Star Mountain

My travels and other interests

கல்விதமிழ்நாடு நேற்று இன்று நாளை

கணிப்பொறி (1997)

கணிப்பொறி
சுஜாதா

 கணிப்பொறி இயலின் துவக்க காலங்களிலிருந்து இன்றுவரை சில முக்கியமான கண்டுபிடிப்புகளையும் சரித்திர நிகழ்ச்சிகளையும் முதலில்  கட்டுரை ஆராய்கிறது.  கணிப்பொறியின் சரித்திரம் பலருக்குத் தெரிந்திருக்கும் என்பதால் அதிகம் விவரிக்காமல் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கணிப்பொறியின் பிரவேசம், குறிப்பாகத் தமிழ்நாட்டில் அதன் முதல் தாக்கங்கள், நம் தொழில் நுட்பத்தில் இதன் பங்கு இவைகளுடன், தமிழ் மொழியின் கணிப்பொறியாக்கத்தில் ஆரம்ப முயற்சிகள் பற்றி விரிவாகச் சொல்லப்படுகின்றன.

அதையடுத்து, தமிழ்மொழியை அடுத்த நூற்றாண்டிற்கு அழைத்துச் செல்ல என்னவென்ன செய்யவேண்டும், இறுதியில் எதிர்காலத்தில் இந்த இயல் எந்தத் திசையில் செல்லக்கூடும் என்பது பற்றிய கருத்துக்கள் ஆராயப்படுகின்றன.

நேற்று

கணிப்பொறி இயல் தோன்றியது சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் சார்லஸ் பாபேஜின் காலத்தில் என்று சொல்வர். இங்கிலாந்தில் பாபேஜின் இயந்திர முயற்சிகளில் நவீனக் கணிப்பொறி இயலின் சில தத்துவங்கள் அடங்கியிருந்தன. ஐரோப்பியத் தேசங்களில் லிப்டனிட்ஸ், பாஸ்கல் போன்றவர்கள் கணக்குப் போடுவதற்கான வினோத இயந்திரங்களைக் கண்டுபிடித்துச் செயல்படுத்தியதையும் அமெரிக்க ஹாலரித்தின் சென்சஸ் கணக்கெடுப்புக்கான இயந்திரத்தையும். இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ‘ஐ பி எம்’-இன் பிறப்பையும் இந்த இயலின் சரித்திரத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால் தற்காலக் கணிப்பொறியின் உண்மையான ஆரம்ப அடையாளங்கள் எலக்ட்ரானிக்ஸ் இயலின் துவக்கத்திற்குக் காத்திருக்க வேண்டியிருந்தது. கணிப் பொறி என்னும் ஒர் இயந்திரத் தத்துவத்திற்குத் தேவையும் ஏற்பட வேண்டியிருந்தது. அது இரண்டாம் உலகப் போரில் பீரங்கிக் குண்டுகள் சரியாக அவைகளின் இலக்கை அடைய உண்டான ஏவு கோணத்தைக் கணக்கிடத் தேவைப்பட்டது. முதலில் ஈனியாக், 1944இல் ஹார்வர்டு மார்க் ஒன் போன்ற கணிப்பொறிகள் பயன்பட்டன. 1946இல் நிறுவப்பட்ட ஈனியாக் கணிப்பொறி பெனிசில்வேனியா பல்கலைக்கழக வளாகத்தில் 1500 சதுர அடி பரவி 30 டன் எடை 18000 வால்வுகள் 1500 ரிலேக்கள் பத்துலட்சம் இணைப்புக்களுடன் 150 கிலோ வாட் சக்தி செலவழித்து ஒரு செகண்டுக்கு ஐயாயிரம் கூட்டல் கணக்கு போடும் தகுதியும் 80 எழுத்துக்களைச் சேகரிக்கும் திறமையும் பெற்றிருந்தது. செலவும் விலையும் மிக அதிகம். நெறிப்படுத்த 6000 கேபிள்களை இணைக்க விற்பன்னர்கள் தேவைப்பட்டார்கள்.

இருந்தாலும் ஈனியாக் போன்ற ராட்சசக் கணிப்பொறியின் தத்துவத்தில் இன்றைய நவீனக் கணிப்பொறியின் அத்தனை அடையாளங்களும் இருந்தன. (இந்த அடையாளங்கள் கொஞ்சம் கற்பனை செய்தால் பாபேஜின் 1833ஆம் வருட இயந்திரத்தில் இருந்ததும் இந்த இயலின் ஆச்சரியங்களில் ஒன்று) வான் நாய்மன் என்பவர் 1945இல் அறிவித்த கணிப்பொறிக் கட்டமைப்பில்தான் இன்றும் கணிப்பொறிகள் இயங்குகின்றன. அன்று 1945இல் அத்தனை பெரிதாக இருந்த ஈனியாக் 1977லேயே சட்டைப் பைக்குள் அடங்கி அதைவிட இருபது மடங்கு திறமை பெற்றுவிட்டது. முப்பதாயிரம் பங்கு அளவிலும் பத்தாயிரம் பங்கு விலையிலும் குறைந்தது, இன்றைய கணிப்பொறித் திறனுடன் ஒப்பிடுகையில் 1977இன் கணிப்பொறி ஒரு குழந்தையே. இந்த வேகமான முன்னேற்றத்திற்கு இந்த இயலில் உற்பத்தித் திறனில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் ட்ரான்சிஸ்டர், ஐசி போன்ற புதிய கண்டுபிடிப்புகள் காரணம். யுனிவாக் என்பது ஐம்பதுகளில் முதல் வியாபாரக் கணிப்பொறி. அந்தக் காலகட்டத்தில் ஐ.பி.எம்., டிஜிடல் போன்ற நிறுவனங்கள் கணிப்பொறிகள் செய்து விற்றன.

1971இல் இண்டெல் நிறுவனத்தின் தோற்றமும் ஒரு சிலிக்கன் சில்லுக்குள் ஆயிரக் கணக்கான ட்ரான்சிஸ்டர்களை உள்ளடுக்கும் தொழில்நுட்பத் திறமையும் இந்த இயலின் முன்னேற்ற வேகத்தை நிர்ணயித்தன. 1971இல் ஒரு சில்லுக்குள் 4000 ட்ரான்சிஸ்டர் இணைப்புகள் கொண்டிருந்த மைக்ரோ சில்லு இன்று ஒரு கோடி இணைப்புகளை ஒரு சிலிக்கான் சதுரத்தில் கொண்டுள்ளது.

இண்டெல் நிறுவனத்தின் ஸ்தாபகர்களுள் ஒருவரான கார்டன்மூர் எழுபதுகளில் ஒரு விதி சொன்னார். ஒவ்வொரு வருடமும் கணிப்பொறியின் திறமை இருமடங்காகி விலை பாதியாகும் என்றார். இந்த மூர்விதி இன்றும் செலாவணியில் உள்ளது. இன்னும் இருபது வருடங்கள் தொடரும் என்கிறார்கள். இன்றைய கணிப்பொறி ஒரு முழுதினம் எடுத்துக்கொள்ளும் கணக்குகள் இன்னும் இருபது வருடங்களில் பத்து செகண்டுகளில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணினித் திறமையுடன் அதன் தகவல் சேகரிக்கும் டிஸ்க்கின் திறமையும் அதிகரித்து வந்திருக்கிறது. 1983இல் பிஸி எக்ஸ்டி என்னும் ஐ.பி.எம். கணிப்பொறியுடன் 10 மெகாபைட் தகவல் சேகரிக்கக் கூடிய காந்தக்தகடுகள் கொடுக்கப்பட்டன. அப்போது அதன் விலை மூவாயிரம் டாலர்.  இன்று பி.சி.யுடன் கிடைக்கும் வின்செஸ்டர் டிஸ்க்களில் சுமார் ஒன்றரை கிகா பைட்டுகள் (ஒரு கிகா என்பது மெகாபைட்டைப்போல ஆயிரம் மடங்கு. மெகாபைட் என்பது பத்துலட்சம் பைட், பைட் என்பது எட்டு இலக்க பைனரி இருநிலை எண்) சேகரிக்க முடியும். விலை சுமார் 225 டாலர்.

மூரின் விதி கிராஃபி முறையில் டெர்ராபைட் கணக்கில் பேசுகிறார்கள் (டெர்ரா என்பது ஆயிரம் கிகா). உங்கள் கைக்குள் அடங்கிவிடும் இவ்வகை நினைவகத்தில் அமெரிக்க லைப்ரரி ஆஃப் காங்கிரஸ் நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் உள்ளிட முடியும்.

இன்று 2000 டாலருக்குக் கிடைக்கும் லாப்டாப் மற்றும் நோட்புக் கணிப்பொறி கடந்த நாட்களில் ஒரு கோடி டாலர் ஐபிஎம் மெயின் ஃப்ரேம் கணிப்பொறிக்குச் சமமானதாகும். எண்பதுகளின் துவக்கத்தில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் வரவு ஒரு முக்கியமான நிகழ்ச்சியாகும். டாஸ் என்னும் செயல்பாட்டு ஆணைத் தொடர்மூலம் அறிமுகமான மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த இயலின் முதன்மை நிறுவனமான ஐ.பி.எம்.-மை இடம் பெயர்த்து இப்போது இதன் முடி சூடாமன்னனாக அரசோச்சுகிறது. மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் சொல்வதை உலகம் கேட்கிறது.

கணிப்பொறி இயலில் தமிழகத்தின் முன்னேற்றம் இந்தியத் துணைக்கண்டத்தின் மற்ற மாநிலங்களில் போல்தான். முதலில் மந்தமாகவும் பிறகு வேகமாகவும் இருந்து வந்திருக்கிறது. அதனால் இந்தியாவில் கணிப்பொறியின் வளர்ச்சியை விரைவாக ஊக்கி விடுவது நல்லது. ஐம்பதுகளில் ஐ.பி.எம்., ஐ.சி.எல். இப்போது இருக்கும் இரண்டு நிறுவனங்கள் யுனிட் ரிக்கார்ட் மிஷின்களைப் பெரும்பாலும் அரசு நிறுவனங்களுக்கு விற்பதாகத் தொழிற்சாலை அமைத்தபோது இந்த இயல் இந்தியாவில் துவங்கியது. மேல்நாடுகளில் கணிப்பொறி இயல் வேகமாக முன்னேறுகையில் அதற்கேற்ற முன்னேற்றம் இந்தியாவில் நிகழவில்லை. காரணம் இந்தியா அப்போது ஒரு தேசிய நீரோட்டத்தின் பெருமிதத்தில் இருந்தது. நம்மால் எதுவும் செய்ய முடியும் என்று பல விஞ்ஞானிகள் நடைமுறைக்கு ஒவ்வாமல், நம்பியதும் மிகவும் குறுகிய நோக்குள்ள இறக்குமதிக் கொள்கைகளும் கடும் வரிகளும் இந்த இயலின் வரவைத் தடுத்தன. ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கு நாம் அதிகம் எலக்ட்ரானிக்ஸ் இல்லாத பழைய இயந்திரங்களில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தோம். எம்.ஜி.கே. மேனோன், ஹோமி பாபா போன்ற தேர்ந்த இயற்பியல் விஞ்ஞானிகள் ஏனோ கணிப்பொறி இயலில் சரியான கவனம் செலுத்தவில்லை. பொதுவாகச் சம்பளம் பட்டுவாடாவுக்காக மட்டுமே அறுபதுகளில் கணிப்பொறிகளைப் பயன்படுத்தி வந்தோம். கல்கத்தா ஸ்டாடிஸ்டிக்கல் இன்ஸ்ட்யூட்டு, பம்பாய் அணு ஆராய்ச்சிக் கூடம் இவைகளில் தனிப்பட்ட குளிர்சாதனக் கோயில்களில் கணிப் பொறிகளை வைத்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவைகளால் நாட்டின் பொது முன்னேற்றத்துக்கு எவ்விதப் பயனும் இல்லையெனினும் நரசிம்மன் போன்ற வருங்கால கணிப்பொறி விற்பன்னர்கள் சிலர் இந்த ஆராய்ச்சிக் கூடங்களில் உருவானது என்னவோ நிஜம்.

எல்லாமே நம்மால் முடியும் என்கிற மயக்கம் தணிந்து கணிப்பொறித் தொடர்பான விஷயங்களுக்கு மிகுந்த முதலீடும் தொழில் நுட்பமும் பொருளாதாரமும் முன்னேற்றமும் தேவைப்படும் என்று தாமதமாக உணர்ந்தபோது மிகப்பெரிய கணிப்பொறி நிறுவனமான ஐ.பி.எம். கட்டுப்பாடுகள் தாங்காமல் இந்தியாவை விட்டு விலகி சிங்கப்பூர் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின்பால் கவனம் செலுத்தி விட்டது. மிச்சமிருந்த பிரிட்டிஷ் நிறுவனமான ஐசிஎல் பாதி இந்திய நிறுவனமாகி அரசின் கட்டுப்பாடுகளுக்குத் தாழ்ந்து போய் கணிப்பொறிகளை இந்தியாவில் தயாரித்து பெரும்பாலும் அரசு நிறுவனங்களுக்கும் மிகச் சில தனியார் நிறுவனங்களுக்கும் விற்று பிழைத்து வந்தது.

இதனிடையில் டி.சி.எம்., எச்.சி.எல்., விப்ரோ போன்ற நிறுவனங்கள் தலைதூக்க முற்பட்டன. மைய அரசுக்குச் சொந்தமான ஈ.சி.ஐ.எல் (எலக்டிரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா) நிறுவனம் ஐதராபாத்திலும் பி.ஈ.எல் (பாரத் எலக்ட்ரானிக்ஸ்) நிறுவனம் பெங்களூரிலும் கணிப்பொறிகளைத் தயாரிக்கத் துவங்கின. ஆதாரக் கணிப்பொறி இயலில் அத்தனை வலுவான அஸ்திவாரம் இல்லாததால் அவர்கள் தயாரித்த கணிப்பொறிகள் அனைத்தும் மேனாட்டில் காலம் கடந்துவிட்ட மாடல்களின்பால் அமைந்திருந்தன. உதாரணமாக டெக் நிறுவனத்தின் மினி கம்ப்யூட்டரான பிடிபி-11 போன்ற கணிப்பொறிகளின் அந்திமக் காலங்களில் பல இந்திய நிறுவனங்கள் அவற்றை நகலெடுத்தன. அதுபோல் டேட்டா ஜெனரல் நிறுவனத்தின் கணிப்பொறிகளும் பம்பாயில் செய்யப்பட்டன. மைய அரசின் எலட்ரானிக்ஸ் (நுண்ணணு) இலாக்காவின் வரையறைகளுக்கு இணங்க எந்தக் கம்ப்யூட்டரை இறக்குமதி செய்யலாம் என்று அவைகளின் வேகத்தைப் பொறுத்து அனுமதிக்கும் மிகுந்த கடுமையான சட்டதிட்டங்களில் கணிப்பொறிகளை மேல்நாட்டில் வாங்கி இறக்குமதி செய்வதற்கு மிகுந்த சாமர்த்தியமும் அரசு விதி முறைகளை ஏய்க்கும் திறமையும்தான் தேவையாக இருந்தன. இவ்வகையில் பல நாடுகளின் பலவகை கணிப்பொறிகள் நாட்டுக்குள் வந்தன. அவை தனித்தனி தீவுகளாக இயங்கியதால் நாட்டின் கணிப்பொறி இயல் திறமையில் எந்தவிதப் பாதிப்பும் நன்மையும் ஏற்படவில்லை. சென்னையில் எப்பி, சற்குணர் போன்ற இளைஞர்கள் வேகமான முன்னேற்றம் கொண்டுவர இந்த விதிகளைச் சற்று தன்வசம் இழுத்ததில் மைய அரசின் கோபத்துக்கு உள்ளாகி உற்சாகம் இழந்தனர்.

இதனிடையில் டி.சி.எம்., கம்பெனியைத் துறந்து எச்சிஎல் நிறுவனத்தை அமைத்த ஷிவ் நாடார் போன்ற தமிழர்களின் பணி குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் அரசு விதி முறைகட்கு உட்பட்டு இந்தியாவில் தோன்றிய பல கணிப்பொறி நிறுவனங்கள் எச்.சி. எல். லிருந்து விலகியவர்கள் அமைத்ததே.

தமிழ்நாட்டில் அண்ணாப் பல்கலைக்கழகம் ஆரம்ப நாட்களில் இந்த இயலில் பத்துவருஷம் பின் தங்கியிருந்தது. அறுபதுகளில் மேல்நாட்டு உதவியின் காரணமாக அந்தந்த நாட்டின் முக்கிய நகரங்களில் ஐ.ஐ.டி. க்கள் நிறுவியது இந்த இயலில் முக்கிய திருப்பம். ஐ.ஐ.டி. சென்னை ஜெர்மன் தேசத்து நிதி உதவியுடன் நிறுவப்பட்டதால் அந்தத் தேசத்தினர் விரும்பிய கணிப்பொறிகள்தாம் அனுமதிக்கப்பட்டன. இருந்தும் ஐ.ஐ.டி. சென்னையில் அதன் காலகட்டத்துக்கு முன்னனியில் இருந்த ஐ.பி.எம். கணிப்பொறியைக் கொண்டு வந்ததால் கணிப்பொறி இயல் பாடங்களில் சென்னை முன்னணியில் இருந்தது. அண்மையில் சீமன்ஸ் நிறுவனத்தின் சிறந்த கணிப்பொறி ஒன்று தானமாகக் கொடுத்ததை பல் பிடித்துப் பார்க்க முடியாததால் இவ்வகைக் கணிப்பொறிகளின் பயன்பாட்டால் இந்த இயலின் மாணவர்கள் கற்றுக் கொள்ளும் பாடங்கள் அமெரிக்க நாட்டுடன் ஒப்பிடக்கூடியவையாக இல்லை. உதாரணமாக அந்த அந்த நாட்டின் கணிப்பொறிகளில் ‘யுனிக்ஸ்’ போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம்கள் இருந்தாலும் மேல் விவரங்களில் சிலசமயம் வித்தியாசப்பட்டன. இதனால், ஒருங்கமைக்கப்பட்ட கணிப்பொறிக் கல்வி இந்தியாவில் எங்கும் வரவில்லை. அமெரிக்க உதவியுடன் அமைக்கப்பட்ட கான்பூர் ஐ.ஐ.டி.யையும் சென்னை ஐ.ஐ.டி. யையும் விதி விலக்காகச் சொல்லலாம். தமிழ்நாட்டின் மற்ற பொறி இயல் கல்லூரிகள் மிகவும் தாமதமாகத் தனிக் கவனம் செலுத்தும் பாடத் திட்டங்களைக் கொண்டு வரும் முயற்சிகள் எண்பதுகளின் நடுவில்தான் துவங்கின. திருச்சியில் உள்ள ஆர்.இ.சி. நிறுவனம் இதில் சற்றே முன் சென்றது. அருகாமை பி.எச்.இ.எல். இந்தியக் கனமின் தொழிற்சாலையுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அந்தத் தொலை தூரத்திலிருந்து ஆன்-லைன் முறையில் கனமின் தொழிற்சாலையின் கணிப்பொறியை அணுகியது. எண்பதுகளில் தமிழ்நாட்டில் ஒரு சாதனை என்றே சொல்லலாம்.

எண்பதுகளில்தான் இந்த இயலுக்குத் தீவிரமான ஒருங்கிணைந்த அணுகுமுறை கிடைத்தது. மைய அரசு இறுதியில் விழிப்புக்கண்டு இறக்குமதிக் கொள்கைகளைத் தளர்த்தியதும் உள்நாட்டில் கணிப்பொறித் திறமை சட்டெனப் பரவியது.  மேலும் அதிவேக முன்னேற்றத்தில் சிலிக்கன் சில்லியலில் ஏற்பட்ட மாறுதல்களில் மெயின்ப்ரேம் மினி மைக்ரோ போன்ற பாகுபாடுகள் தேய்ந்து போய் மிகத் திறமையான கணிப்பொறிகள் பி.சி. என்னும் மேசைக் கணிப்பொறிகளிலேயே வந்துவிட்டன. அவைகளின் விலையும் பயங்கரமாகச் சரிய தமிழ்நாட்டில் இந்தத் தொழில்திறமையில் முன்னோடியாக விளங்கிய சிவசங்கரன் போன்றவர்கள் கணிப்பொறியின் விலைச்சரிவில் முக்கியப் பங்கு வகித்தனர்.  தமிழ்நாடு விட்டு வைத்த கட்டங்களையெல்லாம் ஒரேயடியாகத் தாவி மேல்நாட்டுடன் ஒப்பிடும் திறமைக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டது. கணிப்பொறி இயல் பாடத் திட்டங்களை ஒழுங்கு படுத்தவும் அரசு முடிவு செய்து எம்.சி.ஏ. என்று புதிய கணிப்பொறிப் பயன்பாட்டைச் சார்ந்த பாடத்திட்டத்தை அறிவித்து அதற்கான புத்தகங்கள் உள்ளடக்கம் அனைத்தையும் வெளியிட்டது. இது மற்றொரு மைல்கல்.

இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பொறிஇயல் அறிவியல் போதிக்கும் கல்லூரிகளும் கணினி இயலைக் கற்றுத்தரும் தகுதி பெற்றன. பல தனியார் கல்லூரிகள் இளங்கலை, முதுகலைக் கணிப்பொறிப் பாடங்களைத் துவக்கின.

இந்தியப் பொருளாதாரமும் சற்றே ஊக்கம் கண்டு கணிப்பொறிப் பயன்பாடுகளால் ஏற்படும் நன்மைகளை உணர்ந்து கொண்டது. பொதுவாகக் கணிப்பொறிக் கல்வியைப் பற்றிய ஒரு ப்ரக்ஞை உந்து சக்தி கிடைத்திருப்பது என்னவோ உண்மை. இதனால் நன்மைதான் விளையும் என எதிர்பார்க்கப் படுகிறது. தமிழ்மொழியின் முன்னேற்றத்துக்குக் கணிப்பொறி இயலில் என்ன என்ன நிகழ்ந்திருக்கிறது என்று பார்ப்போம். அறுபதுகளிலேயே துவங்கிய இந்த முயற்சிகள் பல வருஷங்களாக ஒருவாறான கல்லூரி ஆர்வமாகத்தான் இருந்து வந்திருக்கின்றன. சிறிதோ, பெரிதோ கணிப்பொறி வைத்திருந்த எல்லாக் கல்லூரிகளிலும் சிரமப்பட்டு தாய் மொழியின் எழுத்துக்களைத் திரையில் பார்வையாளருக்குக் காட்டி மகிழ்ந்ததுடன் இந்த முன்னேற்றம் நின்று போனது. 1984ஆம் ஆண்டு கான்பூர் ஐ.ஐ.டி. யைச் சார்ந்த ஆம்.எம்.கே. சின்ஹா என்பவர் இந்தியத் தொலைத் தொடர்புக் கழகத்தின் சஞ்சிகையின் இந்திய மொழிகளைக் கணிப்பொறியில் அலசுவதைப் பற்றிய சிறப்பிதழில்தான் முதல் தீவிர முயற்சிகள் துவங்கின என்று சொல்லலாம். அதில் தமிழ், மலையாள மொழிகளின் வரி வடிவங்களை எப்படி கணிப்பொறி மூலம் அடையாளம் கண்டுகொள்வது என்பது பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையை சென்னைக் கிறித்துவக் கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன், சிரோமணி எழுதியிருந்தார்கள். அதே இதழில் சென்னை ஐ.ஐ.டி. யைச் சேர்ந்த ராமன், சுந்தர், மஹாபாலா மூவரும் கணிப்பொறி மூலம் இந்திய மொழிகளை வெளியிடுவது பற்றிய கடிதக் குறிப்பில் சில உதாரணங்கள் தருகையில் “இந்தத் தமிழ்க் கம்ப்யூட்டர் தமிழின் பொறியியல் விஞ்ஞான வளர்ச்சியெனும் குழந்தையின் முதல் அடிதான்” என்று உதாரண வாக்கியம் தந்திருந்தார்கள். இதைத்தான் முதல் அடி என்று சொல்வோம்.

இதன் பின்னும் தமிழ்மொழிக் கணிப்பொறியியல் பரவவில்லை. காரணம் அந்தக் காலகட்டங்களில் கணிப்பொறிகள் விலை அதிகமாக இருந்ததால் இலாபகரமான பயன்பாடுகள் எதையும் காண முடியவில்லை.

இந்திய அரசின் புதிய கணிப்பொறி இறக்குமதிக் கொள்கை வந்து தடைகள் தளர்ந்ததும் இந்தியாவிலேயே கணிப்பொறிகள் செய்யத் துவங்கியதும் விலை மளமள வென்று சரிய இந்திய மொழிகளைக் கணிப்பொறி மூலம் உள்ளிட்டுப் பயன்படுத்துவது வியாபார நோக்கில் சாத்தியமான பின் இந்த முயற்சிகள் தீவிரமடைந்தன.

இருந்தும் இம்முயற்சிகள் பெரும்பாலும் தமிழ்மொழியில் சொல் தொகுப்பில் இருமொழி மென்பொருள்களில் முதலில் வந்தது. டி.சி.எம். நிறுவனத்தின் திருவள்ளுவர்தான் கொஞ்சம் விலை அதிகமாக இருந்த இந்த மென்பொருள் தமிழ் எழுத்துக்களை உள்ளிட ஃபோனெட்டிக் முறையைப் பயன்படுத்திக் கூட்டெழுத்துக்களை அமைக்க, தனிப்பட்ட விசை ஒன்றை அமைத்து திரையில் எட்டு வரித் தமிழ் எழுத்துக்களைக் காட்டியது.

சி.எம்.சி., என்னும் கணிப்பொறி மேற்பார்வை நிறுவனம் லி.பி. என்னும் மென்பொருளில் தமிழ் எழுத்துக்களைக் காட்டியதும் அல்லாமல் ‘ட்ரான்ஸ்லிட்டரேஷன்’ என்னும் வசதியும் தந்தது. இந்த வசதி வாக்காளர் பட்டியல்கள் ரெயில்வே பயணிகள் பட்டியல் போன்ற இருமொழிப் பட்டியல்கள் தயாரிக்கப் பயன்பட்டது.

டாட்டா நிறுவனம் அமைத்த ‘சப்தமாலா’’, காத்ரெஜ் நிறுவனம் ஐ.ஐ.டி. கான்பூருடன் சேர்ந்து அமைத்த சொல் தொகுப்பு நிரல் ஓ.எம்.சி. சாப்டெக், சொனாட்டா.

பெங்களுரைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஜி., நிறுவனம் கொண்டுவந்த ‘பாரதி’’ சொல் தொகுப்பு மென்பொருள் குறிப்பிடத் தக்கது. இன்று சிங்கப்பூரில் நூற்றுக் கணக்கான பள்ளிகளும் தமிழ் நாடு அரசும் ‘பாரதி’ யைப் பயன்படுத்தி வருகிறார்கள். இப்போது பி.சி. என்னும் மேசைக் கணிப்பொறி விற்பனை செய்யும் எல்லா உற்பத்தியாளர்களும் தமிழில் உள்ளிடவும் திருத்தவும் அச்சிடவும் பதிப்பிக்கவும் வசதிகளைத் தரும் மென்பொருள்களைத் எளிதாகத் தருகிறார்கள். பேருக்குப் பேர் விவரங்களில் வேறு பட்டாலும் தமிழ் மொழியைக் கணிப்பொறியில் கொண்டு வரும் பணி நிறைவு பெற்றுவிட்டது என்று சொல்லலாம். மேலும் ஆப்பிள் கம்பெனியின் மக்கின்டோஷ் கணிப்பொறி இந்தச் செயலை மிகவும் எளிதாக்கிவிடக் கனடாவிலிருந்து (ஆம்) வியட்நாம் வரை தமிழ் ஆர்வலர்கள் தத்தம் கணினிகளில் தமிழைக் கொண்டுவந்து விட்டார்கள்.

இது ஒருவிதத்தில் நன்மையும் தீமையும் கலந்த முன்னேற்றம். கணிப்பொறி முயற்சிகளையெல்லாம் ஓழுங்கு படுத்த ஒர் அரசமைப்போ வலுவான தனியார் அமைப்போ இல்லாததால் திரும்பத் திரும்ப ஒரே காரியத்தைப் பலபேர் பலவிதங்களில் செய்து வந்திருக்கிறார்கள். இதனால் அனைவரும் “சக்கரத்தை மறுபடி கண்டுபிடிக்கும்” வேலைகளையே செய்துவந்திருக்கிறார்கள்.

கணிப்பொறிகளில் தமிழ்ச் சொல் தொகுப்பு அணுகுமுறை மூன்று வகைப்பட்டது.

  1. விசைப்பலகை ஒதுக்கீடு – குறியீடு
  2. எழுத்துக்களைத் திரையில் காட்டுவது
  3. சொல் தொகுப்புக்கான வசதிகள்

தமிழ்மொழி 216 எழுத்துக்கள் கொண்ட ஃபோனெட்டிக் வகை மொழி (ஒரு எழுத்துக்குப் பெரும்பாலும் ஒரே உச்சரிப்பு) உயிர் எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் உயிர்மெய் என்று பாகுபடுத்தப்பட்ட மொழி, கொம்பு, புள்ளி, கால் போன்ற வரிவடிவங்களும் தமிழில் உள்ளன.

இவைகளுக்கு ஆங்கிலம் சார்ந்த கணிப்பொறி விசைப்பலகையில் இடம் அளிக்க மூன்று முறைகளைத் தமிழ்க் கணினியாளர்கள் இப்போது பயன்படுத்துகிறார்கள். தட்டச்சு இயந்திரத்தின் ஒதுக்கீடு, தமிழ் என்று உள்ளிட வேண்டுமெனில் த-ம-கொம்பு-ழ-புள்ளி என்று உள்ளிடும் முறை, உயிர், மெய் எழுத்துக்களுடன் கொம்பு, புள்ளி இவைகளுக்குத் தனிப்பட்ட விசைகள் (KEYS) இருக்கும்.

இரண்டாவது முறை ‘ரோமனைஸ்டு’’ முறை ஆங்கிலம் போலத் தமிழ் என்பதை T A M I Z H என உள்ளிடுவது இம்முறை, மேல்நாடுகளில் உள்ள ஆங்கிலம் தெரிந்த தமிழர்கள் அமைத்துக் கொண்ட முறை.

மூன்றாவது முறை இந்திய மொழிகளின் ஒருங்கிணைப்பு நோக்கத்தோடு மின்னணு இலாக்காவினர் அமைத்த ‘ஜிஸ்ட்’’ முறை.

உயிர்மெய் எழுத்தை மெய் + உயிர் என உள்ளிட வேண்டும். கு என்பதற்குக் ’க’-வையும் ’உ’-வையும் உள்ளிடுவது, போ என்பதற்குப் ’ப’-வையும் ’ஓ’-வையும் உள்ளிடுவது.

மூன்று முறைகளிலும் ஆங்கில QWERTY விசைப்பலகையில் தமிழின் எல்லா எழுத்துக்களுக்கும் இடமளிக்க முடிவது தமிழின் சிறப்புக்களில் ஒன்று. காரணம் தமிழ் மொழி எழுத்துக்கள் 216 எனினும் வரிவடிவங்கள் ஐம்பதுக்குள் அடங்கிவிடுகின்றன. எந்த எழுத்துக்கு எந்த இடம் என்னும் ஒதுக்கீட்டில்தான் மிகுந்த குழப்பம் உள்ளது. தமிழ் எழுத்துக்களின் பயன்பாட்டை நோக்கிச் சொற்களில் அதிகம் பயன்படும் எழுத்துக்களை Frequency Analysis முறைப்படி அலசி அடிக்கடி பழகும் எழுத்துக்களைச் சுலபமாக அணுகக் கூடிய விசைகளில் வைத்திருக்கும் முறையைச் சிங்கப்பூரைச் சார்ந்த நா. கோவிந்தசாமி செய்திருக்கிறார். இம்மாதிரியான அலசலை மலேசியாவைச் சார்ந்த முத்தெழிலனும் செய்திருக்கிறார்.

தமிழ் எழுத்துக்களின் விசைப்பலகை ஒதுக்கீடு இன்னும் தீர்வு காணப்படாத ஒரு விஷயம். அதற்காக ஒரு குழு அமைத்து எந்த ஒதுக்கீட்டைத் தீர்மானித்தாலும் அதைக் கணிப்பொறி மூலம் செயல் படுத்துவது சுலபமே. தற்போது கணிப்பொறி மென்பொருளாளர்கள் இம்மூன்று வகை ஒதுக்கீட்டையும் நமக்காகக் கொடுத்து எது வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நம்மிடம் விட்டுவிடுகிறார்கள்.

தமிழக அரசின் உயர்கல்வி மன்றம், தமிழ் எழுத்து வடிவம், தமிழில் தொழில்நுட்பச் சொற்கள், தமிழ் விசைப்பலகை, தமிழ்க் கணிப்பொறிக்கான குறியீடு இவைகளுக்கான ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகளைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஏற்கும்போது இந்தப் பணி ஒழுங்கு பெற்று புதிய புதிய ஒதுக்கீடுகளுக்கு வீணே செலவிடும் நேரம் குறையும்.

கணிப்பொறிக்குள் தமிழ் எழுத்துக்களைக் குறிப்பிடும் போது ஃபோனெட்டிக் முறையைப் பயன்படுத்துவது நல்லது. காரணம் ஃபோனெட்டிக் அணுக்கள் இந்திய மொழிகள் அனைத்துக்கும் பொதுவாக இருக்க முடியும். இன்ஸ்கி என்னும் குறியீட்டுக்கும் தன் முழுவடிவமான யூனிகோட்டுக்குள் பொருந்த முடியும். இதன் மூலம் தமிழ் மொழி உலக அளவில் ஒரே பொது நீரோட்டத்தில் கலந்து கொள்ள முடியும். பரிவர்தி தேவநாகரி எழுத்துக்களின் பாற்பட்ட இஸ்க்கி 8 என்னும் குறியீட்டு முறையும் நோக்கத் தக்கதே.

தமிழ்மொழி எழுத்துக்களைக் கணிப்பொறித் திரையில் காட்டும் ஜாலத்தைப் பலர் செய்துவிட்டார்கள். இதில் உலகில் பிரபலமான மைக்ரோசாப்ட் வோர்ட், வார்ட்ஸ்டார் போன்ற சொல்தொகுப்பு மென்பொருள்களுக்கு ஏற்ப டி.டி.எஃப் ட்ருடைப் எழுத்து வடிவங்கள் (FONTS) சுலபமாக ஏற்கத் தக்கவை. மிக அழகான அச்செழுத்துக்கள் போன்ற பல வடிவங்கள் தமிழில் இப்போது கிடைக்கின்றன. அவைகள் சில இலவசமாகவும் சில காசு கொடுத்தும் கிடைக்கின்றன. வோர்ட் போன்ற ஆங்கிலச் சொல் தொகுப்பு மென்பொருள்களுக்குள் இந்தத் தமிழ் வடிவங்களை இறக்குமதிச் செய்து விட்டால் எழுத்துக்களைப் பெரிதாக்கவோ அடிக் கோடிடுதல் போன்ற பல வசதிகளைப் பெறவோ முடிகிறது. லேசர், குத்தூசி அச்சியந்திரங்கள் மூலம் மிக அழகாகத் தமிழ் எழுத்துக்களை அச்சடிக்கும் கலை தமிழ்மொழி இலக்கணத்தைக் கணிப்பொறிக்கு ஏற்றவாறு அமைத்து எழுத்துப் பிழைகளையும் ஒற்று சந்திப் பிழைகளையும் திருத்த கணிப்பொறியில் இயலும். இதற்கான ஆரம்ப முயற்சிகளைச் சிடாக் நிறுவனமும் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி மையமும் ஏற்றுக் கொண்டுள்ளன. தற்காலத் தமிழ் அகராதியை வெளியிட்ட க்ரியா என்னும் தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு தமிழில் பிழை திருத்தும் மென்பொருள் தயாரிக்க ஒரு மானியம் கிடைத்திருப்பதாக அறிகிறோம்.

தமிழ் இலக்கணத்தைக் கணினிக்கு ஏற்றவாறு எழுதுவதும் அவசியம், தமிழ் எழுத்துக்களைக் கணிப்பொறிப் பரிச்சயம் செய்து கொள்ள (Character Recognition) இவ்வகை இலக்கணம் தேவைப்படும். பொற்கோ போன்றவர்களின் இலக்கண நூல்கள் இதற்குப் பயன்படும்.

நாளை

இனி எதிர்காலத்தில் கணினி இயலில் தமிழ் மொழிக்கு என்னவெல்லாம் நிகழவேண்டும் என்பதை யோசிப்போம். தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் ஒரு தகவல் தளம் டேட்டாபேஸ் அமைந்து அதில் உள்ளிடும் பணித் தொடங்கியிருக்கிறது; தொடர வேண்டும். மேலும் இந்தப் பணியை ஏதேனும் ஒரு பல்கலைக்கழகமோ அரசு நிறுவனமோ முனைப்புடன் ஏற்றுக் கொண்டு ஒருமைப்படுத்த வேண்டும். நம் தமிழின் பண்டை இலக்கியங்கள் அனைத்தும் நிரந்தரமாகப் பாதுகாக்கப்படும்.

புதிய ஆங்கிலம்-தமிழ், தமிழ்-ஆங்கிலம், தமிழ்-தமிழ் அகராதிகள் வேண்டும். சென்னைப் பல்கலைக் கழகத்தின் லெக்ஸிக்கன் அகராதி, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி போன்றவைகளில் புதிய பதிப்புக்கள் வரவேண்டும். அதேபோல எல்லா இயல்களுக்கும் கலைச்சொல் அகராதி தமிழறிந்த அந்த அந்த இயலாளர்களை வைத்து தயாரிக்க வேண்டும். சொற்களில் அதற்குக் கலைச்சொல் ஆக்கத்தைப் பற்றிய ஒரு பொது வழிகாட்டி முதலில் தேவைப்படும். இதில் குழந்தைசாமி, மணவை முஸ்தபா போன்ற பலர் தனித்தனியே செய்த முயற்சிகளை ஒருங்குபடுத்தும் பயிற்சியும் முதலில் செய்யவேண்டும்.

தெஸாரஸ் என்னும் நிகண்டு ஒன்றும் தேவைப்படும். பல பழைய சொற்கள் வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன. அவைகளைப் புதிய கலைச்சொற்களாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளதால் அவைகளையும் புதிதாக உட்புகுந்த சொற்களையும் சேர்த்த ஒரு கணிப்பொறி நிகண்டு தேவைப்படும். கணிப்பொறி ஒரு கருவி. அதைத் தமிழ் போன்ற தொன்மையான மொழியின் ஜீவனைப் பிடிக்கவும் அதன் புதிய ஆச்சரியங்களை அடையாளம் காட்டவும் அடுத்த நூற்றாண்டுக்கு அதைத் தயார் செய்யவும் பழைமையை மறக்காமல் புதுமைகளைக் கொண்டு வரவும் அதன் சொல்வளத்தை விரிவுபடுத்தவும் பயன்படுத்தப் போகும் துடிப்பான காலத்தில் நாம் இருப்பது நம் பாக்கியமே.

இனி, நாளைக் கணிப்பொறி இயலில் என்னென்ன நிகழும் என்பதைப் பற்றிச் சிறிது யோசிக்கலாம்.

கணிப்பொறியின் செய்தி சேர்க்கும் தகுதிகளின் எல்லை இயற்பியல் விஞ்ஞானத்தின் எல்லையை அடையும் என்று எதிர்பார்க்க முடிகிறது. ஒரு தனிப்பட்ட எலக்ட்ரான் மின்துகளில் ஒரு பிட் தகவலைச் சேர்த்து வைக்கக்கூடிய தகுதி வரலாம் என்று மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் சொல்லியிருக்கிறார்.

இண்டர்நெட் என்னும் இணைப்பு உலகின் கணிப்பொறிகளை மிகவேகமாக இணைத்துக் கொண்டு செய்திப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் உலகின் வியாபாரம் முழுவதும் நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கு இண்டர்நெட்டில் செய்திப் பரிமாற்ற அந்தரங்கமும் பத்திரமும் தேவைப்படுகிறது. அதை இப்போது தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இதற்காக ரகசியம் காக்கும் ‘கிரிப்டாலஜி’ முறைகள் இப்போது கொண்டுவரத் துவங்கியுள்ளார்கள். 1989இல் விளையாட்டாய்த் துவங்கிய World Wide Web என்னும் உலகளாவிய கணிப்பொறி வலைப்பின்னல் இப்போது ஒரு மிகப்பெரிய பொருளாதாரக் கலாச்சார மாற்றத்தைப் கொண்டுவரப் போகிறது. கணிப்பொறிகள் மணிபர்சின் அளவுக்குக் குறுகிவிடும். அதன் தகுதிகள் பன்மடங்கு பெருகிவிடும் என்கிறார்கள். இப்போதே நோட்புக் கணிப்பொறி ஒரு சிறிய டயரி அளவுக்கு வந்துவிட்டது. பையில் கணிப்பொறி இருந்தால் கையில் காசுக்கோ க்ரேடிட் கார்டுக்கோ தேவையிருக்காது என்கிறார்கள். இந்தப் பைக்குள் கணிப்பொறிகள் உங்கள் குரலையும் விரல் ரேகையையும அடையாளம் கண்டு கொள்வதாக இருக்கும். உலகில் நீங்கள் எங்கிருந்தாலும் இருப்பிடத்தை உங்களுக்குச் சொல்லும் வகையில் ஜி.பி.எஸ். சாதனங்கள் பொருந்தியிருக்கும். காரில் போகும் போது அடுத்த பாதையில் வலதுபக்கம் திரும்பவும் வழி சொல்லும் இந்தப் புத்திசாலி பைக்கணினிக்கு முன்னோடியாக இன்றைய ‘ஸ்மார்ட் கார்டு’ என்னும் சில்லு பதித்த ப்ளாஸ்டிக் அட்டையும் பி.டி.ஏ.  (PDA) என்னும் பர்சனல் டிஜிடல் அசிஸ்டண்ட் அந்தரங்க எண்மத்துணைவனும் இப்போதே சந்ததைக்கு வந்துவிட்டன.  கணிப்பொறிகளுடன் எதிர்காலத்தில் சரளமாக உரையாட முடியும்; எழுதிக்காட்ட முடியும்.

எதிர்காலத்தில் தகவல் வெள்ளத்தினால் நாம் தாக்கப்படுவோம். இது ஒரு பெரிய அபாயமாகக் கருத வாய்ப்பில்லை. இப்போது கூட நாம் ஒரு நூலகத்துக்குச் செல்லும்போது அதில் உள்ள அத்தனை புத்தகங்களையும் படிப்பதில்லை. நூலகத்தில் உள்ள பெயர்ப்பலகைகள் அட்டவணைகள் மூலம் விரும்பும் புத்தகத்தை அடைகிறோம். இவ்வகையிலேயே கணிப்பொறி மூலம் நமக்கு வரும் தகவல்கள் ஏராளமாக இருந்தாலும் தணிக்கை செய்து கொடுக்கும் நிரல்களும் மிகும். இப்போதே ஆல்ட்டவிஸ்டா, யாஹð போன்ற மென் பொருள்கள் இதைத்தான் செய்கின்றன. எதிர்காலத்தில் இம்மாதிரியான தகவல் தேடும் நிரல்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்கும். அவைகளை மிகச் சிக்கலான கேள்விகள் கேட்டு விடை பெறலாம். உதாரணமாகக் கீழ்காணும் கோள்விகள் :

புற நானூற்றின் காலம் பற்றிய அத்தனை கட்டுரைகளையும் எனக்குக் காண்பி. கிலோ பதினைந்து ரூபாய்க்குள் அரிசி எங்கெல்லாம் கிடைக்கிறது. அந்தக் கடைகளின் பெயர்ப்பட்டியல் வேண்டும்.

சென்ற மூன்று மாதமாக நான் விஜயம் செய்யாத உறவினர்களின் தொலைபேசி எண்களை எல்லாம் கொடு. இம்மாதிரியான சகஜமான கேள்விகள் கேட்டு விடை பெற இயலும். எதிர்காலக் கணிப்பொறி நிரல்கள் உங்கள் பழக்க வழக்கங்களையும் விருப்பு வெறுப்புகளையும் அறிந்து செயல்படும். பழகப் பழக அவை உங்கள் செயல்களை எதிர்பார்த்துச் செயல்படும். இதை மென்மென்பொருள்  Soft Software என்கிறார்கள். சுருங்கச் சொன்னால் நாளடைவில் கணிப்பொறிகள் மனிதத் தன்மைகள் பெற்று நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்ப் பண்பிலே தேவனாய்ப் பார்வையிலே சேவகனாய் விளங்கும். எதிர்காலத்தில் இண்டர்நெட் மூலம் உலகளாவிய எதிராளிகளுடன் சீட்டாடலாம்; சதுரங்கம் ஆடலாம். தொலைக்காட்சியில் விளையாட்டுக்களைப் பார்க்கையில் காமிராவின் கோணத்தை உங்கள் விருப்பப்படித் திருப்பலாம்; விரிவுரையாளர்களை மாற்றலாம். எந்த நேரத்திலும் எந்தப் பாடலையும் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கேட்கலாம். இண்டர்நெட் என்னும் மகாமகா அங்காடியிலிருந்து உங்கள் புத்தகங்கள் வாங்கலாம். நண்பர்களைச் சந்திக்கலாம், வியாபாரம், விவாகம், விவாதம் எல்லாம் வீட்டின் மூலையை விட்டு நகராமல் உங்கள் விரல் நுனிகளால் உலகைத் தொடலாம். உங்கள் பாட்டை நீங்களே வாத்திய இசையுடன் சேர்த்துக் கேட்கலாம். உங்கள் படங்களில் நீங்களே நடிக்கலாம். வெளியூர் சென்றால் உங்கள் வீட்டைக் கணிப்பொறிக் கவனித்துக் கொண்டு தபால் அஞ்சல் நிலையத்திற்குச் செய்தி சொல்லி செய்தித்தாளைத் தற்காலிகமாக நிறுத்தும். இவ்வகை வசதிகளுக்கான தொழில் நுட்பத்திறம் இப்போதே உள்ளது. தனிமையை இனிமையாக்கும் இந்தத் தந்திரங்களின் சமூகவியல் தாக்கத்தை இப்போது யாரும் சிந்திக்கவில்லை.

சுஜாதா :

பொறியாளர். கணிப்பொறி அறிஞர். கணிப்பொறி தொடர்பான பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். அறிவியல் அறிவைப் பயன்படுத்தி நிறைய கதைகளையும் எழுதியுள்ளார். மிகச் சிறந்த எழுத்தாளர் எனப் போற்றப்படுபவர். வெளிநாடுகளில் நிகழும் பல கருத்தரங்குகளில் பங்குபெற்றுள்ளார்.

You Might Also Like