Star Mountain

My travels and other interests

Rural Tamilnadu

கிராமப்புறத் தமிழகம்- திட்டமும் முடிவுகளும்- முகவுரை (2018)

கிராமப்புறத் தமிழகம்- பிரச்சனைகளும் மக்கள் எதிர்பார்ப்புகளும்

மக்கள் நேர்காணல் (சர்வே) முடிவுகள்

கடந்த 1997-ஆம் ஆண்டு தமிழ்நாடு- நேற்று இன்று நாளை என்ற ஆய்வுப் புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டோம்.  விவசாயம், பொருளாதாரம், மாநில மத்திய உறவுகள் முதலிய தலைப்புகளிலிருந்து நாட்டியம், நாடகம், சினிமா முதலிய துறைகள் வரை பல தலைப்புகளில் வல்லுனர் பலர் ஆய்வுக்  கட்டுரைகள் எழுதியிருந்தார்கள். புத்தகங்கள் தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் உள்ள பல நூலகங்களுக்கும் அன்பளிப்பாய் அனுப்பப்பட்டன. டாக்டர். க.ப. அறவாணன் அவர்கள் இந்திய ஒருங்கிணைப்பாளராகவும், கனெக்டிகட் கோ. இராஜாராம் அவர்கள் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றினார்கள். புத்தகம்  இந்தியச் செய்தித்தாள்கள், மற்றும் ஆய்வாளர்களின் பாராட்டைப் பெற்றது.

தமிழ்நாட்டு ஆய்வு மேற்கூறியபடி வல்லுனர்களின் மூலம் நடத்தப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக இன்னொரு ஆய்வினை மக்களின் மூலம் நடத்தவேண்டும்  என்று முடிவெடுத்தேன். ஆய்வினை கிராமப்புறத்தில் நடத்துவது வேண்டத்தக்கது என்று தோன்றியது. கனெக்டிகட் நண்பர் இராஜாராமிடமும்,  விருதுநகர் எழுத்தாளர் இராமகிருஷ்ணன் அவர்களிடம் பல முறை விவாதித்து இதற்கான செயல் முறையை உருவாக்கினேன். எழுத்தாளர் இராமகிருஷ்ணன் இந்தியாவில் ஒருங்கிணைப்பாளராய் பணியாற்ற சம்மதித்தார்.  கிராம மக்களை நேரிடையாகச் சந்தித்து அவர்களது பிரச்சனைகளையும், அவர்கள் விரும்பும் தீர்வுகளையும் பட்டியலிடுவது இவ்வாய்வின் அடித்தளமாய் அமைந்ததது. இதற்காகப் பொதுவான பிரச்சனைகள் அடங்கிய கேள்வித்தாள் ஒன்றைத்   தயாரித்தோம்.  நேர்காணலை நடத்தும் பணியைப் பல சமூக சேவகர்களிடம் ஒப்படைத்தோம்.  கி.பி. 2000-ஆம் ஆண்டில்,  சுமார் 1000 கிராம மக்களை,  23 மாவட்டங்களில் இவ்வூழியர்கள் பேட்டி கண்டார்கள். ஒரு பானைச் சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்ற முறையில் சர்வே முடிவினைக் கருதவேண்டும்.

நேர்காணல் வினா-விடைத்தாள்கள் அனைத்தையும் இராமகிருஷ்ணன் அவர்கள் சேகரித்து 2002-இல் முடிவுகளைத் தொகுத்து ஒரு ரிப்போர்ட் வடிவில் எனக்கு அனுப்பினார். சுமார் 30 பிரச்சனைகள் பற்றி கிராமவாசிகளின் அனுபவங்களையும், அவைகளில் தலையாய பத்து பிரச்சனைகளையும் , 23 மாவட்டங்களுக்கும்  தொகுத்து ஒரு பட்டியல் தயாரித்துள்ளார். இது ஒரு முக்கியமான பட்டியல். சாராம்சம் நிறைந்த பட்டியல்.  இப்பட்டியலில் காணப்படும் மக்கள் பிரச்சனைகளைப் பொதுத்தலைப்புகளில்  இங்கு வரிசைப்படுத்துகிறேன்.

  1. மருத்துவம்/மருத்துவமனை
  2. ரேஷன்
  3. குடி நீர்
  4. பஞ்சாயத்து நிர்வாகம்
  5. மது
  6. விவசாயம்
  7. ஜாதி
  8. அரசு உதவி
  9. சாலை/நடைபாதை
  10. பொது சுகாதாரம்
  11. போக்குவரத்து
  12. நியாய விலை வியாபாரம்
  13. கழிவிட வசதி/வசதியின்மை
  14. வேலைவாய்ப்பு
  15. இருப்பிடம்/வீட்டு வசதி
  16. சிறு தொழில்
  17. தொலைபேசி
  18. கழிவு/கழிவு அப்புறப்படுத்தல்
  19. மதம்
  20. கந்து வட்டி
  21. மயான வசதியின்மை
  22. சுற்றுப்புறத் தூய்மை
  23. கடன் வசதியின்மை
  24. நிலம்
  25. கருத்துப் பரிமாற்றம்/புகார் வசதி
  26. சாலை விளக்கு
  27. சட்டமும் ஒழுங்கும்
  28. நீர்ப் பாசனம்
  29. நூலகம்
  30. கோவில்

மேற்கூறிய பிரச்சனைகளிலிருந்து தலையாய பத்து பிரச்சனைகளை இராமகிருஷ்ணன் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுதியுள்ளார.

  1. குடி நீர்
  2. மருத்துவம்/மருத்துவ மனை
  3. ரேஷன்
  4. போக்குவரத்து
  5. வேலையின்மை
  6. ஜாதிக் கொடுமை
  7. அரசு உதவியின்மை
  8. கழிவிடம் மற்றும் பொது சுகாதாரம்
  9. விளைபொருள் நியாய வியாபாரம்
  10. பாதுகாப்பான வீடு/இருப்பிட வசதி

இதற்குப்பின் முக்கியத்துவம் பெறும் பிரச்சனைகள் என்று இராமகிருஷ்ணன் அறிவிப்பது:

  1. விவசாயம்
  2. குடும்பம்
  3. கல்வி
  4. செய்தித் தாள், டி.வி., சினிமா
  5. சட்டமும் ஒழுங்கும்
  6. மின்சார வசதி/சாலை விளக்கு
  7. பஞ்சாயத்து நிர்வாகம்

பல பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன என்பதையறிய இராமகிருஷ்ணன் முயன்றிருக்கிறார்.  பஞ்சாயத்து மற்றும் அரசாங்க அமைப்புகளின் நிர்வாகச்சீர்கேடு, அரசு உதவி விபரங்களை மக்கள் அறியாமை, உதவி கோரும் கிராம வாசிகளை அதிகாரிகள் அலட்சியம் செய்யும் போக்கு, அரசியல் தலையீடு, ஜாதீயத் தலையீடு, புதிய தொழில் துவங்காமை, முறையாக விநியோகப்படாத ரேஷன் திட்டம் முதலியவை முக்கிய காரணங்கள் எனலாம்.  குடும்ப அமைப்பு, கல்வி, வேலை வாய்ப்பில் ஏற்படும் மாற்றங்கள் முதலியவற்றால் கிராம மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேற்கூறிய பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் அறிஞரை வைத்து ஆராய வேண்டும் என்று பல வருடங்கள் முயற்சி செய்தேன். பல்வேறு காரணங்களால் இம்முயற்சி நிறைவேறவில்லை.  அம்மாதிரி முயற்சிகளை மீண்டும் எடுத்து திட்டத்தை நிறைவேற்றினால் பிரச்சனைகளும், அவற்றின் பின்புலமும் வெளிச்சத்திற்கு வரும். இவ்வெளிச்சத்தில் விவாதம் நடத்த செய்திதாள்கள் மற்றும் டி.வி. முதலிய சாதனங்கள் உதவுமென்றால் அரசினரின் கவனம் ஈர்க்கப்படும். கிராமங்கள் பயனடையும்.

தனியார் புகார்களுக்கும் பொதுமக்கள் சர்வேக்களுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. தனியார் புகார்களுக்கு அரசு செவி சாய்ப்பதில்லை. இம்மாதிரி சர்வேக்களை அக்கறையுள்ளோர் மேற்கொண்டு, மக்களின் புகார்களை ஒன்று சேர்த்து மக்களின் பார்வைக்கு கொண்டு வந்தால், நிர்வாகம் பொது விசாரணைக்குள்ளாகிறது. அரசும், நிர்வாகமும் பொது விசாரணைக்குப் பணிந்து, கிராம மக்களின் பிரச்சனைகளுக்கு நிஜத்தீர்வு காண முன் வரலாம்.எனவே இம்மாதிரி சர்வேக்களுக்கு  முக்கியத்துவம் கொடுப்பது செய்தித்தாள்கள், டி.வி முதலிய சாதனங்களின் கடமையும், சமூக சேவையுமாகும்.

இதுவரை வெளியிடப்படாத இந்த ரிப்போர்ட்டையும், முடிவுகளையும் இந்தியாவின் 72 ஆவது சுதந்திரநாளன்று வெளியிடுவது பொருத்தமானது என்ற எண்ணத்தில் இவ்வாவணத்தை எனது இன்டெர்னெட் படிப்பறையில் (internet blog) இன்று இணைத்துள்ளேன். மக்கள் சர்வே 18 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதெனிலும், இதன் முடிவுகளையும், பிரச்சனைப் பட்டியலையும் இன்றும் ஆராய்வது இந்தியக் கிராமங்களுக்குப் பயன் தருமென்று கருதுகிறேன்.

நேர்காணல் திட்டத்திற்கு இந்தியாவிலிருந்து உதவிய பலருக்கு நன்றி சொல்வது என் கடமை. நேர்காணல் செய்த ஊழியர்களைத் தேர்ந்தெடுத்தல், நேர்காணல் முடிவுகளைச் சேகரித்தல், ரிப்போர்ட் எழுதுதல் முதலிய பணிகளில் ஈடுபட்ட எழுத்தாளர் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி. அவருக்கு உதவிய சமூக சேவை ஊழியர்களுக்கும், இப்பணியில் அவர்க்கு உதவிய நண்பர்களுக்கும் நன்றி. நேர்காணலுக்கு சம்மதித்து பல வினாக்களுக்கு பதிலளித்த 23 மாவட்டங்களில் உள்ள கிராம மக்களுக்கு மனமார்ந்த நன்றி.

நடராஜன் முருகானந்தம்

ஹில்ஸ்பரோ, நியூ ஜெர்சி

ஆகஸ்ட் 15, 2018

You Might Also Like