நிறைந்த பகுதி. அரசியல்வாதிகளின் அடியாட்கள் தம் கட்டுப்பாட்டில், ஓட்டுப்போடும் மக்களை இங்குத் திசை மாறிவிடாமல் அமுக்கிப் பாதுகாத்து வந்தார்கள். இங்கே தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் சுரேஷ் என்ற இளைஞர் எக்ஸ்நோரா கிளையைத் தோற்றுவித்தார். மக்களிடம் தூய்மையைப் பற்றிப் பேச முயன்றபோது அடியாட்களிடமிருந்து கத்திக்குத்து விழுந்தது. அவர் அஞ்சாமல் இளைஞர்களை ஒன்று திரட்டி, தெருக்களைத் தூய்மையாக்கி மக்கள் சுற்றுபுற எழிலை விரும்பி பராமரிப்பதில் இன்பம் அடைய பயிற்சியளித்தார். அவர்கள் பொருளாதாரம் உயர சிறு திட்டங்கள் தீட்டினார். தூய்மையான தெருக்களில் ஈமொய்க்காத பண்டங்கள் விரைவில் விற்பனையாயின.

எக்ஸ்நோரா அமைப்புகளைப் பார்வையிட வந்த அமெரிக்க ஐக்கிய நாட்டுத் தூதுவர் ஃபராங்கி ஜி. விஸ்னர் வெங்கடபுரம் வீதிகளில் வலம் வந்தார். பெட்டிக் கடையாயினும் தூய்மையாக விளங்கிய கடையொன்றில் மசால் வடையை விரும்பி வாங்கிச் சுவைத்தார். தன் இனிய அனுபவத்தை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து எக்ஸ் நோராவிற்கு எழுதிய மடலில் “அமெரிக்க அரசும், அமெரிக்க மக்களும் இந்தச் செயல் ஊக்கம் மிக்க இயக்கத்துடன் இணைந்து செயல்படும் பேறு பெறுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

பள்ளமும் மேடும் இணைந்தன :

சென்னை திருவான்மியூர் பகுதியில் மேட்டுக்குடியினர் வாழும் பகுதி ராதா கிருஷ்ண நகர். அதன் அருகே உள்ள ஏழைகளின் குடியிருப்பு காமாட்சியம்மாள் நகர், குடிமை உணர்ச்சி மிக்க அந்த மேட்டுக்குடி மக்கள், நம் ஏழைச் சகோதரர்களுக்கும் இவ்வுணர்ச்சியை ஊட்ட விரும்பி இரு குடியிருப்புகளையும் இணைத்து ராசி எக்ஸ்நோரா என்ற அமைப்பை உருவாக்கி மேட்டுக்குடியினரின் தூய் மையைப் பள்ளத்து ஏழைகளும் பெற ஆவன செய்து வருகின்றனர். அமைப்பின் மாதச் சந்தாவை ஏழைமக்கள் கொடுக்க இயலாதபோது, அவர்களின் ஒரு பகுதி சந்தாவை செல்வந்தர்களே ஏற்றும் வருகின்றனர். மேடும் பள்ளமும் தூய்மையில் சரிநிகர் சமமாக விளங்கி வருகின்றன.

அண்ணாநகரை அழகாக்கியவர்கள் :

தமிழ்நாட்டின் மிகப்பெரும் குடியிருப்புப் பகுதி சென்னை அண்ணாநகர் ஆகும். பலதரப்பட்ட மக்கள் வாழும் புதிய குடியிருப்பாக இது விளங்கினாலும் குடிமைப் பண்புகள் இங்குக் குறைவுபடவே விளங்கின. 1-7-90இல் ஓய்வு பெற்ற இந்திய அரசின் செயலாளர் ஆர். கோபால்சாமி அண்ணாநகரில் எக்ஸ்நோரா அiமைப்பைத் தலைமையேற்றுத் துவங்கினார். இன்று ஏறத்தாழ அண்ணாநகரில் மட்டும் 25 எக்ஸ்நோரா அமைப்புகள் அண்ணாநகர் கிளையின் கீழ் திறம்பட இயங்குகின்றன.

ஏறத்தாழ 2,50,000 மக்கள் வசிக்கும் அண்ணாநகரில், எக்ஸ்நோரா அமைப்பு இயங்கி வரும் பகுதிகளெல்லாம் தூய்மையுடன் விளங்கி வருகின்றன. சில மாதங்களுக்கு ஒருமுறை அரசு துறை அதிகாரிகளை அழைத்து எக்ஸ்நோரா அமைப்பினர் தங்கள் பிரச்சனைகளை விவாதிக்கிறார்கள். தீர்வு பெறுகிறார்கள். அண்ணாநகரில் உள்ள வீடுகளைக் கண்டறிவது தீராத சிக்கலாக விளங்கி வந்தது. 1993இல் மிகத் தெளிவான வரைபட வழிகாட்டியை (Guide Map of Anna Nagar – Madras East-West-Western Extension Published by Exnora Club of Anna Nagar) பகுதி பகுதியாக விளக்கி அண்ணாநகர் எக்ஸ் நோரா வெளியிட்டு, குடியிருப்புகள் அனைத்திற்கும் வழிகாட்டியுள்ளது. அண்ணாநகர் எக்ஸ்நோராக்கள் சாதித்து வரும் குடிமைப் பண்பைக் கண்டு பெருமிதமுற்ற எம்.பி. நிர்மல் அவர்கள் “எவ்வழி நல்லவர் ஆடவர்; அவ்வழி வாழிய நிலனே” என்று பாடிய ஒளவையார் இன்றிருந்தால் அண்ணாநகரில் தான் குடியிருப்பார் என்று பாராட்டினார். (Ahead 1997 கருத்தரங்கில் 16-2-97 அன்று திரு. எம்.பி. நிர்மல் பேசியது).

குடிமை உணர்வு – இன்று

குடிமை உணர்வு தொடர்பாக இந்தப் புதிய ஆட்சியில் வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்படும் நம்பிக்கை உள்ளது. ஊராட்சி ஒன்றிய, மாநகராட்சி தேர்தல்களுக்குப்பின் ஏற்பட்டுள்ள செயல் துடிப்பு இந்த நம்பிக்கைக்குக் காரணமாகும். முந்தைய ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை நீக்க வேண்டும் என்றும் குடிமைச் செயல்பாடுகள் நிறைவேற்றப்பட வேண்டு மென்றும் தமிழகம் முழுவதும் ஆட்சி மன்றத் தலைவர்கள் பலரும் எண்ணிச் செயல்பட முன்வருகிறார்கள். அவர்கள் செயல்பாடு வெற்றி பெறுமா என்பது மக்களின் விழிப்புணர்வையும் சார்ந்ததாகும்.

சிங்காரச் சென்னை :

சென்னை நகரைச் சிங்காரச் சென்னையாக மாற்றும் வேட்கையுடன் மேயர் மு.க. ஸ்டாலின், பணிகளை முடுக்கி விடுவதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சென்னை காமராஜபுரம் பகுதியில் தெருக்கூட்டும் துப்புரவுப் பணியை மேயர் ஸ்டாலினே தொடங்கி வைத்துப் பேசியபோது அவர் உள்ளக் கிடக்கையை அறிய முடிந்தது.

“மாநகராட்சி அதிகாரிகள், கவுன் சிலர்கள் ஆகியோர் நகரைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற உணர்வுடன் பணியாற்றினாலும், எக்ஸ்நோரா போன்ற அமைப்புகளும் துணை நின்று பணியாற் றினால் அது சிறப்பாக முடியும்.

இதுபோன்ற அடிப்படை பிரச்சனை களைத் தீர்ப்பதற்கு, பொதுமக்களும் சிறப்பான வகையில் நல்ல ஆதரவு தந்திட வேண்டும்.

மக்களின் அடிப்படை பிரச்சனை களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் கடமை ஆற்றி வருகிறோம். அரசியல் வாதிகளாக இருந்தாலும் கவுன்சிலர்களாக இருந்தாலும் பொதுநலக் காரியங்களில் ஈடுபட வேண்டும். அந்த உணர்வுடன் நாம் சிறப்பாகப் பணியாற்றிட வேண்டும்” (செய்தி. தினத்தந்தி 14-2-97).

குடந்தை நகர் அழகாகிறது :

கோயில் நகரம், சுற்றுலா நகரம் என்று வர்ணிக்கப்படும் கும்பகோணம் நகரை அழகுபடுத்தும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. இது குறித்து அமைச்சர் கோ.சி. மணி தினமணி நிருபரிடம் கூறியதாவது, “நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை கும்பகோணம் நகரம் அழகு படுத்தப் படவில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோவிந்த தீட்சிதர் என்ற கட்டடக்கலை நிபுணர் கும்பகோணம் நகரை அடிப்படை வசதிகளுடன் நவீனப் படுத்தினார். அதற்குப் பின் எந்தத் திட்டப்பணிகளும் நடைபெறாததால் நகரம் அழகிழந்து விட்டது. இதைக் கருத்தில் கொண்டு தற்போது அழகு படுத்தும் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன” (செய்தி தினமணி 16-2-97).

குப்பைகளை அகற்ற பாலித்தீன் பைகள்

சென்னையை அடுத்த ஓட்டேரியில் கடந்த 1995ஆம் ஆண்டு வரை 30 வருடங்களாக (ஆண்டுக்கு 300-350 டன் குப்பை கொட்டப்பட்டுள்ளது) குப்பைகளை மாநாராட்சி கொட்டி வருகிறது. ஆனால் இவ்வளவு காலமாக மக்களிடமிருந்து அதற்கு எதிர்ப்பு எழவில்லை. கடந்த 4 ஆண்டுகளாகவே அப்பகுதி மக்கள் குப்பைக் கொட்டுவதைத் தடுக்க முயன்றுள்ளனர். அப்பகுதியில் உள்ள “பிரியதர்ஷனி அபார்ட்மெனட்ஸ்” இது குறித்து சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதன் விளைவாக உயர்நீதிமன்றம் சென்னை மாநகரில் குப்பைகளைச் சேகரிக்க “பாலித்தீன் பை” அனைத்து வீடுகளுக்கு வழங்கவும், அதற்கென சட்ட திட்டங்களில் தகுந்த மாற்றங்கள் செய்யவும், குப்பைகளை அகற்றும் திட்டத்தைத் தயாரிக்கவும் உத்தரவிட்டது. (செய்தி தினமணி 15-2-97).

இந்தத் தீர்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ள குடிமை உணர்ச்சிக்குக் கிடைத்த வெற்றியாகும்.

குடிமை உணர்வு – நாளை

குடிமை உணர்வு மலரும் வாய்ப்புகள் :

  1. மேலை நாடுகளில் ஏற்பட்டு வரும் மனங்கவரும் மாறுதல்களை முன்பை விட விரைவாகவும், விரிவாகவும் தமிழ் மக்கள் அறியும் வாய்ப்புக் கூடிவிடும். அங்கு மக்களின் வாழ்வில் ஏற்பட்டு வரும் குடிமைப் பண்பு சார்ந்த உயர் வாழ்வியல் முறை தமிழ் மக்களுக்கு அவற்றைத் தாமும் பின்பற்றும் ஆவலைத் தோற்றுவிக்கும்.
  2. நாளும் வளர்ந்து வரும் அடுக்கு மாடி குடியிருப்புகளும், புதிய குடியேற்றங் களும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் கூட்டுறவு உணர்வை அவசியமாக்கி வருகின்றன. மற்றவர்கள் நலனில் அக்கறை கொண்டால் தான் நாம் நலமாக வாழமுடியும் என்ற உண்மை உணரப்படும் சூழல் உருவாகும். அதன் விளைவாகக் குடிமைப் பண்புகள் சிறக்கும்.
  3. தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாட்டு முயற்சிகள் இதே வேகத்தில் தொடர்ந்தால் அடுத்த 40 ஆண்டுகளுக்குள் மக்கட் தொகை ஒரே நிலையில் நிற்கும். எழுத்தறியாமைக்கு எதிரான பணிகள் இப்படியே செயல்பட்டால் இன்னும் 20 ஆண்டுகளில் தமிழகம் 100ரூ எழுத்தறிவு பெற்ற மாநிலமாகும். இம்முயற்சிகள் இன்னும் தீவிரமானால் குடிமை உணர்ச்சிக்கு எதிரான இவ்விரு தடைக்கற்களும் விரைவில் நொறுங்கும். குடிமை உணர்ச்சி எளிதில் சாத்திய மாகும்.
  4. எக்ஸ்நோரா போன்ற தொண்டு அமைப்புகளில் வளர்ச்சி சிறப்பாகவும் வேகமாகவும் விளங்குகிறது. இன்னும் ஆயிரக்கணக்கானோர் இவ்வமைப்பு களால் கவரப்பட்டுத் தம் வாழ்வையும், தாம் வாழும் சூழலையும் மாற்றும் நிலை நிச்சயம் ஏற்படும். அப்போது குடிமைப் பண்புகள் புதிய மதமாகத் தமிழகத்தில் பரப்பப்படும்.

குடிமை உணர்வுக்கு எதிரான போக்குகள் :

  1. உலக சுகாதார அமைப்பின் (WHO) ஒரு பிரிவான உலக வறுமை அமைப்பு (WAP) இந்தியா முழுவதும் அண்மையில் வறுமை பற்றிய நடுநிலையான ஆய்வை நிகழ்த்தியது. தமிழ் மக்கள் தாம் இந்தியாவிலேயே வறுமை மிகுந்தவர்கள் என்ற பேருண்மையை இவ்வமைப்பு அறிவித்துள்ளது. அதாவது மொத்த இந்திய மக்களில் 39ரூ மக்களே வறியவர்கள்; ஆனால் தமிழகத்தில் 52ரூ தமிழர்கள் வறுமையில் வாடுகிறார்கள். பெரும்பாலான தமிழர் களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க, அண்மை எதிர்காலத்தில், தற்போதைய அரசியல், சமூக சூழலில் வழி இல்லை. அதிரடி நடவடிக்கைகள் தீவிர மாக்கப்பட்டு அதிசயங்கள் நிகழ்ந்தா லன்றி தமிழ் ஏழைகள் எழ வழியே இல்லை. ஏழ்மை வெற்றி கொள்ளப் படும் வரை குடிமைப் பண்புகள் நலிந்தே இருக்கும்.
  2. நல்லொழுக்கம் பெற்றெடுக்கும் குழவியே குடிமைப் பண்பாகும். நல்லொழுக்கத்தில் தமிழர்களுக்குப் பரவலான ஈடுபாடு இல்லை என்பதைக் கடந்த அரை நூற்றாண்டு சமூக, அரசியல் நிகழ்வுகள் பரவும் சான்றுரைக்கும். திரைப்படங்கள், தொலைக் காட்சிகள், இதழ்கள், அரசியல் கட்சிகள் போன்றவை உயர்ந்த ஒழுக்கத்தை மக்களிடம் எடுத்துச் செல்லும் பொறுப்பில் இல்லை; மாறாக மக்களிடம் உள்ள பலவீனங் களை வளர்த்து ஒழுக்கக் கேடுகள் பெருகவே துணை நிற்கின்றன. இச்சூழல் தொடருமாயின் குடிமைப் பண்பை மக்களிடம் எதிர்பார்ப்பது எங்ஙனம்?

குடிமை உணர்வை எதிர்காலம் பெற வழிகள்:

  1. குடிமைப் பண்பை ஒரு நல்ல அரசாங்கம் நினைத்தால் விரைந்து செயல்படுத்த முடியும் என்பதற்குச் சிங்கப்பூர் போன்ற நாடுகள் சான்று. குடிமைச் சட்டங்களைக் குடிமைப் பண்பை உருவாக்குவதற்கேற்ப வடிவமைத்து, அச்சட்டங்களை குடி மக்கள் யாராயினும் கடைப்பிடிக்க வற்புறுத்தி யாக வேண்டும். குடிமைப் பண்பை மீறுவோர்க்குத் தண்டனைகள் கடுமையாகவும், மீண்டும் தவறிழைக்க அஞ்சவேண்டுவதாகவும் அமைய வேண்டும். இத்தகைய தண்டனைகள் ஜப்பான் போன்று வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் இருந்தவையே.
  2. அனைவர்க்கும் எழுத்தறிவைக் கட்டாயப் படுத்தல் மட்டும் போதா. தொடக்கப் பள்ளிப் பாடத்திலேயே குடிமைப் பயிற்சி ஓர் இன்றியமையாப் பாடமாக இடம்பெறவேண்டும். குடிமைப் பண்புகள் இளம்வயதில் ஆழமாக வேரூன்றும் வண்ணம் பாடத் திட்டமும், பயிற்சியும் சிறப்புற வேண்டும். குடிமை உணர்வு, புதிய தமிழ்த் தலைமுறையின் கலாச்சாரத் தோடு கலந்தாக வேண்டும்.
  3. எக்ஸ்நோரா போன்று தொண்டு அமைப்புகளைச் சார்ந்த சமூகத் தொண்டர்கள், குடிமைப் பண்பை வளர்க்கக் களம் புகும்போது தமிழ் மக்களிடம் நிறைய ஏமாற்றங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். எதிர்பார்த்த பலன் உடனே கிட்டாமல் போவதே இயற்கை. இத்துறையில் நுழைவோர் நான்கைந்து ஆண்டுகளுக்கு மக்களிடம் விளைவுகளை எதிர்பார்க்க முடியாது. இந்தக் காலக்ககட்டத்திற்கு உறக்கநிலை விளைவு (Sleeper Effect) என்று சமூகவியலாளர்கள் பெயரிட்டுள்ளனர். வளர்ச்சிக்கு முன் இந்நிலை தவிர்க்கவியலாது.

குடிமைப் பண்பு மக்களிடம் கீழ்க்கண்ட படி நிலைகளில் தான் மெல்ல மலரும்.

  1. விழிப்புணர்வு (Awareness)
  2. ஆர்வம் (Interest)
  3. முயற்சி (Trial)
  4. மதிப்பீடு (Evaluation)
  5. ஏற்புடமை (Adoption)

முடிவுரை

இந்திய விடுதலைப் போராட்டம் குடிமை உணர்வையும் உட்கொண்டதாகும். விடுதலையை வென்றெடுத்தது போல, குடிமைப் பண்பை குடிமக்கள் ஆட்சியில் இந்நாடு முழுமையாகப் பெறவில்லை. விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்ட நிறைவேறாக் கனவுகளில் இதுவும் ஒன்றாகவிடக் கூடாது.

நம் குடிமைப் பண்புகள் இறந்த காலத்தில் போற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாகக் குடிமைப் பண்பு நோயுற்றுதான் படுத்திருக்கிறது. எனினும் நிகழ்காலத்தில் நம்பிக்கையின் ஒளிக்கீற்று தெரிகிறது. தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும், வளரவேண்டிய உலக நாடுகளுக்கும் வழிகாட்டும் குடிமை இயக்கமான “எக்ஸ்நோரா” தமிழகத்தில்தான் தோன்றி யுள்ளது. எனவே, வருங்காலம் நமக்கு வளமாக இருக்கும் என்ற நம்பிக்கை துளிர்த்து விட்டது.

நமக்குள்ள நோய் பற்றியும், அதன் தன்மை பற்றியும் விரிவாகக் கண்டோம். தீராத நோயில்லை இது; தீர்க்கும் மாமருந்து நம் கையில்தான் உள்ளது என்ற உண்மையையும் இக்கட்டுரை விதைத்துள்ளது.

காலந்தோறும் தமிழகமே உலகிற்கு, பொருட் செல்வங்களோடு, உயர் பண்பு களையும் வழங்கியிருக்கிறது; பெற்றும் இருக்கிறது.

குடிமைப் பண்பு நாம் பெற வேண்டியதும், பெற்று, பெறா மற்றோர்க்கும் தரவேண்டியதுமாகும்.

இப்பணியைச் செம்மையாக்க மேலும் சிந்திப்போம்.

துணை நூற்பட்டியல்

  1. Aston, W.D. The Elements of the Duties and Rights of Citizenship (1921)
  2. Deepa. A. Introduction on Mr. M.B. Nirmal
  3. Exnora Club of Anna Nagar Guide Map of Anna Nagar, Madras.
  4. Nadine. I. Clark & Others Civics for Americans (1965)
  5. Peoples Participation in

Environmental Management    Civic Exnora Guidelines

  1. Rajalakshmi. N Tamilnadu Economy (1987)
  2. Spate. O.H.K. Geography of India
  3. Shellim. S & Vyas M.T. Civics for the General Reader (1975)

பயன்பட்ட இதழ்கள்

  1. தினத்தந்தி
  2. தினமணி
  3. சுட்டி
  4. தேவி

5.Exnora Times

  1. Indian Express

கருத்துகள், அனுபவங்கள், புள்ளி விவரங்கள் வழங்கி உதவியோர்

(இவர்கள் அனைவர்க்கும் என் நன்றி)

  1. Mr. M.B. Nirmal, Founder & Chairman, Exnora International, Chennai.
  2. Mr. R. Gopalaswamy, President, Exnora club of Anna nagar, Chennai.
  3. Group Captain, V. Ramani, Director, Exnora Club of Anna Nagar, Chennai.
  4. Mr. K.V. Suresh, Senator, exnora Internatinal, Chennai.
  5. Mr. S.S. Kannan, Chief Co-ordinator, Beary Cats (Recognised by Exnora), Chennai
  6. Prof. Dr. (Capt.) T.N. Athmaraman, Aditional Director, M.A. Chiddambaram Institute of Community Health, VHS, Sdyar, Chennai.
  7. Dr. R.P. Ilangho, Consultant Pulmonologist & Bronchoscopist, Apollo Hospital, Chennai
  8. Prof. A.R. Varadarajan, Dept. of Economics, D.B. Jain College, Chennai.
  9. Prof. R. Parthasarathy, Dept. of Geography, D.B. Jain College, Chennai.

 

இ.ஜே.சுந்தர்:

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று, இலயோவாவில் பணியாற்றீத் தற்போது சென்னை சமணர் கல்லூரியின் பேராசிரியராக இருக்கிறார். சுட்டி என்ற புகழ் பெற்ற ஏட்டை நட்த்தியவர். மலேசிய நண்பன் என்ற மலேசிய நாளிதழின் இந்தியச் செய்தியாளராகச் செயல்பட்டு வருகிறார்.சிறந்த எழுத்தாளரும், சிந்தனையாளருமாகிய இவர் பொது நலப் பணிகள் பலவற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.

You Might Also Like