Star Mountain

My travels and other interests

அரசுதமிழ்நாடு நேற்று இன்று நாளை

மைய – மாநில அரசுகளின் உறவுகள் (1997)

மைய – மாநில அரசுகளின் உறவுகள்
கு.ச. ஆனந்தன்
வழக்குரைஞர்
கோபிசெட்டிப்பாளையம்

மைய – மாநில அரசுகளின் உறவுகள்

இந்தியா, தனித்த மொழி, மரபு, பண்பாடு, நிலப்பரப்பு வரலாற்றுகளைக் கொண்ட பல்வேறு “மொழித் தேசிய இனங்களைத்” (Linguistic Nationalities) தன்னகத்தே பெற்றுத் திகழ்கிற ஒரு பரந்த நாடு. அவ்வேற்றுமைகளில் ஒற்றுமையைக் காண்பதற்காக, “கூட்டாட்சி அமைப்பு முறையே” (Federal Setup) சாலச்சிறந்தது. அரசமைப்பின் மூலமாக அத் தனிநிலப்பகுதிகளுக்கு முழுத்தன்னாட்சியைத் தந்தும் அவற்றை இணைக்கும் மத்திய அமைப்புக்கு, பாதுகாப்பு, பொதுநலன்கள் போன்றவற்றிற்குரிய குறிப்பிட்ட சில அதிகாரங்களை வழங்கியும், கூட்டாட்சி நாடு செயல்படும்.  முன்னவை அதன் “மாநிலங்கள்” என்றும் பின்னது “மத்திய அரசு” என்றும் பெயர் பெறும். அவற்றிற்கிடையே நிலவும் அரசியல், பொருளியல், சட்டமியற்றல், நிதி, நிர்வாகத் தொடர்புகளை, “மைய – மாநில அரசுகளின் உறவுகள்” என்கிறோம்.

மேலாண்மை மைய அரசு

இந்தியா ஒரு மெய்யான கூட்டாட்சி நாடு அல்ல; அரைகுறைக் கூட்டாட்சி (Quasi Federation); மைய அரசின் மேலாண்மை படைத்த கூட்டாட்சி (Paramount Federation); அதன் மாநிலங்கள் மத்திய அரசையே நிரந்தரமாக அண்டிக்கிடக்கும்; என்றெல்லாம் அரசமைப்பு வல்லுநர்கள் கருத்துக் கூறுகின்றனர். இந்திய அரசமைப்பு, வல்லாண்மை கொண்டதொரு மைய அரசையும், குறிக்கப்பட்ட சில அதிகாரங்களை மட்டுமே பெற்றுள்ள மாநிலங்களையும் படைத்துள்ளது. எனவே அமெரிக்க ஐக்கிய நாட்டைப் போன்ற மைய – மாநில சமநிலை உறவுகள் இந்தியாவில் இல்லை. இங்கு ஆண்டான் – அடிமை உறவே உள்ளது.

சிக்கல் உறவு

இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்த 1950 ஆம் ஆண்டு சனவரி 26க்குப் பின்னர், சில ஆண்டுகளிலேயே, மைய – மாநில உறவுகளில் பல சிக்கல்கள் தோன்றிவிட்டன. மாநில எல்லைப் போராட்டங்கள், நதிநீர்ச் சிக்கல்கள், தனிமாநிலக் கோரிக்கைகள், தன்னாட்சிக் கிளர்ச்சிகள், நிதி மூலங்களின் விரிவு வேண்டுதல், மொழி உரிமை நசுக்கப்படுதல், தொழில்களை அமைப்பதில், மைய அரசின் மாற்றாந்தாய்போக்கு, தனிநாடு கோரிக்கைகள் போன்றவை அவற்றில் சில. எனினும், விடுதலை இயக்கத்தின் பல மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்களாகப் பின்னர் பொறுப்பேற்றிருந்ததால், முறையற்ற மைய – மாநில உறவுகளும், மாநிலக் கோரிக்கைகளும் “அனைத்திந்திய ஒருமைப்பாடு” என்ற பணிப்படலத்தால் மூடிமறைக்கப்பட்டன. மைய – மாநில உறவுகளில் மாநிலங்களுக்கு அதிகத் தன்னாட்சி அதிகாரங்கள் வேண்டுமென்ற கோரிக்கைகளும், அரசமைப்பு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமென்ற அறிவு நிலை விளக்கங்களும் குறுகிய “பிராந்திய வாதம்”, “பிரிவினை முயற்சி” என்று கொச்சைப் படுத்தப்பட்டு, மைய அரசால் ஒதுக்கித்தள்ளப்பட்டன. குறிப்பாகத் தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளும், பொருளியல் வளர்ச்சியும் புறந்தள்ளப்பட்டன.

தமிழ் நாட்டிற்கும் இந்திய நடுவண் அரசுக்கும் இடையே நிலவி வரும் சட்டமியற்றும் நிதி, நிர்வாக உறவுகளை நம் நாடு விடுதலையடைந்த 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 15-ஆம் நாளிலிருந்து புதிய மைய-மாநில அரசுகள் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட 1966-ஆம் ஆண்டு வரையு ‘நேற்று’ என்ற தலைப்பிலும்; அதன் பின்னர் 1997-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் இறுதி வரை “இன்று” என்ற பகுப்பிலும்;  அவற்றின் வளர்ச்சி – தளர்ச்சிப் போக்குகளின் அடிப்படையில், இனி உருவாகவுள்ள புதிய மைய – மாநில உறவுகளை “நாளை” என்ற பகுதியிலும், சுருக்கமாகத் தருவதே இக்கட்டுரையின் நோக்கமும் நுவல் பொருளுமாகும்.

மைய – மாநில உறவுகள்

இந்தியா, தனித்த மொழி, மரபு, பண்பாடு, வரலாறுகளைக் கொண்ட பல்வேறு “மொழித் தேசிய இனங்களைத்” (Linguistic Nationalities) தன்னகத்தே பெற்றுத் திகழ்கின்ற ஒரு பரந்த நாடு.  அவ்வின மக்கள் தத்தம் மொழித் தாயகங்களில் பன்னூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.  அவர்தம் வேற்றுமைகளினூடே நிலையான ஒற்றுமையைப் பேணுவதற்குக் “கூட்டாட்சி முறையே” (Federal setup) சாலச் சிறந்தது. அவற்றின் தன்னுரிமைகளுக்கும் தனித் தன்மைகளுக்கும் ஊறு நேரா வண்ணம் அரசியல், பொருளியல், மொழி, பண்பாடு, சமுதாயத் தளங்களில் வளர்ச்சியை நல்கும் முழுமையான தன்னாட்சியைத் தந்து; பொது நலன்களைக் காப்பதற்காக அவற்றால் அமைக்கப்படும் ஒரு நடுவண் அமைப்புக்குச் சில குறிப்பிட்ட அதிகாரங்களை மட்டும் விட்டுக் கொடுத்து, இந்திய நாட்டை ஒரு “மெய்யான கூட்டாட்சி நாடாக;” (True Federation) அமைப்பது இன்றியமையாதது.  அம் மைய அமைப்பு “நடுவண் அரசு” (Federal Government) என்றும், அம்மொழித் தன்னாட்சித் தாயகங்கள் ‘மாநிலங்கள்’ (States) என்றும் பெயர் பெறும்.

கூட்டாட்சி நாட்டில் நடுவண் – மாநில அரசுகள் அதனதன் அதிகார வட்டத்தினுள் நின்று, ஒன்று மற்றொன்றை ஊடுருவாமல் செப்பமாக ஆட்சி நடத்துவதற்குரிய அதிகாரங்களை, “அரசியலமைப்பு” (Constitution) என்றும், இதனைப்  பகிர்ந்தளிப்பதில்  அம் மைய – மாநில அரசுகளுக்குக்கிடையே நிலவ வேண்டிய நிதி, நிர்வாக, அரசியல், பொருளியல், சட்டமியற்றுதல் தொடர்புகளையே “மத்திய – மாநில உறவுகள்” (Central State Relations) என்று கூறுகிறோம்.

நேற்று

இந்திய நாட்டில் “மைய  – மாநில உறவுகள்” என்பது சுதந்திரத்திற்குப் பிந்தைய காலப் பகுதியில் மட்டுமே தோன்றியவை அல்ல.  அதற்கும் பல்லாண்டு கால பரிணாம வளர்ச்சியுண்டு.  அதனைப் பற்றிய சுருக்கமான கருத்தோட்டத்தையாவது அறியாமல், சென்ற ஐம்பது ஆண்டுகளில் நடைமுறைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டு, வருங்கால நிலையினைத் துல்லியமாகக் கணித்துவிட முடியாது. எனவே, அதனைப் புலனறியத் தேவையான சென்ற கால சில மூலக்கூறுகளை மட்டும் தவிர்க்க இயலாமல் இதில் தந்துள்ளேன்.

பண்டைய தமிழகத்தில் மைய – மாநில உறவுகள்

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்ற மாந்தர் இன ஒருமைப்பாட்டுக் கொள்கையை வையகத்திற்கு வழங்கிய பண்டைத் “தமிழ்கூறும் நல்லுலகம்” தனித்ததோர் நாகரீகத்திற்குத் தாயகம்.  அது தமிழினத்தைப் படைத்தது;  உயர் தனிச் செம்மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி பல மொழிகளுக்குத் தாய்மொழி.  தமிழகத்தின் வரலாறு மிகத் தொன்மை வாய்ததது.  வடபுலத்துப் பேரரசுகள் இதனை என்றுமே தன்னகப் படுத்தியதில்லை.  தமிழும், தமிழினமும், நாகரிகமும் ஒவ்வொரு கால கட்டத்திலும் வரலாற்றுச் சுமைகளையும் விளைவுகளையும் தாங்கிக் கொண்டன;  அயல்வழிப் பண்பாடுகளையும் அவ்வப்போது ஏற்றுக் கொண்டன;  அதனால் சில சிதறல்களைச் சந்தித்ததேயன்றித் தம்மை முழுமையாக இழந்து விடவில்லை.

சங்க காலத் தமிழகம் சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு நாடுகளைக் கொண்டிருந்தது.  இவை தவிர குறுநில மன்னர்கள் பலரும் தன்னாட்சி செலுத்தினர்.  தமிழ்மொழி-இனம் சார்ந்த பல நாடுகள் – பல்லாட்சிகள் இருந்தன. அவற்றினிடையே ஆட்சியில் உறவுகள் நிலவின.  போர்களில் தோற்ற நாட்டினர் வெற்றி பெற்ற நாட்டினருக்குக் கப்பம் கட்டிவிட்டு தத்தம் நாடுகளில் தன்னாட்சி செலுத்தினர்.

பிற்காலத் தமிழகத்தில் தோன்றிய பல்லவ, சோழ, பாண்டிய, விசயநகரப் பேரரசுகளுக்குள் அடங்கிய தனி நாடுகள் இன்றைய இந்திய மாநிலங்களைப் போலவே பல மண்டலங்களாகப் பகுக்கப்பட்டு இருந்தன.  அவை பேரரசுகளின் மேலாட்சியை மட்டும் ஏற்றுக் கொண்டு திரையையும் வணக்கத்தையும் தந்துவிட்டு, தத்தம் மொழி, இன, பண்பாட்டுக்கு இடையூறின்றி முழுத் தன்னாட்சியுடன் இயங்கி வந்தன.

ஆங்கிலேயப் பேரரசில் மைய  – மாநில உறவுகள்

ஆங்கிலக் கிழக்கிந்திய குழுமத்தால் (British  East India Company) தமிழ்நாடு அடிமைப்படுத்தப்பட்ட காலத்தில் முதன் முதலாகச் சென்னைத் தலைமாகாணமாகி (Madras Presidency, அக்குழுமத்தின் இயக்குநர் குழுவுடனும் பிரித்தானிய அரசுச் செயலருடனும் மாநில – மையத் தொடர்பைக் கொண்டிருந்தது.  பின்னர் ஆங்கிலப் பேரரசின் நேரடி நிர்வாக வசதிக்காகச் சில தெலுங்கு – கன்னட – மலையாள மொழிப் பகுதிகளுடன் சேர்க்கப்பட்ட “சென்னை மாகாணமாக” (Madras Province) உருவாக்கப்பட்ட போது, குறிப்பான சில அதிகாரங்களுடன் அன்றைய மைய அரசான கவர்னர் ஜெனரல் மற்றும் அவர் குழுவுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தது.  பின்னர் இந்திய அரசமைப்பால் அமைக்கப்பட்ட விடுதலை பெற்ற பாரதம் எனப்படும் இந்திய ஒன்றத்தினுள் (Union of India) அடங்கிய மாநிலமாகி (State);  1956-ஆம் ஆண்டில் மற்ற மொழிப் பகுதிகள் நீங்கிய தமிழ்த் தேசிய இனத்தின் தாயகமாகச் சுருங்கி; 1969-ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா அவர்களின் கடும் முயற்சியால் “தமிழ்நாடு” என்ற தன் இழந்த பெயரை மீண்டும் பெற்று; அதன் பின்னர் இன்று வரையிலும் இந்திய அரசியல் சட்டத்தால் மாநிலங்களுக்கு நெருக்கிச் சுருக்கித் தரப்பட்ட அரசியல், பொருளியல், சட்டமியற்று, நிதி, நிர்வாக உறவுகளுடன் மைய அரசுடன் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு இயங்கி வருகிறது.

இந்திய அரசமைப்பில் மைய-மாநில உறவுகள்

“இந்திய அரசமைப்பு”, 13-12-1946 முல் 26-1-1950 வரை ஏறத்தாழ 1138 நாட்களில் பல பேரறிஞர்களின் கடும் உழைப்புக்குப் பிறகு உருவாயிற்று. அக்காலப் பகுதி இந்திய வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுப் பகுதி.  ஆனால் அதில் வரையப்பட்ட மைய – மாநில உறவுகளோ ஆங்கில ஏகாதிபத்திய அரசு, அடிமை இந்தியாவிற்குத் தந்த 1935-ஆம் ஆண்டின் அரசுச் சட்டத்தின் மறுபதிப்பாக விளங்குகிறது. அரசமைப்பின் வழியாக மெய்யான கூட்டாட்சி அமையவில்லை; மாறாக அதன் சாயல் மட்டுமே அதில் இடம் பெற்றது.  வல்லாண்மை நடுவண் அரசும் வலிவற்ற மாநிலங்களும் அதன் சிறப்புப் படைப்புகள்.

இந்திய அரசமைப்பில், ஆட்சி அதிகாரங்கள் மூன்று பட்டியல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  அவை “சட்டமியற்று அதிகாரங்கள்” எனப்படும்.  மத்திய அரசின் சட்டமியற்றுப் பட்டியலில் 97 அதிகாரங்களும், மாநில அதிகாரப் பட்டியலில் 66 இனங்களும், மைய – மாநில அரசுகள் இரண்டும் செயல்படத்தக்க பொதுப் பட்டியலில் 47 அதிகாரப் பதிவுகளும் இடம் பெற்றுள்ளன.  அரசமைப்புத் திருத்தத்திற்குப் பின்பு மாநில அதிகாரங்கள் 61-ஆகக் குறைந்துவிட்டன. பல விதிகளின் செயற்பாட்டின் காரணமாகத் தற்போது மாநில அரசுகள் வெறும் 19 அதிகாரப் பதிவுகளில் மட்டுமே தனித்தும் முழுமையாகவும், பயனுடனும் சட்டமியற்றி, ஆட்சி செய்ய இயலும்.  ஆனால் மைய அரசோ பொதுப் பட்டியலின் 47 இனங்களையும் சேர்த்து 144 அதிகாரங்களுடன் இயங்கி வருகிறது.  இவையன்றி மாநில அரசுகளைக் கொத்தடிமைகளாக்கும் வேறு பல ஏற்பாடுகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்யப்பட்டுள்ளன. மாநிலங்கள் மேல் மைய அரசு பிறப்பிக்கும் நிர்வாக்க் கட்டளைகள்  அதன் முகவரான ஆளுநரோ மாநில அரசின் தலைவர் அவருடைய வரையறை செய்யப்படாத விரும்பு அதிகாரங்கள் (Discretionary Powers); மாநிலச் சட்டங்களுக்கு இசைவு தருவதில் அவர் செய்யும் இடர்ப்பாடு; மத்திய அரசின் ஆளும் கட்சிக் கொள்கைகளை ஆளுநர் மூலமாக தடி விதிக்கும் மறைநிலை முறை, அனைந்திந்திய அரசின் பணிகள் (All India Services) மூலமாக மாநில அரசுகளை முடமாக்கும் வழிகள்; மாநில ஆட்சிகளைக் காரணமின்றிக் கலைக்கும் சட்டப்பிரிவு – 356 போன்ற கொடுமையான நெருக்கடிநிலை விதிகள்; இந்திய ஆட்சிமொழியின் வல்லாண்மை, அரசியல் சட்டத் திருத்தத்தில் மாநிலங்களுக்குப் பங்கின்மை; மாநில மக்களுக்குத் தனி “மாநிலக் குடியுரிமை” (State Citizenship) வழங்கப் படாமை, மாநிலங்களுக்கு இறையாண்மையின்மை, மாநிலங்களை நிலையாக வறுமையில் ஆழ்த்தும் சுருங்கிய நிதி மூலங்கள், நாடாளுமன்றச் சட்டங்களுக்கும் நடுவண் அரசின் நிர்வாகத்திற்கும் இயைந்தே மாநில அரசுகள் இயங்க வேண்டிய கட்டுப்பாடு;  பொதுப் பட்டியலில், நடுவணரசு சட்டமியற்றினால் மாநிலங்கள் சட்டமியற்ற முடியாமை, மாநிலங்களின் நிலப்பகுதிகளைத் திருத்தவும், மாற்றவும், அழிக்கவும், மாநிலச் சட்ட மேலவைகளைப் படைக்கவும், அழிக்கவும் மைய அரசு பெற்ற பேரதிகாரம்; மாநிலப் பட்டியலின் அதிகாரங்களை மாநிலங்களவைத் தீர்மானத்தின் மூலமாகப் பறித்துக் கொள்வதற்குரிய வழிவகை; நாடாளுமன்றம் சில சூழ்நிலைகளில் மாநில ஆட்சி அதிகாரங்களில் ஊடுருவும் இயல்பு,  இன்னோரன்ன  மாநிலத் தன்னாட்சியை முறியடிக்கும் வேறுபல ஏற்பாடுகளும் இன்றைய நமது அரசமைப்பில்  இடம்  பெற்றுள்ளன.  அது மாநிலங்களின் உரிமைப் பட்டயம் அன்று;  மாறாக மாநிலங்களின் அடிமை முறி.

உண்மைக் கூட்டாட்சி நாடான அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நிலவுகிற மைய – மாநிலச் “சமநிலை உறவுகள்” (Equivalent Relationship) இந்திய நாட்டில் இல்லை.  இங்கிருப்பதெல்லாம் “ஆண்டான் – அடிமை உறவே”.

மத்திய  –  மாநில உறவுகளில் தீர்க்கமுடியாத சிக்கல்கள் தோன்றி வளர்வதற்கு, வற்றாத ஊற்றாகவிளங்குவது இந்திய அரசமைப்பே.

 தொடக்கநிலை உறவுகள்

காங்கிரஸ் கட்சி ஒரு மையப்படுத்தப்பட்ட கட்சி,  அதன் மாநில அமைப்புகளுக்கு உரிமைகள் தரப்படுவது இல்லை.  மையச் செயற்குழுவே அனைத்துக்கும் பொறுப்பானது.  பொதுவாக காங்கிரசுக் கட்சியின் தலைவரே இந்திய நாட்டின் தலைமை அமைச்சராகவும் தேர்தெடுக்கப்படுவார்.  1964ஆம் ஆண்டு வரை பண்டித ஜவர்கர்லால் நேரு அவர்கள் அக்கட்சியின் புகழ் பெற்ற தலைவராகவும் இந்திய நாட்டின் முடிசூடா மன்னராகவும் விளங்கினார்.  மத்திய – மாநில அரசுகளில் உறவுகள் அனைத்துமே “நேரு மயம்”.

அரசமைப்பு நடைமுறைக்கு வந்த ஈராண்டுகளுக்குள், அதனைத் திரித்து வளைத்த பெருமை காங்கிரசுக்கே உண்டு. தமிழத்தில் தான் முதன் முதலாக அரங்கேறியது.  எதிர்கால நடைமுறைக்குத் தவறானதொரு முற்சான்றைக் காங்கிரஸ் படைத்தது.

1952-ஆம் ஆண்டில் முதல் பொதுத் தேர்தல் முடிந்தது.  பிரிக்கப்படாத சென்னை மாகாண சட்டப் பேரவையின் மொத்த 375 உறுப்பினர்களில் 155 சட்ட மன்ற உறுப்பினர்கள் மட்டுமே காங்கிரஸ் பெற்றிருந்ததால், அமைச்சரவையை அமைப்பதற்கு வாய்ப்பேற்படவில்லை.  ஆந்திர கேசரி டி. பிரகாசம் அவர்கள் கிசான் மஸ்தூர் பிரசாக் கட்சியுடன் இணைந்து 188 உறுப்பினர்கள் கொண்ட ஜனநாயக முன்னணியை அமைத்து, கூட்டு அமைச்சரவையை அமைப்பதற்குரிய நிகரப் பெரும்பாண்மையைப் பெற்றிருந்தார். அன்றைய ஆளுநராக இருந்த சிர. பிரகாசா அவர்கள் காங்கிரஸ் மத்திய ஆட்சியுடன் கூட்டுச் சதி செய்து, காங்கிரசைத் தவிர வேறு கட்சிகள்  அமைச்சரவையை அமைக்கக் கூடாது என்று உள்நோக்கத்துடன், அரசமைப்பால் வரையரைப்படுத்தப் படாத – ஆளூநரின் விருப்பு அதிகாரத்தை (Discretionary Power), குடியரசு முறைக்கு எதிராகப் பயன்படுத்தி, சட்டமன்றம் கூடுவதற்கு முன்னால் ஏற்படுத்தப்பட்ட ஒரு புதிய அரசியல் கட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்; ஜனநாயக முன்னனி, அமைச்சரவையை அமைக்கக் கூடாது என்றும் கூறி ஒரு புதிய காங்கிரசு அரசமைப்புச் சரித்திரத்தை வெளிப்படுத்தினார்.  இத்தனைக்கும் அரசியற் சட்டத்தில் “அரசியல் கட்சி” என்ற சொல் எங்குமே பயன்படுத்தப்படவில்லை.

மூதறிஞர் இராஜாஜி அவர்கள் காங்கிரசை நாடினார். பல சுயேச்சைகளை அமைச்சர் பதவி தருவதாகக் கவர்ந்து, மைய அரசின் முகவரான ஆளுநரின் தயவால் முதலமைச்சர் ஆனார்.  அடுத்து சில ஆண்டுகளில் மூதறிஞர் இறக்கப்பட்டுப் பெருந்தலைவர் காமராசர் அரியணை ஏறினார்.

பண்டித நேரு அவர்களுக்கும் பெருந்தலைவருக்கும் இடையில் நிலவிய தனி மனித – மற்றும் கட்சி உறவுகளே அன்றைய மைய – மாநில உறவுகளாகி விட்டன.

தொடக்கத்தில் மாநிலத் தலைவர்கள் மையத்தின் வலுவான வேர்களாகத் திகழ்ந்தனர்.  அரசமைப்புக்கும் அப்பாற்பட்டு, காங்கிரஸ் தலைவர்கள் கட்சி மட்டத்தில் பேசி, முடிவெடுத்து, பல அரிய மாநில அதிகாரங்களை மையத்துக்குத் தந்து விட்டனர்.

1956 ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது கட்சி உறவின் காரணமாகத் தமிழகத்தின் பண்டைய நிலப்பகுதிகள் மற்ற மாநிலங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டன. மாநில அரசின் நிதிமூலங்களில் மிக முக்கியமானது “விற்பனை வரி”. “தேசிய வளர்ச்சி மன்றக்” (National Development Council)  கூட்டத்தில் கலந்து கொண்ட பெருந்தலைவர் காமராசர், தன் தலைவரான பண்டித நேரு அவர்களின் கொள்கைக்குக் கட்டுப்பட்டுக் காமதேனு போன்ற விரிவடையும் வருவாயைத் தமிழகத்திற்கு ஈட்டித்தரும் ஜவுளி, பட்டு, புகையிலை, சர்க்கரை மீதான விற்பனை வரி உரிமைகளை அரசமைப்புக்கும் மீறி நடுவண் அரசுக்கு வழங்கி விட்டார்.  அவற்றின் விற்பனை வரியை மைய அரசு பல மடங்கு உயர்த்தி விட்டது.  அதிலிருந்து பெறப்படும் மேல் வரியின் ஒரு பகுதியைத் தமிழகம் கெஞ்சிக் கேட்டும் பயனில்லை.  இழந்தவை என்றும்  இழந்தவை தான்;  அவற்றை மீண்டும் பெறமுடியாது.  அதைப் போலவே மக்களிடம் கடன் பெறக்கூடிய முன் உரிமையையும் தமிழகம் இழந்து விட்டது.

பெருந்தலைவர் அவர்கள் மிகச் சிறந்த நிர்வாகி;  ஏழை பங்காளி, எளிமையின் சின்னம்.  தமிழகத்தின் முதன்மை வழிகாட்டி.  1952 முதல் 1967 ஆம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் மத்திய – தமிழ் மாநில உறவுகளில் “சுமூக நிலையே” நீடித்தது.  என்றாலும் தமிழகத்தின் அதிகாரங்களும், நிலப்பகுதிகளும், மொழி உரிமையும் மையத்தின் கண்ணோட்டத்திற்காக விட்டுத் தரப்பட்டன.  பொருளியல் துறையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது.  பெருந் தொழில்கள் இங்கு அமைக்கப்படவில்லை.  வடநாட்டு மார்வரி, குஜராத்தி, பார்சி முதலாளியத்திற்குத் தமிழ்நாடு வேட்டைக்காடு ஆயிற்று.  “வடக்கு வாழ்கிறது;  தெற்கு தேய்கிறது” என்ற செறிவான முழக்கத்தால், அறிஞர் அண்ணா அவர்கள் அந்த அவலத்தை எடுத்து விளக்கினார்.  தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளும் கூட “இந்திய ஒருமைப்பாடு” என்ற முழக்கத்தால் முழ்கடிக்கப்பட்டன.  மாநிலங்களுக்கு அதிகத் தன்னாட்சி அதிகாரங்கள் வேண்டும் என்ற கிளர்ச்சிகளும், அரசமைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற அறிவுநிறை விளக்கங்களும் கூட “குறுகிய பிராந்திய வாதம்” என்றும் “பிரிவினை முயற்சி” என்றும் திரிபு படுத்தப்பட்டன.  அன்றைய மைய – மாநில சுமுக உறவுகளினூடே இழையோடிய தமிழ்த் தேசியத் தன்னுரிமை உணர்வுகள் பனிப்படலம் போல மறைக்கப்பட்டன, என்றாலும் தமிழ்நாட்டில் மைய – மாநிலப் பிணக்குகள் வளர்வதறகுரிய சூழ்நிலை அன்றே படந்து நின்றது.

நீறுபூத்த நெருப்பு

விடுதலைக்கு முன்பிருந்தே, திராவிடக் குருதி இனத்தை (Race) மூலமாக வைத்து, தமிழத் தேசியத்தை நடைமுறைக்  கோட்பாடாக ஏற்றுக் கொண்ட “திராவிடர் கழகம்” ஓரளவு வளர்ந்திருந்தது.  தமிழரின் தன்னாட்சி உரிமை கோரும் இயக்கமாக வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே அது வேரூன்றி நின்றது.  “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற தமிழின விடுதலையை 1939 ஆம் ஆண்டு முன் வைத்த தந்தை பெரியார் அவர்கள், பின்னர் தமிழ் – ஆந்திர – கேரள – கர்நாடக மொழி நிலப் பகுதிகள் இணைந்த சென்னை மாகாணம் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து “திராவிட நாடு” என்ற தனி நாடாகப் பிரிந்து, அந்நான்கு திராவிட மொழித் தேசிய இனங்களும் மொழிவழித் தனிப்பட்டு, இன வழி ஒன்றுபட்டு, திராவிட குடியரசுக் கூட்டமைக் கூட்டாட்சியாக மலர வேண்டுமென்ற அரசியல் முழக்கமான “திராவிட நாடு திராவிடருக்கே” என்பதை வலியுறுத்தி வந்தார்.

1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ம் நாளில் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து “திராவிட முன்னேற்றக் கழகம்” ஓர் அரசியல் கட்சியாக உருவெடுத்தது.  குருதியினம் என்ற அடிப்படையில் “திராவிடர்” என்றும், தேசிய இனம் என்ற வகையில் “தமிழர்” என்றும் எடுத்துக்காட்டி; தமிழர் வரலாறு, பண்பாடு தன்னுரிமைகள் போன்றவற்றை நிலைநாட்டி; மொழி இனத் தேசியத்தைத் தட்டியெழுப்பி, தமிழகம் தன்னாட்சி பெறுவதற்கான பின்னணியைப் படைத்தது.  ஆனால் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடவில்லை.  பெயரளவில் கூறிவந்தது என்றாலும் படக்காட்சிகள் கிழமை – மாத இதழ்கள், கவிதைகள், இலக்கியங்கள், கலைகள், பொதுக் கூட்டங்கள், போன்ற பொது மக்களின் செய்திச் சாதனங்கள் மூலமாக தமிழ்த் தேசியத்தையே முதன்மைப்படுத்திற்று.

அரசியல் தளத்தில் வன்மையான மைய அரசை எதிர்ப்பதையும், சமுதாய நிலையில் ஏற்றத்தாழ்வை அகற்றுவதையும், அணுகுமுறையில் பகுத்தறிவையும் கொண்டு விளங்கிய தி.மு.கழகம், தமிழ் மக்களிடையே பேராதரவைப் பெற்றது.  அதன் வளர்ச்சிக்குத் தமிழகத்தின் அன்றைய சூழலும் பெருந்துணை செய்தது.  அரசமைப்பு நடைமுறைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே மாநிலங்களில் பல சிக்கல்கள் தோன்றி விட்டன.  தமிழ்நாட்டில் மொழி உரிமைக் கிளர்ச்சிகள் முன் நின்றன;  நிதி மூலங்களில் விரிவாக்கம், தொழில்களை அமைப்பதில் தமிழகத்திற்குரிய உரிமைப்பங்கு, பொருளியல் புறக்கணிப்பை எதிர்த்தல் போன்றவை கழகத்தின் துணைக் கோரிக்கைகளாக வடிவம் பெற்றன.  தமிழ்த்தேசியம் எழுச்சிபெற்றது.

ஒற்றை ஆட்சியைப் பேணும் காங்கிரசுக் கட்சியைச் சார்ந்த மத்திய அரசு இவ்வெழுச்சியைத் தடுப்பதற்காக 1961-ஆம் ஆண்டில் “பிரிவினைத் தடைச் சட்டத்தை” இயற்றி நடைமுறைப் படுத்தியது.  தி.மு. கழகத்தைப் “பிரிவினைச் சக்தி” என்று சாற்றி அச்சட்டத்தின் வாயிலாகத் தேர்தலில் நிற்க முடியாத நிலையையும் – அக்கட்சியே இயங்க முடியாத சூழலையும் தோற்றுவித்தது.  பேரறிஞர் அண்ணாவின் அரிய அரசு தந்திரத்தின் காரணமாகத் தி.மு. கழகம் பிரிவினைக்  கோரிக்கையைக் கைவிட்டது.  அதன் மூலம் மையக் காங்கிரஸ் உருவாக்கிய இக்கட்டான நிலையை மீதூர்ந்து விட்டது.  ஆனால் தன்னாட்சிக்கான காரணங்களை அது கைவிடவில்லை

.“இந்திய மொழி மாநிலங்கள் முழுமையான தன்னாட்சி பெறவேண்டும்; மைய அரசு மெய்யான கூட்டாட்சியாக மலர வேண்டும்”  என்ற புதிய மத்திய – மாநில உறவுக் கோட்பாட்டை 1963-ஆம் ஆண்டிலிருந்து தன் குறிக்கோளாக ஏற்றுத் தீவிரத்துடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மைய அரசுக்கும், தமிழக மக்களுக்குமிடையே இடைவெளி தோன்றியது.  மைய அரசு எதிர்ப்புணர்வுகள் நீறுபூத்த நெருப்பாக அகநிலையில் இயங்கி வந்தன.

உரசல் உறவுகள்

மத்திய அரசு, அரசமைப்பின், “ஆட்சி மொழிப் பகுதியைப்”  பயன்படுத்தி தமிழகத்தில் “எங்கும் இந்தி, எதிலும் இந்தி”  என்ற புதியதோர் இறுக்கச் சூழ்நிலையை உருவாக்கிற்று;  தமிழ் மக்களின் மொழி உரிமையைச் சிதைக்கும் வகையில், “1963-ஆம் ஆண்டின் ஆட்சி மொழிகள், சட்டத்தை” இயற்றி அதனை நடைமுறைப்படுத்தவும் முனைந்தது.  மூதறிஞர் இராசாசி போன்ற தலைவர்களும், மாணவர்களும் கட்சி வேறுபாடின்றி அனைவரும் அதனை எதிர்த்துப் போராடினர்.  திராவிட முன்னேற்றக் கழகம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்நின்று நடத்தியது.  நூற்றுக்கணக்கானோர் மாண்டனர்.  1965-ஆம் ஆண்டின் முற்பகுதியில் தமிழக அரசு கடுமையான அடுக்குமுறையை மேற்கொண்டது.  பயனில்லை;  ஆட்சிமொழிகள் சட்டத்தின் திருத்தம் வந்தது.  தமிழகத்தில் இந்தி, ஆட்சி மொழியாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.  இந்தி எதிர்ப்புப் போர், மத்திய வல்லாண்மையை எதிர்த்த முதல் தமிழ்த் தேசியப் புரட்சி.

1967-ஆம் ஆண்டிலிருந்து, தமிழ் மக்கள் காங்கிரசுக் கட்சியை ஆளும் பொறுப்பிலிருந்து அடியோடு நீக்கி விட்டனர்.  தி.மு. கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது.  காங்கிரசு மைய அரசு அதனை ஏற்குமா?  நிதி – நிர்வாக உறவுகளில் அழுத்தங்கள் நிறைந்தன.  பொதுவாக மைய – மாநில உறவுகளில் உரசல்கள் தொடங்கின.

விரிசல் உறவுகள்

மைய-மாநில உறவுகளில் நிலவி வரும் ஆண்டான் அடிமைத் தொடர்பை நீக்கவும், தமிழகம் முழுத் தன்னாட்சியுடன் இயங்கவும், நடுவண்அரசு மெய்யான கூட்டாட்சியைப் பெற்றிடவும், இந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தவும் தேவையான வழிவகைகளை அரசமைப்பில் இடம்பெறச் செய்தற்குரிய பரிந்துரைகளைச் செய்வதற்காக, இந்திய நாட்டிலேயே முதன் முதலாக ஒரு “மைய-மாநில உறவுகள் ஆய்வுக்குழுவை” 9-8-1969-ஆம் நாளில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் நீதியரசர் இராசமன்னார் தலைமையில் அமர்த்தம் செய்தார்.  நீண்ட ஆய்வுக்குப் பின்னர் அக்குழு அரசமைப்பில் பல திருத்தங்களைச் செய்யவேண்டுமெனப் பரிந்துரைத்து, அரியதோர் அறிக்கையைத் தந்தது.  அதன் அடிப்படையில் “பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், போக்குவரத்துத் தொடர்புகள், நாணயச் செலவாணி” ஆகிய தேசிய நலனுக்குரிய அதிகாரங்களை மைய அரசு பெறவேண்டும்;  எஞ்சிய அதிகாரங்கள் உட்பட அனைத்து அதிகாரங்களையும் மாநிலங்கள் பெறவேண்டும்”  என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க “மாநிலத் தன்னாட்சித் தீர்மானத்தை”, 1974-ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களில் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை – மேலவைகள் நிறைவேற்றின. அன்றிலிருந்து திராவிட முன்னேற்ற கழகத்தில் தலைமையிலான தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டன.

இந்திரா அலையில் உறவுகள்

அரசமைப்பையும் மீறி நடுவனண் அரசில் அதிகாரங்களைக் குவிப்பதற்கு முழு முதற்காரணமாக காங்கிரஸ் கட்சியின் பல்லாண்டுகள் தொடர் செயல்முறை, “தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார நலன்களுக்கு மாநில அரசு காரணமன்று;  மாறாக டெல்லியில் உள்ள மைய அரசே காரணம்” என்ற மனப்பான்மையைத் தோற்றுவித்து விட்டது.  இந்திராகாந்தி தலைமையமைச்சரான பின்னால் இம்மனப்பான்மையை மேலும் விரிவடையச் செய்தார்.  கட்சி மட்டத்தில் சர்வாதிகாரம்; நாடாளுமன்றத்தில் ஒடுக்குமுறை, குடியரசுத் தலைவரின் அமர்த்தத்தில் தன் முனைப்பு, மாநில மட்டத்தில் ஒற்றையாட்சி, நடுவண் அரசின் மையப்புள்ளி, அனைத்துப் புலங்களிலும் “ஜனநாயகம்” போய், “இந்திரா நாயகமாக” மாறிவிட்டது.  காமராசர் வளர்த்த தமிழகக் காங்கிரஸ் அதன் தனித்தன்மையை இழந்து, நியமனத் தலைவர்கள் மூலம் கட்சியை நடத்தும் புதிய கலாச்சாரம் புகுத்தப்பட்டது.  “ஆமாம் சாமிகளால்” மாநில உறவுகள் நிர்ணயிக்கப்பட்டன.  இந்திரா அவையில் அரசமைப்புப் புறந்தள்ளப்பட்டு மைய – மாநில உறவுகள் தலைமையமைச்சர் என்ற ஒரு தனி மனிதராலேயே வடிவமைக்கப்பட்டன.

ஆனால் தமிழகத்தில் காங்கிரசுக் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை.  மக்கள் அதனைத் தொடர்ந்து புறக்கணித்தனர்.  மக்களின் தீர்ப்பையும் மீறி, காங்கிரசே எங்கும் ஆட்சி செய்யவேண்டும்; அதற்கேற்ற வகையில் நடுவண் அரசை இயக்க வேண்டுமென்பதே அதன் நடைமுறை ஏற்பாடு.  அதற்காக மக்களது ஆதரவைப் பெற்ற மாநிலக் கட்சிகளை, மத்திய அரசுத் துறைகளைப் பயன்படுத்தி மிரட்டியும், பிளந்தும்  வந்தது.  அவ்வாறு பிரிந்த பகுதியினைத் தன்னுடன் இணைத்துச் சாதகமாக்கிக் கொண்டு, ஆட்சியைப் பிடிப்பதே அதன் மோசடிக் கொள்கை.  1972-ம் ஆண்டின் இறுதியில் திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் மூலமாக தி.மு. கழகத்தை இந்திரா அம்மையார் இரண்டாகப் பிளந்தார்.  அ.தி.மு.கழகம் காங்கிரசு மத்திய அரசின் வாழ்த்துகளுடன் தோற்றமெடுத்தது.

செயல் இழந்த உறவுகள்

1975-ம் ஆண்டு தன் 25-ம் நாளில் இந்திராகாந்தி அவர்கள் “நெருக்கடி நிலையைக்” கொண்டு வந்து, அதனை வல்லாண்மையுடன் செயல்படுத்தினார்.  மாநில மக்களுக்கும் மாநில அரசுகளுக்கும் மாற்றுக் கட்சிகளுக்கும் அது ஓர் இருண்ட காலம்.  கூட்டாட்சி மறைந்து சர்வாதிகார ஆட்சி தோன்றியது;  அரசமைப்பின் மைய – மாநில உறவுப் பகுதி செயலிழந்துவிட்டது;  மாநில அரசுகள் மத்திய வல்லாட்சிக்கு மண்டியிட்டன.  ஆனால் தி.மு.கழகத் தமிழக அரசு மட்டும் நெருக்கடி நிலையை முழு மூச்சுடன் எதிர்த்தது.  மைய அரசின் ஆணைகளை நிறைவேற்ற மறுத்தது.  பெருந்தலைவர் காமராசரை சிறைப்படுத்த முடியாது எனத் தெளிவாக அறிவித்தது.  அவ்வாண்டில் டிசம்பர் திங்களில் நடைபெற்ற தி.மு.கழக மாநில மாநாட்டில் மைய அரசைக் கடுமையாக விமர்சித்து மாநிலத் தன்னாட்சிக் கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றிற்று.  விளைவு: 1976-ம் ஆண்டு சனவரி 30-ம் நாளில் தி.மு.க அரசு, அரசமைப்பின் 356-ஆம் பிரிவின் மூலமாகக் காரணமின்றிக் கலைக்கப்பட்டது.  கொடிய அடக்குமுறை தாண்டவமாடிற்று.  மைய அரசு, கழகத்தின் மேலும், அதன் தலைவர்களின் மேலும் ஊழல் பழி சுமத்தி அலைக்கழித்தது.  நீதி விசாரணை என்ற பெயரால் பொய் வழக்குகள் புனையப்பட்டன.  ஆனால் அ.தி.மு.க.-வோ அதற்கு வெண் சாமரம் வீசியது.  தமிழக மக்களின் உள்ளங்களில் முதல் முறையாக மைய அரசுக் கெதிரான நீங்காத வடு நிலைத்து விட்டது.  மைய – மாநில உறவுகள் மத்திய ஒற்றையாட்சியின் வடிவத்தைப் பெற்றுக் கொண்டன.

சந்தர்ப்ப வாத உறவுகள்

மைய அரசின் துணையுடன், தமிழகத்தின் ஆட்சியைக் குறுக்கு வழியில் பிடிப்பதற்காக 1976-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1996-ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 20 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி புதியதோர் அரசியல் உத்தியைக் கைக் கொண்டது.  ஏதோ ஒரு திராவிடக் கட்சியுடன் தேர்தல் உறவை ஏற்படுத்திக் கொண்டு மக்கள் ஆதரவைப் பெறவும், இயன்றால் கூட்டு அமைச்சரவையை அமைக்கவும் முயன்று வந்தது.  அதற்காக அவற்றின் தோள்மேல் ஏறிக் கொண்டும் – சில நேரங்களில் இணங்கியும், இன்னும் சில சமயங்களில் பிணங்கியும், அவ்வப்போது மாநில ஆட்சிக் கலைப்பைக் காட்டி மிரட்டியும், தன் “தேர்தல் உறவை” வளர்த்து வந்தது.  அதற்கு ஏற்றாற்போல் மையத்தில் உள்ள காங்கிரஸ் ஆட்சி, அரசமைப்பில் தரப்பட்ட மத்திய -மாநில உறவுகளை வளைத்துத் திரித்துச் செயல்பட்டு வந்தது;  வெறும் அரசியல் சந்தர்ப்பவாத உறவுகளை மட்டுமே தமிழக அரசுடன் வைத்துக் கொண்டியங்கியது.

1977-ஆம் ஆண்டில் தமிழக அரசில் பொறுப்பேற்றுக் கொண்ட அ.தி.மு. கழகம் மைய அரசுக்கு இசைந்த வகையில் பழைய சந்தப்பவாத உறவையே நீடித்து வந்தது.  தமிழகத்தில் வளர்ச்சியேதும் ஏற்படவில்லை.  நிர்வாகத்தில் மந்தப்போக்கு நிலைத்து விட்டது.  அரசமைப்பு உறவுகள் முடங்கின.  ஆனால்  “மாநிலத்திற்கு அதிக அதிகாரங்கள்” என்ற கூக்குரலை மட்டும் தன்னை அடையாளம் காட்டுவதற்காக அவ்வப்போது அ.தி.மு.கழகம் எழுப்பி வந்தது.  1983-ஆம் ஆண்டின் இறுதியில், மாநிலத் தன்னாட்சிக் கோரிக்கையை அடியோடு கைவிட்டு விட்ட அ.தி.மு.கழகம், “மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள்” வழங்க வேண்டும் என்ற உளுத்துப்போனதொரு தீர்மானத்தைத் தமிழகச் சட்டபேரவையில் நிறைவேற்றியது.  1984-ஆம் ஆண்டு சனவரி முதல் வாரத்தில் “தமிழ்நாடு அரசியல் விஞ்ஞானப் பேரவை” அரசின் துணையுடன் “மத்திய  – மாநில உறவுகள்” என்ற கருத்தரங்கத்தை நடத்தியது.  அதில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் இறுதியுரை ஆற்றும் போது, இந்தக் கட்டுரையாசிரியரின் “மலர்க மாநில சுயாட்சி” என்ற பெரு நூலிலுருந்து கூட பல மேற்கோள்கள் காட்டிப் பேசினார்.  முழு மாநிலத் தன்னாட்சி நிலை நிறுத்தும் அந்நூல் மாநிலங்களுக்கு ‘அதிக அதிகாரங்கள்’ என்ற புதிய கோட்பாட்டிற்குத் துணை செய்யவில்லை. கலைஞர் அவர்களும் எம்.ஜி.ஆரின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்தினார்.  சந்தப்பவாத உறவுகள் அவர் ஆட்சிக் காலம் வரை தொடர்ந்து இருந்துவந்தன.

முடங்கிய உறவுகள்

இந்திய நாட்டின் நான்கில் மூன்று பங்கு பொருளாதாரத்தை தன் பிடிக்குள் காங்கிரஸ் மத்திய அரசு வைத்திருந்தது.  இந்திய மொத்த மக்களின் 80 சதவிகிதம் பேரை தேடிச் சென்றடையும் செய்தித் தொடர்பு சாதனங்களும், பெரும் முதலாளிகளால் இயக்கப்படும் காங்கிரசு துதிபாடும் செய்தித் தாள்களும் காங்கிரசு மைய அரசின் காலடியில் கிடந்தன.  இந்திய அரசமைப்பின் எந்தப் பகுதியை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கும் சர்வாதிகார வல்லமையும் காங்கிரஸ் பெற்று இருந்தது.  அரசமைப்பின் துணை கொண்டு சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றி அமைக்கும் முறைகள் 1975-ஆம் ஆண்டிலிருந்து இந்திரா அம்மையாரால் எண்ணம் பெற்றன.  எல்லா மாநில மக்களின் மொழித் தேசிய உணர்வுகள் மங்கியிருந்தாலும், காங்கிரஸ் மைய அரசால் முற்றாக மறைத்தொதுக்க முடியவில்லை.

மையத்திற்கு எதிரான தமிழ் மக்களின் எழுச்சிக்கு வேறு பல பொதுவான காரணங்களும் உண்டு.  45-ஆண்டுகளில் மத்திய அரசு, அரசமைப்புக்கும் அப்பால் சென்று அதன் ஆட்சிக் கட்சியான அனைத்திந்திய காங்கிரஸ்; ஆட்சிமொழி இந்தி; மத்திய மயமாக்கப்பட்ட திட்டக்குழு, ஐந்தாண்டுத் திட்டங்கள், ஒரு தலையாகத் தரப்படும் “விருப்பமான்யங்கள்”, மத்தியக் கடன்கள், பஞ்சாயத்து ராஜ்ஜியம் என்ற பெயரில் மாநில ஊராட்சி, உள்ளாட்சிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நடைமுறை; புதிய கல்வித் திட்டம்; மாநில உயர்நிர்வாக, காவல்துறை அலுவலர்களை மாநாடுகள் மூலமாக மாநிலத்திற்கு எதிராகத் திருப்பிவிடும் போக்கு; மற்றும் இன்னோரன்ன ஒற்றையாட்சி முறையை மேலோம்பும் நிர்வாக, நிதி-சதி முறைகள் போன்றவை மூலமாக நடுவண் அரசு மாநில அரசுகளை குறிப்பாக தமிழ்நாட்டின் அரசை முற்றிலும் முடமாக்கி விட்டது.  மைய – மாநில உறவுகள் முடங்கி விட்டன

.நல்ல வாய்ப்பு நழுவியது

பல மாநிலங்களில் மைய அரசை எதிர்த்துப் பல வகையான கிளர்ச்சிகள் நடந்தன.  காசுமீரம், பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களான நாகலாந்து, மேகாலயா போன்றவை வன்முறை வழியில் பிரிவினை கோரின.  அஸ்ஸாமின் மற்ற மாநிலத்தவரை, வெளியேற்றும் கிளர்ச்சிகளும் உத்தர்கண்டு, தார்க்கண்டு பந்தர்கண்டு, விதர்ப்பா, சித்தகார், போடோ மக்கள் நடத்தும் தனி மாநில அமைப்புப் போராட்டங்களும், காங்கிரஸ் மைய அரசை ஆட்டிப் படைத்தன.  இன்றைய அரசமைப்பினுள் நின்று அவற்றைத் தீர்க்க முடியவில்லை.  தமிழ்நாட்டிலோ முழு மாநிலத் தன்னாட்சியைத் தரவேண்டும்  என்ற அரசியற் கட்சி இயக்கங்கள் வீரியத்துடன் இயங்குகின்றன.  இன்னும் சில அமைப்புகள் “சுய நிர்ணய உரிமை” கோரிப் போராடுகின்றன.  மைய – மாநில உறவுகள் முழுமையாகச் சீர்கெட்டுவிட்டன.  அரசமைப்பு நெருக்கடி (Constitutional Dead lock) ஏற்பட்டு விட்டது.  எனவே இந்திய அரசமைப்பைத் திருத்தியே ஆக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலை தோன்றிவிட்டது. வேறுவழியின்றி 1983-ஆம் ஆண்டில் இந்திராவின் மையஅரசு நீதியரசர் சர்க்காரியா அவர்களின் தலைமையில் “மத்திய மாநில உறவுகள் ஆணைக்குழு” வை அமைத்தது.  அக்குழு மத்திய மாநில உறவுகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கு நிலையைத் தளர்த்துவதற்குரிய சில பரிந்துரைகளைச் செய்தது.  ஆனால் ஒற்றையாட்சியை நடைமுறைப்படுத்தி வந்த தலைமை அமைச்சர் இராஜீவ் காந்தியின் மைய அரசு அதனைக் கிடப்பில் போட்டு விட்டது.  மைய மாநில உறவுப் பிணக்குகளை ஓரளவு தீர்க்க முயன்ற நல்ல வாய்ப்பும் நழுவி விட்டது.  மைய அரசின் ஒற்றையாட்சி உறவுகள் மேலும் தொடர்ந்தன.

ஒடுக்குமுறை உறவுகள்

இலங்கையில் சிங்களப் பேரினம் தமிழனத்தைப் பல்லாண்டுகளாகப் பல துறைகளிலும் ஒடுக்கி வந்தது.  அதன் மைய அரசும் அதற்குத் துணை நின்றது.  தேசிய இனச் சிக்கல்கள் வளர்ந்தன.  தொடக்கத்தில் ஈழத்தமிழர்கள் முழு மாநிலத் தன்னாட்சியைக் கோரினர்.  அது மறுக்கப்பட்டதால் விடுதலை வேட்கையைப் பெற்று, வீரப்புலிகளாகி, தமிழீழத் தனி நாடு கோரினர்.  கொடிய அடக்குமுறை தமிழினத்தின் மேல் ஏவப்பட்டது.  கோரிக்கை நிலையிலிருந்த தமிழ் ஈழம், போராட்டமாக மாறி, புரட்சியாக வெடித்து, இறுதியில் பனிப்போராக மாறி விட்டது.  தன்னாட்சி மறுக்கப்பட்டால், இறுதி விளைவு தனியாட்சியே என்பது வரலாறு தரும் பாடம்.

ஈழத் தமிழினத்தில் தொடர்ந்த செயல்முறைகள், தமிழகத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன.  மீண்டும் தமிழ்த் தேசிய உணர்வு எழுச்சி பெற்றது.  ஈழ விடுதலைக்கு நம் தமிழ்த் தேசிய உணர்வுத் தமிழர் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கினர்.  ஆனால் தொலைநோக்கு இல்லாத ராஜீவ் காந்தியின் வெற்றுநிலை மைய அரசு தமிழ் மக்களின் உணர்வுக் கருத்தோட்டத்தைப் புரிந்து கொள்ளாமல்,  ‘இந்திய அமைதிப் படையை” இலங்கைக்கு அனுப்பி, சிங்கள மைய அரசுடன் இணைந்து, தமிழ் இன அழிப்பிற்குத் துணை நின்றது.  அதனால் இந்திய மைய அரசு, தமிழினத்திற்கே எதிரானதோர் அடக்குமுறை அரசு என்ற தமிழ் மக்களின் மாறாத வெறுப்புணர்ச்சியையும், எதிர்நிலைப் போக்கையும் பெற்றுக் கொண்டது.  மைய அரசின் நடவடிக்கைகள் தமிழக மக்களின் பிரிவினை எண்ணங்களுக்கு மீண்டும் புதிய வடிவம் தந்து விட்டன.

சுமுக உறவுகள்

1989-ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் மத்திய காங்கிரசும் தமிழத்தில் அ.தி.மு. கழகமும் தோல்வியைத் தழுவின.  ஜனதா தளத்தின் அரிய தலைவரும், இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமுமான திரு. வி.பி.சிங் அவர்கள் இந்தியத் தலைமையமைச்சரானார்.  தமிழ்நாட்டில் தி.மு.கழகம் கலைஞர் தலைமையில் அரியணையேற்று மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தருவதற்கும், அதுவரை ஒற்றையாட்சிப் போக்குகளுடன் நடைபெற்ற மத்திய அரசை இயன்ற அளவிற்குக் கூட்டாட்சிப் பாதையில் செலுத்துவதற்கும் தேவையான அரசமைப்புத் திருத்தங்கள் மேற்கொள்வதற்கும்; சிதைந்துபோன மைய – மாநில உறவுகளைச் செப்பனிடுவதற்கும்; பிற்படுத்தப்பட்டவர்களுக்கு “மண்டல ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் படி ஒதுக்கீடு செய்தற்குரிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்கும்; மத வழிப்பட்ட பொய்மைத் தேசியத்தை முறியடிப்பதற்கும்; தலைமை அமைச்சர் வி.பி.சிங்கின் பணியுடன் தன்னை இணைத்துக் கொண்டது.  திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு செயல்முறைகளை முழுமையாக ஆதரித்தது.  ஒத்துழைப்பையும் நல்கியது.  தமிழ்நாட்டில் புதிய அரசியல், நிர்வாக, சமுதாய, பொருளாதாரத் திட்டங்களைத் தீட்டி மைய அரசின் ஆதரவுடன் விரைந்து நடைமுறைப் படுத்திற்று.  தமிழகம் மீண்டும் வளர்ச்சியை நோக்கி வேகமாக நடை போட்டது.  பல ஆண்டுகளுக்கு பின்பு ஒரே வகையான குறிக்கோள்களுடைய காங்கிரஸ் அல்லாத கட்சிகள் மையத்திலும், தமிழகத்திலும், அரசுப் பொறுப்புகளில் இருந்ததால், அவற்றிடையே மிகச் சிறந்த செயலாக்கம் மிக்க “சுமூக உறவுகள்” நிலவின.

கானல் நீர் உறவுகள்

ஒற்றை வல்லாட்சியையும் ஊழலையும் கை வரப்பெற்ற இராசீவின் காங்கிரசும் அதன் உதிரிக் கட்சியான அ.தி.மு.கவும் கூட்டுச் சதி செய்தன.  அரசமைப்புக்கும் மீறியதோர் இக்கட்டான அரசியல் சூழ்நிலையை உருவாக்கின.  மண்டல் ஆணைக்குழு தந்த பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு நடவடிக்கைகளைக் காரணமாக்கி, இராசீவ் காந்தியும், இந்துத்துவப் பிற்போக்குச் சக்தியான பாரதிய ஜனதாக் கட்சியினரும் வி.பி.சிங் அரசை வீழ்த்தினர்.  44 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட திரு. சந்திரசேகர் அவர்கள் இராசீவின் கைப்பாவையாகத் தலைமை அமைச்சரானார்.  தமிழ் நாட்டில் காங்கிரசுடன் இணைந்து அ.தி.மு. கழக ஆட்சியை மீண்டும் குறுக்கு வழியில் கொண்டு வருவதற்காக எந்தவிதமான அரசமைப்புக் காரணமும் காட்டாமல், ஆளுநரின் அறிக்கையும் இல்லாமல் 1991-ம் ஆண்டு இடைப்பகுதியில் இராசீவின் கைப்பாவையான சந்திரசேகர் மூலம் அன்றிருந்த ஒரு தலைச் சார்பான குடியரசுத் தலைவரின் ஆசிகளுடன் தி.மு. கழக அரசு கலைக்கப்பட்டது.  மிகக் குறுகிய சிறுபான்மையைக் கொண்டதொரு நடுவண் அரசு கூட, மிகப் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற தமிழக அரசை அப்பட்டமான தன்னல அரசியல் காரணங்களுக்காகக் கலைத்து விடமுடிந்தது;  அதற்குரிய கொலைக் கருவியான அரசியல் சட்ட விதி 356 இன்னும் நீடிக்கத்தான் வேண்டுமா? நாணமும் நயன்மையுமின்றிக் குடியரசு – கூட்டாட்சிக் கெதிரான உச்சக்கட்டத்தை படைத்த இழிநிலைப் பெருமை, இராசீவ் காந்திக்கே உரியது.  முழுவதும் ஒற்றையாட்சியாக மைய அரசு மாறிவிட்டது.  மைய-மாநில உறவுகள் வெறும் கானல்நீர் ஆகிவிட்டன.

ஊழல் உறவுகள்

இராசீவ் காந்தி கொலையுண்டதால் ஏற்பட்ட அனுதாப அலையின் காரணமாகத் தோன்றிய நரசிம்மராவின் மத்திய அரசும் அ.தி.மு. கழகத் தமிழக அரசும் வரலாறு காணாத வற்றாத ஊழல் அரசுகள்.  இந்திராகாந்தியின் காலத்தில் தொடங்கிய ஊழல்கள் இராசீவால் வளர்க்கப்பட்டு தலைமையமைச்சர் நரசிம்மராவின் ஐந்தாண்டு கால அரசில் பல துறைகளில் பல்கிப் பெருகிவிட்டன.  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதலும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் பகல் கொள்ளையடிக்கப்படுதலும், அன்றாட நடைமுறைகளாகி விட்டன.  நடுவண் அரசின் நிர்வாத்தில் என்றுமே இல்லாத் தேக்கநிலை நிலவியது.  எந்த மாநிலச் சிக்கல்களும் தீர்க்கப்படவில்லை.  அணுகப்படவுமில்லை.  90 கோடி மக்களின் பிரச்சினைகளுக்குத் தலைமை அமைச்சரின் தகாத மௌனமே மறுவிடை தந்தது.  புதிய பொருளாதாரத் திட்டத்தின் காரணமாக இந்திய நாடு, அயல்நாட்டினரின் சுரண்டல் களமாகி விட்டது.  பொருளாதாரச் சுதந்திரம் பறிபோயிற்று.  நரசிம்மராவ் தம் சிறுபான்மை அரசை ஐந்தாண்டுகளுக்கு எவ்வாறேனும் நிலைப்படுத்திக் கொள்ளவேண்டும், என்ற ஒரே குறிக்கோளுடன் இயங்கியதால் லஞ்சம், ஊழல், அடக்குமுறை, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கையகப் படுத்துதல், தன்னை ஏற்கும் மாநில அரசுகளுக்கு முறையின்றி வேண்டியதையெல்லாம் தருதல், மற்றவற்றை ஒடுக்குதல் போன்ற பல பாசிச நடைமுறைகள் நாளும் தொடரலாயின.  அவருக்கு அ.தி.மு. கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேராதரவு தந்தனர்.  அதன் தலைமையோ அனைத்துப் புலங்களிலும், கோடிகோடியாகக் கொள்ளையடித்தது.  இந்திய நாடும், தமிழ்நடும் அiனாதைகளாகி விட்டன.

1991-ஆம் ஆண்டின் இடைப் பகுதியிலிருந்து 1996-ஆம் ஆண்டு ஏப்பிரல், மே திங்களில் பொதுத் தேர்தல்கள் நடைபெற்ற வரையிலான ஐந்தாண்டு காலப்பகுதி, ஐம்பாதாண்டு சுதந்திர இந்தியாவின் – தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே நீங்காத இழுக்கை விளைவித்த கரைப்படிந்த பகுதி.

நடுவண் – தமிழக அரசுகளின் இடையே நிலவிய உறவுகள், ஈடு இணையற்ற ஊழல் உறவுகள்.

சிக்கல் உறவுகள்

சில ஆண்டுகளில், அ.தி.மு. கழகத்தின் ஆணவப் போக்கைத் தாங்க முடியாமல், குறிப்பாக அதன் தலைமையின் தன் முனைப்பு கொண்ட கீழ்மையை ஏற்க முடியாமல் தமிழ்நாடு காங்கிரஸ், அ.தி.மு.க. வையும் அதன் அரசையும் கடுமையாக விமர்சித்தது.  “காங்கிரசு தந்த ஆதரவால்தான் அ.தி.மு.க தன் அரசை அமைக்க முடிந்தது, தொடரவும் முடிந்தது.  காங்கிரசு இன்றேல் அ.தி.மு.க. அரசு இல்லை” என்ற நிலைப்பாட்டைத் தமிழ்நாடு காங்கிரசும் கட்சி மேற்கொண்டது.  அதனால் அக் கட்சிகளின் தேர்தல் உறவுகள் முறிவடையும் சூழ்நிலை தோன்றியது.  மோதல் ஏற்பட்டது.  ஆனால் நரசிம்மராவ் தன் அரசைக் காத்துக் கொள்வதற்காக அம்மோதலினுடே இச்சக உறவை வாயளவில் பேசியும், நடைமுறை நிலையில் மைய அரசின் வருமானத் துறை, அமலாக்கப்பிரிவு (Directorate of Enforcement) நடவடிக்கைகள், ஆட்சிக் கலைப்பு போன்றவற்றை மறைநிலையில் காட்டியும் அ.தி.மு.க-வை மிரட்டி வளைத்தார்.

அ.தி.மு.கழத்தின் அதன் தலைமையில் ஊழல்களை அம்பலப்படுத்திய தி.மு. கழகம், முதல்வரின் மேல் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காகப் பதினெட்டு வகையான குற்றச் சாட்டுகளைக் கொண்ட புகார்ப் பட்டியலை ஆளுநரிடம் தந்து, முறைப்படி அனுமதி கோரியது.  ஆனால் பெரிய ஊழலுக்கும் – சிறிய ஊழலுக்குமிடையே தொடக்கத்தில் சுமுகமான தரங்கெட்ட உறவுகள் நீடித்ததால் அப்பட்டியல் கிடப்பில் போடப்பட்டு விட்டது.  நரசிம்மராவ் அவர்கள் தன் ஆட்சியைக் காப்பதற்காகக் கையாண்ட சாம, தான பேதம் என்ற மூன்றும் தோற்றுவிடவே, இறுதியில் தடையத்தைக் காட்டி அ.தி.மு.கவைத் திருப்ப முனைந்தார். ஆளுநர் மூலமாக தி.மு.கழகம் தந்த குற்றவியல் நடவடிக்கைக்குரிய அனுமதி வழங்குவதாகப் பாசாங்கு செய்தார்.  அதனால் மைய அரசின் கங்காணியான மாநில அரசையும் அ.தி.மு.கழகம் கடுமையாக விமரித்ததது.  பல கோப்புகள் ஆளூநருக்கு அனுப்பப்படவில்லை.  தரப்பட்ட சில கோப்புகளையும் ஆளுநர் ஏற்காமல் விளக்கக் குறிப்புகளைக் கேட்டுத் திருப்பி அனுப்பி மாநில நிர்வாகத்தை முடக்க முயன்றார். ஆட்சியைக் கலைப்பதற்குரிய பரிந்துரைகளைச் செய்தும், வாய்ப்பேற்பட்டால் தானே மாநில அரசை அரசமைப்பில் சில விதிகளை திரிபுப்படுத்திப் பயன்படுத்திக் கலைக்கவும் முடியும் என்றெல்லாம் அச்சம் ஊட்டினார். தமிழக முதல்வர் ஆளுநரைப் பல்கலைக் கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து நீக்கி, மாநிலச் சட்டம் ஒன்றை இயற்றினார்.  அதற்கு ஆளுநர் இசைவைத் தராததால் மீண்டும் சட்டமன்றத்தில் அது நிறைவேற்றப்பட்டு இறுதியில் சட்டமாக்கப்பட்டது.  கச்சத்தீவை மீட்போம் என்றார். அதுவரை பேசப்படாத மைய – மாநில உறவுகளின் சீர்கேட்டையும், மைய அரசின் கையாலாகாத – செயல்படாத மந்த போக்கையும், கண்டித்து தன் விடுதலை நாள் உரையில் அரசியல் சந்தர்ப்பவாதமாகப் பேசினார்.  மேலும் அ.தி.மு.க தலைமை மைய அரசுக்கு முற்றுமே எதிராகச் செயல்படத் தொடங்கியது.  என்றாலும் நரசிம்மராவின் தன்னல ஆட்சிக் காப்பின் தீவிர வேட்கை காரணமாக இவையனைத்தும் கண்டு கொள்ளப்படவேயில்லை.

இதற்கிடையில் 1996ஆம் ஆண்டின் ஏப்பிரல்-மே திங்கள்களில் பொதுத் தேர்தல் விரைந்து வந்தது.  அதற்கு முந்தைய மாதங்களில், தேர்தல் கூட்டு பற்றிப் பேசப்பட்டது.  காரணம் வரும் தேர்தலில் இரண்டும் தோற்றால் மோசடிகள் வெளிவரும்.  குற்றவியல் நடவடிக்கைகளுக்குத் தப்பமுடியாது.  அதனால் தமிழ்நாடு காங்கிரஸ் நிலைபாட்டையும் உதறி எறிந்து விட்டு, நரசிம்மராவ், அ.தி.மு.க. தலைமையுடன் “தேர்தல் கூட்டை” ஏற்படுத்திக் கொண்டார்.

அரசியலில் நிலையான நண்பர்களும் இல்லை; நிலையான விரோதிகளுமில்லை என்று அதற்குப் பொன்முலாம் பூசப்பட்டது.  அரசியல் சந்தர்ப்ப வாதத்திற்கு எல்லையே இல்லை போலும் – விளைவு – தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் காங்கிரசு பிளவுண்டது. மாநில உரிமைகளைப் போற்றும், “தமிழ் மாநில காங்கிரஸ்” தோன்றியது.  1996 ஏப்பிரல் – மே திங்கள் தேர்தலில் மக்களின் நெடு நாளைய பெரு விழைவு நிறைவேறிற்று.  மையத்திலும் காங்கிரஸ் தோற்றது.  மாநிலத்திலும் ஊழல் அ.தி.மு.கழகம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று.

நரசிம்மராவின் மைய அரசுக்கும், அ.தி.மு.கவின் தமிழக அரசுக்கும் இடையிலிருந்த உறவுகளை என்னென்று அழைப்பது?  உறவற்ற உறவுகள் என்பதா?  உச்சகட்ட ஊழலின் உருமாறிய உறவுகள் என்பதா?  ஆட்சி வெறி கொண்ட தனி மனிதரிடையே நிலவிய இழிதகை உறவுகள் என்பதா?  அரசமைப்பு அடிப்படையில் அதனை கண்ணியமாகச் “சிக்கல் உறவுகள்” என்றே அழைப்போம்.

“நேற்று” என்பது நரம்பறுந்த வீணை.

இன்று

“இன்று” என்பது “நேற்றைய” தொடர் விளைவுகள்.  1996-ஆம் ஆண்டு ’மே’த் திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் இந்திய நாட்டில் புரட்சிகரமானதோர் அரிய திருப்பம் ஏற்பட்டது.  சிறு, சிறு இடைவெளி விட்டு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் மைய அரசில் ஒற்றையாட்சியை நடத்தி வந்த காங்கிரஸ் கட்சி, பல மாநிலங்களில் என்றுமே இல்லாத மிகப்பெருந்தோல்வி அடைந்தது.  எந்தவோர் அனைத்திந்தியக் கட்சிக்கும் நடுவணில் ஆட்சி அமைக்கத்தக்க அறுதிப் பெரும்பான்மையைத் தருவதற்கு மக்கள் விரும்பவில்லை,  அகில இந்தியப் பிரச்சனைகள் மக்களைக் கவரவில்லை.  பாரதிய ஜனதாக் கட்சியின் “இந்துத்துவம்” பெரும்பாலான மாநிலங்களின் மக்களால் ஏற்கப்படவில்லை.  அனைந்திந்தியக் கட்சிகளுக்கு எதிராகவும், ஊழலை எதிர்த்தும், மாநிலச் சிக்கல்களை முன் நிறுத்தியும், மக்கள் தீர்ப்பளித்தனர்.  மாநில மக்களின் நலன்களையே முன்னிலைப்படுத்தி மாநிலங்களில் நிலவி வரும் சிக்கல்களுக்குத் தீர்வுகளைத் தரவல்ல கட்சிகளை, மக்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்தனர்.  இந்திய நாட்டின் பொதுவான அக்கறையைவிட, மாநிலங்களின் அக்கறையே மேலோங்கி நின்றது இயற்கையான மாநில மொழி வழித் தேசியம்”, செய்கையான மத வழித் தேசியத்தை வெற்றி கொண்டது;  பாரதத் தேசியம் தத்தளித்தது.

ஊழல் நிறைந்த பிற்போக்குக் காங்கிரஸ் கட்சி பல முற்போக்கு மாநில கட்சிகளுக்குக் காரணமாயிற்று.  காங்கிரஸிலிருந்து பிரிந்து அரியானாவில் “அரியானா விகாஸ் மஞ்ச்”, மத்தியபிரதேசத்தில் “மத்திய பிரதேச விகார் மஞ்ச்”,  தமிழகத்தில் “தமிழ் மாநில காங்கிரஸ்”, ஆகியவையும், பீகாரில் ஜனதாதளத்திலிருந்து பிரிந்த முலாயம்சிங் யாதவின் “சமாஜ்வாதக் கட்சி”யும் புதிய மாநிலக் கட்சிகளாகும்.  எதிர்காலத்தில் மாநிலக் கட்சிகளை அடியொற்றித்தான் அனைந்திந்தியக் கட்சிகள் இயங்க வேண்டிய புதிய அரசியல் சூழ்நிலை உருவாகி விட்டது.  அதேபோல மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் அனைத்திந்தியக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியாது;  மத்தியில் ஆட்சியையும் அமைக்க இயலாது என்ற புதிய சூழ்நிலை நடைமுறைக்கு வந்துவிட்டது.

காங்கிரசு உள்ளிட்ட அனைத்திந்தியக் கட்சிகளின் தோல்வி நடுவண் அரசின் அதிகாரக் குவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.  மாநிலங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் ஏற்பட வித்திட்டுள்ளது.  தற்போதைய நாடாளுமன்றத்தில் ஏறத்தாழ 36 கட்சிகள் உள்ளன.  அவற்றில் 13 கட்சிகள் இணைந்து தேவே கவுடா அவர்களின் தலைமையில் ஐக்கிய முன்னணி அரசை அமைத்துள்ளன.  அக்கூட்டு அமைச்சரவையில் தமிழகத்தின் தமிழ் மாநில காங்கிரசு, திராவிடக் முன்னேற்றக் கழகமும், ஆந்திரத்தின் தெலுங்கு தேசக் கட்சியும், பஞ்சாபின் அகாலிதளமும், அசாமின் கனதந்திரபரிஷத் கட்சியும் இடம் பெற்றுள்ளன.

புதிய மைய அரசும் தமிழக அரசும், பல்லாண்டுகளாக நிலைபேறடைந்துவிட்ட ஊழலை முற்றும் அகற்றவும், நிர்வாகத்தில் தூய்மையைக் கொணரவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை முதல் நிலையில் அணுகி நிறைவேற்றவும், புதிய அரசியல் பொருளியல் சீர்திருத்தங்களைச் செய்யவும் முனைந்து செயல்படுகின்றன.  முன்னால் தலைமை யமைச்சர் உள்பட பல அமைச்சர்கள், அவர்களைச் சார்ந்த ஊழல் மன்னர்களின் மேல் தீவிரமான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டின் முன்னால் அ.தி.மு.க. முதலமைச்சர் மேலும், அவரது அமைச்சரவை உறுப்பினர் 9 பேர் மேலும், அவர்களைச் சார்ந்த பினாமிகள் மேலும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் மேலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் களவாடியதற் காகவும், வேறுபல கடுமையான குற்றங்களைச் செய்ததற்காகவும், பல்வேறு குற்றவியல் நடவடிக்கைகள் இன்றைய தமிழக முதல்வரால் எடுக்கப்பட்டுள்ளன.  நீதி மன்றங்களே முன் நின்றும் இந் நடவடிக்கைகளை மேற் கொண்டன,  இந்திய வரலாற்றில் ஒரு திருப்பு மையம்.

சர்க்காரியா மைய – மாநில ஆணைக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தவும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தரவும், மைய அரசுப் பொறுப்புக்களில் மாநில அரசுகள் பங்கேற்கவும், மாநில அரசுகளுக்கு நிதிச் சுதந்திரம் தரும் வகையில் அதன் நீதி மூலங்களில் விரிவாக்கம் செய்யவும், மாநில ஆட்சிக் கலைப்புக்கு வழிவகை செய்யும் தீய விதி 356-ஐ நீக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஐக்கிய முன்னணி அரசு உறுதி பூண்டுள்ளது.  அவற்றைச் செயல்படுத்துமா என்பதைப் பொறுந்திருந்து பார்க்கவேண்டும்.

பொதுவாக மைய – மாநிலத் தொடர்புகளில் “சமநிலை உறவுகள்” ஏற்படுத்துவதற்குரிய அரியதோர் அரசியல் மற்றும் அரசமைப்புச் சூழ்நிலை முதல் முதலாக ஏற்பட்டுள்ளது எனலாம்.  மெய்யான கூட்டாட்சியை நோக்கிச் செல்வதற்குரிய வாய்ப்பும், வடிவமைந்துள்ளது.  மத்திய – மாநில உறவுகளில் புதியதோர் “ஊழி” (EPOCH) உருவாகி விட்டது.

“இன்று” என்பது நாண் ஏற்றிய கணை.

நாளை

“நாளை” என்பது நேற்றைய – இன்றைய – போக்குகள் விளைவிக்கும் எதிர்கால எதிர்பார்ப்புகள்.  நடுவண் அரசில் இன்று அமைந்துள்ள கூட்டணி ஆட்சியை நேற்றைய ஆளுங்கட்சியான காங்கிரசு. தன் சந்தர்ப்பவாத ஆதரவின் அடிப்படையில், வாழ்த்தவும், விரும்பும் போது வீழ்த்தவும் முனைந்து நிற்கிறது. ஒருக்கால் ஐக்கிய முன்னணி அரசு வீழ்த்தப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தல் வரலாம்.  அப்போதும் கூட மாநில நலன்களைப் போற்றாத, அகில இந்தியக் கட்சிகள் எதுவும் – தனித்து ஆட்சி அமைக்க முடியாது.  மீண்டும் மாநிலக் கட்சிகளும் சில அல்லது ஓர் அகில இந்தியக் கட்சி சேர்ந்து, இனியொரு புதிய ஐக்கிய முன்னணி அரசையே அமைக்க முடியும்.  சூழ்நிலை அழுத்தத்தால் அதுவும் வீழ்ந்துபடும்.  குறுகிய காலத்திற்கு ஏதோ ஓர் அனைத்திந்தியக் கட்சி ஆட்சியை அமைக்கும்  வாய்ப்பேற்பட்டாலும் அது ஐந்தாண்டுகளுக்கு நீடிக்குமா என்பது ஐயமே!  ஏனெனில் அதுவும் சிறுபான்மை அரசாக அமையும்.  அருதிப்பெரும்பான்மையைப் பெற வாய்ப்பில்லை.  இப்படி இனி ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அரசுகள் மாறி – மாறி வரும், போகும், நிலைத்து நிற்காது.  எதிர்வரும் அண்மைக்காலப் பகுதிக்குப் பின்னால். ஒருகால கட்டத்தில் மாநில மக்களின் பல்லாண்டு கோரிக்கைகளை முழுதும் ஏற்று முறையாக அணுகிச் செயல்படுத்தும் ஒரு திறன் மிக்க அரசு மட்டுமே நிலைத்து நிற்கமுடியும்.  அது ஏதோ ஒருவகையான கூட்டணி அரசாகவோ அல்லது தேசிய அரசாகவோ (National Government) தான் இருக்க முடியும்.

நாடு தழுவிய இராணுவ ஆட்சி வருவதற்கும் அதிக வாய்ப்புக்களில்லை. என்றாலும் இன்னொன்றையும் நாம் மறந்து விடுவதற்கில்லை.  நெருக்கடி நிலை, நடைமுறைப் படுத்தப்பட்டபோது, இந்திராகாந்தி நாடாளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மையைப் பெற்றிருந்ததால் தனக்கு உரிய வகையில் அரசமைப்பைத் திருத்தி சர்வாதிகாரப் பண்பைப் பெற்ற தலைவராவதற்கு எண்ணம் கொண்டிருந்தார்.  அதற்குரிய வரைவுத் திட்டமும் கூட வடிக்கப் பட்டிருந்தது.  அதனையே கூட அடியொற்றி, சில – பல அரசமைப்பு விதிகளை மட்டும் திரிபுபடுத்தி, இன்றைய அரசமைப்பின் மூலமாகவே, தலைமை அமைச்சர் சர்வாதிகாரியாக ஆகும் வாய்ப்புகளும் உண்டு;  அல்லது குடியரசுத்தலைவரேகூட தலைமையமைச்சர், மற்றும் இராணுவத் தலைவர்களுடன் இணைந்து, அவ்வகை முயற்சியிலும் ஈடுபடலாம்.  இதற்கு முழு ஏற்பையளிக்கும் வெளிப்படையான விதிகள் அரசமைப்பில் நேரடியாக இல்லை.  எனவே சர்வாதிகார ஆட்சி அமைவதற்குரிய வாய்ப்புகள் அருகியே காணப்படுகின்றன.

இக்கட்டுரை ஆசிரியரின் “மலர்க மாநில சுயாட்சி” என்ற பெருநூலில் (பக். 944-975) இவைபற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பலமொழி இன மக்களைக் கொண்ட – தேசிய இனங்களைக் கொண்ட ஒரு பெரிய நாட்டில், நல்ல குடியாட்சியைப் பெறுவதற்குக் கூட்டாட்சி அமைப்பும் இணைந்தே செயல்படவேண்டும்.  செப்பமான மக்களாட்சி என்பது, அதன் செயல் முறைகளையும் (Process) படிப்படியான தொடர் வளர்ச்சியையும் (Degrees) பொருத்தே அமைவது.  பல நிலைகளையும், சில குறைகளையும் கொண்டதோர் ஆட்சி முறையாகும்.  இன்றைய அரசமைப்பில் குடியாட்சி ஓப்பப்பட்டாலும், மைய அதிகாரக் குவிப்புக்கு வழிசெய்துள்ளதால், மொழித் தேசிய இனங்களின் (மாநில மக்களின்) தன்னுரிமைகளையும் சேர்த்து அக்குடியரசு முழுமையாக இயங்க முடிவதில்லை.  எனவே எதிர்வரும் அண்மைக்காலப் பகுதியில், புதியதோர் நிலையான அரசமைப்பு மாற்றத்தைப் பெறுவதற்குரிய “பேறுகால வேதனையை” இந்தியத் துணைக்கண்டம் தாங்கியே தீரவேண்டும்.  அடிதடி வந்தால், அறுவை சிகிச்சை (நாட்டுப் பிரிவினை) நிகழ்ந்துவிடும்.  முழு இந்தியக் குடியரசுக் குழந்தையை குன்றாது, குலையாது நாம் பெற்றுத் தீரவேண்டும்.  இதற்கெல்லாம் இன்றைய அரசமைப்பு ஈடுகொடுக்குமா?

நாட்டுப்பற்றற்ற – மொழித்தேசிய உரிமைகளை நசுக்கிற – ஆட்சி வெறிபிடித்த சிலர் – அரசியல் விபத்தின் காரணமாக நடுவண் அரசின் ஆட்சிப் பொறுப்பை நடத்தும் வாய்பைப் பெற்றுவிட்டால், மையத்தில் குவிக்கப்பட்ட அதிகாரங்களையும், மாநிலங்களின் வக்கற்ற நிலையினையும் பயன்படுத்தி, இதே அரசமைப்பின் மூலமாக சர்வாதிகாரிகளாகச் செயல்படுவதற்கு, இன்றைய நம் அரசமைப்பே துணை நிற்கும்.  அதிகாரக்குவிப்பும், சர்வாதிகார முறையும் கைகோர்த்துச் செல்லும் இணை பிரியாத் தோழிகள்.  ஒன்றை மற்றொன்று விரைந்து தழுவிக் கொள்ளும்.  அப்போது இன்றுள்ள அரைகுறையான கூட்டாட்சி அமைப்பும், மக்களாட்சியும், காலப்போக்கில் அழிந்துவிடும் என்பது, பலநாட்டு வரலாறுகள் காட்டும் பேருண்மை.

சென்ற 45 ஆண்டுகளாக இந்திய நாட்டின் பல பகுதிகளில் மொழி தேசிய இனங்களின் பலவகையான கிளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  வன்முறைப் போராட்டங்கள், பிரிவினைக் கிளர்ச்சிகள், ஆயுதப்போர்கள், தன்னாட்சிக் கோரிக்கைகள், தனி மாநில அமைப்பு இயக்கங்கள் என்று அவை கிளர்ந்தெழுந்துள்ளன.  இவற்றின் வடிவங்கள் வெவ்வெறானாலும் வேர்பகுதி ஒன்றே!

மொழியினத் தேசியமே அதன் மூல உந்துவிசை.  அதன் எழுச்சியின் விளைவே அகில இந்தியக் கட்சிகளின் தோல்வி.  மைய அரசின் அடக்கு முறையாலும், அரச தந்திர முறைகளாலும் பயனேற்படவில்லை.  வீரியத்துடன் அவை வளர்கின்றன.  இவற்றிற்கு இன்றைய அரசமைப்பின் எல்லைக்குள் நின்று தீர்வுகாணமுடியாது.

எந்த ஓர் அரசியல் கட்சியாலும், எதிர்காலத்தில் ஏற்படவிருக்கும் ஆழமான அரசமைப்பு நெருக்கடிகளைத் தவிர்க்கவோ, தீர்க்கவோ முடியாது.  தேசிய இனங்களுக்குரிய முழுத் தன்னாட்சியை வழங்கியே தீரவேண்டிய கட்டாய நிலை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.  அடக்குமுறையைக் கைக்கொண்டால், அதுவே சுயநிர்ணய உரிமையாக பெருக்கு எடுத்துவிடும்.  இன்றைய அரசமைப்பை முழுக் கூட்டாட்சிக்குரிய – முழுத் தன்னாட்சிக்குரிய வகையில் திருத்தினால், ஏறத்தாழ 25 பங்கு விதிகளைத் திருத்த நேரிடும்.  சிதைந்த சிற்பமாகிவிடும்.

எனவே,“மாநிலங்களில் முழுமையான தன்னாட்சி;  மையத்தில் மெய்யான கூட்டாட்சி” என்பதை உயிர்நிலையாகக் கொண்ட புதியதோர் அரசியலமைப்புச் சட்டம் இனி அமைக்கப்படும் புதிய அரசமைப்புச் சபையின் மூலமாக இயற்றப்பட வேண்டுவது இன்றியமையாததாகும்.  அது ஒரு வரலாற்றுக் கட்டாயம்.  அதற்கு மாறாகச் செயல்பட்டாலோ அல்லது வரலாற்றின் போக்கை மாற்றியமைக்க முனைந்தாலோ, மீண்டும் பழைய வரலாறே திரும்பிவிடும். அதாவது எதிர்காலத்தில் கூட்டாட்சி மலராவிட்டால் இந்தியா பல துண்டுகளாகச் சிதறுணடு போகும்.  அதற்குத் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா, என்ன?  அதுவும் தனி நாடாகிவிடும்.  அந்நிலையில் மைய – மாநில உறவுகள் போய் நாடுகளுக்கிடையிலான உறவுகள் வந்துவிடும்.

எனவே நேற்றைய வரலாறும், இன்றைய செயல்முறைகளும் தொடர்ந்து தோற்றுவிக்கும் நாளைய விளைவுகள் – தமிழ்நாட்டில் ஓர் இரட்டைப் பெருவினாவை முன்னிலைப் படுத்துகின்றன.  சமநிலையான மைய – மாநில உறவுகளுடன் கூடிய “தன்னாட்சி கொண்ட தமிழ் மாநிலமா?” அல்லது ஆண்டான் – அடிமை உறவுகளிலிருந்து முற்றும் விடுதலை பெறும் “தனியாட்சியைக் கொண்ட தனித் தமிழ்நாடா?”  இதற்குரிய ஒரே விடை – ‘இந்திய ஒருமைப்பாடு” என்பது பெற்றுவிட்ட முடிவல்ல;  இனிப்பெறவேண்டிய இலக்கு.

நாளை என்பது நம்மைப் பொறுத்த்தே!

கு.ச. ஆனந்தன்:

வணிக இயலிலும், சட்ட இயலிலும் பட்டம் பெற்று, சென்ற 35 ஆண்டுகளாக முன்னணி வழக்குரைஞராகத் திகழ்கிறார். அரசமைப்பு, ஆட்சி மொழி, விடுதலை வரலாறு, தமிழ் வழிபாடு, தமிழியல், திருக்குறள் போன்ற புலங்களில் 28 ஆய்வு நூல்களும், 80-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய நூல்கள் பல தமிழக அரசு, தமிழ்ப் பல்கலைக் கழக மற்றும் இன்னும் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. ‘சிந்தனைச் செம்மல்’, ‘திருக்குறள் நெறித் தோன்றல்’, ‘இலக்கிய முனைவர்’, ‘அரசியல் கலை ஆய்வாளர்’ ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளறிந்தவர். சட்டம், ஆட்சிமொழி, பொருளியல், அரசமைப்பு, தமிழ், திருக்குறள் துறைகளில் தான் பெற்ற நுண்ணறிவையும் நூலறிவையும் பயன்படுத்தி புதிய தமிழ்ச் சமுதாயம் காண்பதற்குரிய கருத்துப் படிவங்களை வெளிக் கொணரும் பணியே இவருடைய பெரும்பணி. முழுமையான மறுமலர்ச்சிச் சமுதாயமே இவரது இறுதிக் குறிக்கோள்.

 

You Might Also Like