Star Mountain

My travels and other interests

சமூகம்தமிழ்நாடு நேற்று இன்று நாளை

குடும்பம் (1997)

குடும்பம்
எஸ். ராமகிருஷ்ணன்

குடும்பம் வேலைப் பங்கீடு என்றில்லாமல், உயர்வு தாழ்வு என்ற அடிப்படையில் கட்டமைக்கப்பட்டு இருந்தது முன்பு. பெண்களுக்குப் பேச்சுரிமையோ, சொத்துரிமையோ இருந்ததில்லை. சமையலறையும் பிரசவ அறையுமே அவர்கள் வாழ்வாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு நடந்த உணவு, படுக்கை மற்றும் கடவுள் பற்றிய அடிப்படை சிந்தனை மாறுதல் குடும்ப அமைப்பையே மாற்றி விட்டன.

முன்பு முதிர்ந்த குடும்பத்தினருக்கு இருந்த மதிப்பு மட்டுமல்ல, அவர்களுக்கிருந்த பாதுகாப்பும் போய்விட்டது. குழந்தைகளுக்கு முன்பு சுதந்திரம் இல்லை. இன்றோ அவர்களைக் கவனிக்க ஆட்கள் இல்லை.

எதிர்காலம்?

நூறு ஆண்டுகளுக்கு முந்திய தமிழ்க்குடும்பம் என்றதும் நம் நினைவில் உருவாகும் சித்திரமாக நாழி ஓடு வேய்ந்த வீடு, முற்றம், சுவரில் சுவாமிகளின் திருவுருவப் படங்கள், தேசத்தலைவர்களின் வர்ணச் சித்திரங்கள் ஊஞ்சல், புகை மண்டிய சமையலறை, பெரிய திண்ணைகள், வெற்றிலை சவட்டும் வயசாளிகள், வெள்ளை வேஷ்டியும் நெற்றியில் திருநீறுமான ஆண்கள், இருபதிற்கும் குறையாத குடும்ப உறுப்பினர்கள், சிறிய இருட்டு அறைகள், தாத்தாவின் பெயர் கொண்ட பேரக்குழந்தைகள், ஈரம் கலையாத தலையுடன் பாடும் குரல், வெண்கலப் பாத்திரங்கள் என சிதறியும், கலைந்தும் உருவங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. நகரங்கள் பெரிதாக உருவாகி விடாத காலம் அது. சென்னைக்குப் போவது தேசாந்திரம் போவதற்குச் சமம் என நினைத்தவர்கள் வாழ்ந்த நாட்கள் அவை. போக்குவரத்துச் சாதனங்களோ அல்லது உலகின் செய்தி வலையோ விரிவடையாத காலம்.

கிராமம் சார்ந்தே தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்திருந்தன. ஒரு தமிழ்க்குடும்பம் என்பது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கைகள், சித்தி, அத்தை, பெரியப்பா, ஒன்றுவிட்ட சித்தப்பா, அக்கா, மாமா, மாமாவின் பெண்கள், கல்யாணம் பண்ணிக் கொள்ளாத சித்தப்பா, பால்ய விவாகமாகி கணவனை இழந்த தூரத்து அத்தை, பூனைகள், ஆடுகள், வளர்ப்பு அணில், சிலவேளை மைனா, நாய்க் குட்டிகள், பசுக்கள்  இன்னும் இரைதேடி அடுப்படி வரை வரும் குருவிகள் என தன்னளவில் பெரியது. இதன் நபர் எண்ணிக்கை குடும்பத்திற்குக் குடும்பம் வேறுபடுமே தவிர, இந்த அமைப்பு சாஸ்வதமாகியிருந்தது. விவசாயத்தை நம்பிய வாழ்வு, நதிக்கரையில் வாழ்ந்தவர்களும் சரி, கரிசல் பூமிக்காரர்களும், தீரவாசக் காரர்களும் வானத்தையும், மழையையுமே நம்பி வாழ்ந்தனர். உழைப்பின் வழி பிரிக்கப்பட்ட மனிதர்கள் ஒரே கூடாரத்தின் கீழ் வாழ்வது போல கிராமத்தில் வாழ்ந்தனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே போகத்தில் திளைத்த மூதாதையர் பற்றிய கதைகளைச் சுவைத்தபடி, அன்றாட வாழ்வின் கதியை உருட்டிச் சென்றனர் மக்கள். குடும்பமானது உறவு முறைகளின் தொகுப்பிடமாகயிருந்தது. இந்த உறவு முறைகளின் வழியே ஒரு குடும்பம் தனது சுய தேவையைப் பூர்த்திச் செய்ய வேலைகளைச் சரிநிகராகப் பங்கிட்டுக் கொண்டது. இந்தப் பங்கீட்டில் உடல் உழைப்பைச் சிலரும், சிலர் கணக்கு வரவு செலவுகளைப் பங்கிடுவதும் நடந்தேறின. ஆயினும் இந்தக் குடும்பத்தின் வருமானமானது ஒரே இடத்தில் குவியப்பட்டு அங்கிருந்து தேவையான காரியங்களுக்குப் பகிர்ந்து தரப்பட்டது.

தமிழ்க் குடும்பங்களில் ஆண்களும் பெண்களும்  ஒரே வீட்டினுள் வசித்த போதும், ஆண் பெண் இருவருக்கும் இடையே கட்புலனாகாத வலை ஒன்று இருவரையும் தனியே பிரித்து இருந்தது. ஆண் சமூக மனிதனாகத் தன்னை உருமாற்றிக் கொண்டிருந்தான். அதற்கான சமூக மரபுகளையும், அறநெறிகளையும் உருவாக்கினான். குடும்பத்தின் தலைவனாக ஆணிடம் அதிகாரம் அடங்கியிருந்தது. இந்த அதிகாரத்தின் முத்திரைகள் கடைசி ஆண் வரை பாதுகாக்கப்பட்டது. ஆண்களின் உலகில், முதன்மையாக உணவும், போகமும் முன்னிடம் வகித்தன. தமிழ்க்குடும்பத்தின் அடிப்படைத் தாதுக்களில்  ஒன்றாக உணவைச் சொல்லலாம். சுவையின் பல்வேறு நிலைகளை உணவில் அறிந்த தமிழ்த் தலைவன் வீட்டின் முதன்மையான காரியமாகச் சாப்பிடுவதைக் கருதினான்.

“சம்பாதிப்பது எதற்குச் சாப்பிடுவதற்குத் தானே” என்ற கருத்தும், ‘விருந்தினருக்கு உணவு தருவதே இல்லறத்தின் கடமையென்றும், ஒருவேளைச் சாப்பாட்டிற்கு வழியற்றுப் போகக் கூடாது என்றும் குடும்பம் தன்னை உணவு எனும் பெரும் தூணைத் தாங்கி நிறுத்திக் கொண்டது.

இந்த உணவு தயாரிக்கப்படும் சமையலறை, வீட்டின் முக்கியப் பாகமாகி விட்டது. படுக்கையறையும், சமையலறையும் தமிழ்க் குடும்பத்தின் இரண்டு முக்கிய அறைகள். இதற்குள் அந்நியர் பிரவேசிப்பது அநாகரீகமானதாகக் கருதப்பட்டது. சமையலறையில் பெண் காலங்காலமாக உழன்று திரிந்தாள். வெண்கலப் பாத்திரங்களும், தாளிதமும், வாசனைப் பொருட்களும், தானியமும் அவள் உலகமாகிப் போயின. அணையாத அடுப்பு என்ற சடங்கே தமிழ்க்குடும்பத்தில் இருந்தது. காலங்காலமாக அந்த அடுப்பு அணைக்கப்படாது. கங்குகளாலும், சிறிய நெருப்புச் சுடராலும் எரிந்து கொண்டிருக்கும் இந்த அடுப்பைப் பற்ற வைத்தவள் கடவுளின் உருவாக்கத்தில் பிறந்த முதல் பெண்தானோ என்னவோ? என்னும் பிராமீதியஸ் நெருப்பைப் பாதுகாப்பது போல இந்தப் பெண்கள் அடுப்படி நெருப்பைப் பலகாலமாகப் பாதுகாத்து வந்தனர். என்றோ சமையலறை மூலையில் கரித்தடமாகிவிட்ட குடும்பத்தின் பூர்வ பெண்ணை வணங்கிவிட்டு இரவில் அந்த ஒற்றை நெருப்பை அடுப்பில் விட்டுப் போவார்கள். மறுநாள் காலை எழுந்ததும் அந்த நெருப்பு மீண்டும் உயிர்பெறும். தமிழ்ப்பெண் அடுப்பை வணங்குவாள். அதன் ஜுவாலைகள் மீது கைகள் காட்டி கண்களில் ஒற்றிக் கொள்வாள். சமையல் அடுப்பு முகட்டிற்குப் பூச்சூடுவாள். அதிகாலை அவள் துவங்கும் இந்த வேலை இரவு வெகுநேரம் வரை தொடரும்.

உணவின் ருசியே குடும்பங்களின் முதன்மையானதாகக் கருதப்பட்டது. அதாவது ஒவ்வொரு குடும்பமும் அதற்கெனத் தனிச் சமையல் ருசி கொண்டிருந்தது. அது புளிப்பு, காரம், இனிப்பு என ஏதோ ஒரு சுவை தூக்கலாக இருக்கும். இந்த மகத்துவம் சாத்தியமாகும் வரை ஆணிற்கும் பெண்ணிற்கும் இடையில் உறவு விரிசல் கொண்டிருக்கும். சமூக நிகழ்வுகளைப் போலவே முக்கியமானது ஆணுக்குப் பெண் உணவு பரிமாறுவது. இது தமிழ்க் குடும்பத்தில் தினமும் நடக்ககூடிய அரிய காட்சி.

பசுமை பொங்கும் வாழை இலையை இடவலமாகப் போட்டு அதன் நுனியில் ஒரு வெண்கல டம்ளரில் தண்ணீர் வைப்பாள் அம்மா. சாப்பிட அமர்பவர்கள் அவள் கால்களைப் பார்த்துவிடாதபடி பாதம்மூடி விரல் தெரிய புடவை கட்டியிருப்பாள். உப்பை இருவிரல் நுனியில் எடுத்துச் சிதறாது இலை ஓரத்தில் இடுவாள். உப்பில் நுனியளவு கூடிவிட்டாலோ அல்லது சிதறினாலோ, அவளுக்கு வசைகிட்டும். பின்பு அவள் காய்கறிகளைப் பரிமாறுவாள். சாப்பிடும் நபர் அவளுக்கு மாமனாராக இருந்தால், அவள் வேண்டுமா என வாய்திறந்து கேட்கவும் கூடாது. கணவன் என்றால் அவன் பேச்சிற்குத் தலை மட்டும் அசைக்க வேண்டும். பதார்த்தங்களில் ஏதேனும் ஒன்று மற்றொன்றின் மீது சிறிது கலந்து விட்டாலும் அவள் மீது வசை தொடரும். குனிந்து பரிமாறும் அவள் தலைமயிர் ஒன்று தவறி இலையில் விழுந்து விட்டால் அந்தச் சாப்பாட்டை, அவள் முகத்தில் அடிக்கவும் செய்வர். இப்படி, நடுக்கமும் பதட்டமுமாக அவள் பரிமாறும் சாப்பாட்டைச் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்திருக்கும் ஆண்கள் சமையலின் ருசி பற்றி ஒருவார்த்தை கூடப் பேசுவது கிடையாது. அவர்கள் வெற்றிலை செல்லத்துடன் எழுந்து செல்வார்கள். பின்பு அகால நேரத்தில் அவள் சமையலறையின் காய்கறிக் குப்பைகளை ஒதுக்கிவிட்டுத் தையல் இலையைப் போட்டுச் சாதம், காய்கறி எல்லாம் கலந்து அவசர அவசரமாக உண்ணுவாள். இதிலும் வெளியிலிருந்து குரல் வந்துவிட்டால் சாப்பாடு பாதியில் நின்றுபோகும். இப்படித் தமிழ்க் குடும்பத்தின் அன்றாட வாழ்வு பெரிதும் சமையல் உலகத்தினைச் சார்ந்தே இயங்கியது. சாதாரண கூலியாள் வரை இந்த நடத்தையையே பின்பற்றுவான். சமைக்கப்பட்டு மீதமாகும் பதார்த்தங்கள் மறுநாளில் நாய்களுக்கும் வீட்டின் மூத்த குடும்பப் பெண்ணிற்கும் உரியதாகிவிடும்.

குடும்பத்தின் இந்த கதி சீராக இயங்கும்வரை சச்சரவுகள் அதிகமிருக்காது. இந்தத் தானிய உலகின் வழியே பெண் சமையல் கூடத்திலும், ஆண் முன் தின்ணையிலும் பிரிக்கப்பட்டு விட்டனர். முன்திண்ணைக் காட்சிகளில் தெருவின் இயக்கமும், சமூக மரியதைகளும், வரவேற்பும், வியாபாரமும், சுய மரியதைகளும் நிரம்பியிருந்தன. பின்கட்டுக் காட்சியிலோ சதா ஈரத்தில் உழலும் மீனைப்போல சுழல்வதும், பசுஞ்சாணமும், நோயும் புகையும் இருட்டுப் படிந்த சுவர்களும் இருந்தன. நெல்லின் ஒவ்வொரு மணிக்குள்ளும் இருந்து அரிசியை எடுத்துவிட்டுப் பெண்ணை அடைத்து விட்டார்கள்.

சமையல் அறைக்கும், படுக்கை அறைக்கும் தூரம் அதிகம் என்றாலும் இரண்டுமே ஆணிற்காக அமைக்கப் பட்டவை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற மண வாழ்வு கொண்ட தமிழன், கல்யாணமாகும் முன்பு ஒருமுறை கூட பெண் சுபாவம் அறிந்தவனேயில்லை. அவன் வரையில் அது ஓர் உடற்தேவை. சமூகச் சடங்கு பெண்ணும் அப்படியே. மணமாகி வரும் பெண் புதிய குடும்பத்தின் உறுப்பினரானதும் அவள் முன்பு வேலைகள் பட்டியலிடப்படும். கிணற்று அருகே பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருப்பாள். அல்லது, சிறு குழந்தைக்களைக் குளிக்கச் செய்வாள். இரவு வந்துவிடும். அவள் காத்துக் கொண்டிருப்பாள். ஒரு ஆணிடம் பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும். அதுவும் அந்தரங்கமான படுக்கையில் என்பது கூட முன்பே வரையறுக்கப்பட்டதே. இந்த வரையறையின் மிகப்பெரிய வரிகள் அவளுக்குப் பாட்டிகளால் சரியாகப் போதிக்கப்படுகின்றன. இதை மீறுவது குடும்பப் பெண்ணுக்கு அழகல்ல எனவும் கூறப்பட்டதால் அவள் பதி சேவைக்குத் தன்னை தயார் படுத்திக் கொள்கிறாள். பால் உறவு வெறும் இச்சையளவில் முடிந்து விடுகின்றது. பின்பு அவள் படுக்கையில் படுப்பதற்குக் கூட தகுதியற்றவளாகி விடுகிறாள். அவளுக்கான பாயும், தலையணையும் தனியாக இருக்கின்றன. இந்தப் பாயில் அவள் உறங்குவாள். ஆண் இச்சையின் கனவில் மெத்தையில் புரண்டு தூங்குவான். அதிகாலை விழித்ததும் அவனின் காலை வணங்கிவிட்டு அறைக் கதவைச் சப்தம் இடாமல் திறந்து கிணற்றில் குளிப்பாள். இந்த உறவு மட்டுமே நீண்டு வந்த போதும் வருடந்தோறும் அவள் கர்பஸ்திரியாவது தவிர்க்க முடியவில்லை. பூஞ்சையான உடம்பும் பெரு மூச்சுமாக அவள் வீட்டில் உலாவுவாள்.

பெரும்பான்மைத் தமிழ் வீடுகளில் ஜன்னலற்ற அறை ஒன்று உண்டு. அது பிரசவ அறை. அங்கே ஒரு பெண் படுத்துக்கொள்ள மட்டுமே இடம் உண்டு. கதகதப்பும் வெம்மையும் கொண்ட சுவர்கள். சிறிய ஒற்றைக் கதவு கிராம மருத்துவச்சியின் கை விரல்கள் சோதித்துப் பிறக்கும் குழந்தைகள். வேதனையில் துண்டாகும் உதடுகள், இரத்தமும் தாய்ப்பாலும் கலந்த சேலைகள். அந்த அறையில் பிறந்த குழந்தைகள் கர்ப்ப இருளை விடவும் அதிக இருளையே முதலில் கண்டன. பிரசவத்தில் உயிர் பிழைத்த பெண்களை விடவும், இறந்தவர்கள் அதிகம். தாய் வீட்டில் நடக்கும் இந்தப் பிறப்புப் பெண் குணத்தையே உருமாற்றுகிறது.

பிரசவித்த ஸ்திரி என்ற போதும், ஆணின் சுகம் தேடும் முயற்சிகள் நிற்பதில்லை. தெரிந்தும் அறியாமலும் பிறபெண் உறவை நாடாதவர்கள் வெகுசிலரே. மற்றவர்களுக்கு இது இயல்பு. அதிலும் சில குடும்பங்களில் ஒரே ஆண், குழந்தை இல்லை என்பதற்காக அக்கா, தங்கை இருவரையும் மணப்பதோ, அல்லது இரண்டு மூன்று கல்யாணம் செய்வதோ இயற்கையானது. ஆனால் ஏழு வயதில் மணமாகி, யாரெனத் தெரியும் முன்பு மரணித்துப்போன கணவனுக்காக வாழ்நாள் முழுவதும் விதவையாக, யாராவது உறவினர்கள் வீட்டோடு வாழ்ந்த ஸ்திரிகள் அதிகம். இது இளம் பெண்ணிற்கு மட்டுமல்ல, குடும்ப ஸ்திரியாக இருந்து கணவனை இழந்து போனாள் என்றால், அவள் இட்லி விற்றுப் பிழைப்பதோ, அன்றி புட்டு விற்றுச் சம்பாதிப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை.

சுதந்திர காலத்திற்கு முந்திய ஆண்களுக்கும் பெண்களுக்கும் கல்வியறிவு அதிகமில்லை. பெண்களுக்குக் கல்வி போதிக்கப்படவேயில்லை என்றுகூட சொல்லலாம். சொத்தில் உரிமையில்லை. வாக்குரிமைகள் இல்லை. தனியாகப் பெண் வாழ முடியாது. இப்படி எத்தனையோ பேதங்கள் போக்குவரத்துச் சாதனங்களும், புதிய உலகின் காட்சிகளும் உலவத் துவங்கிய பின்பு வீட்டில் இருந்தபடியே உலகத்தின் செய்திகள் அறியப்படத் துவங்கின. யந்திரங்கள் உருவாகின. சமூக மாற்றத்தின் அலையில் இருந்து தமிழ்க் குடும்பம் தப்ப முடியவில்லை. மெல்ல இந்தச் சிவப்பு ஓடுகள் உடையத் துவங்கின. ஆங்கில கனவான்களுடன் உறவு கொண்ட தமிழர்கள், மேற்கத்திய சாயம் பூசிக் கொள்ள உள்மனதில் ஆசைப்பட்டனர். ஆங்கிலமும் கிராமபோன் ரிக்கார்டுகளும், நடனமும் அவர்களை வசீகரித்தன என்றாலும் அந்த வாழ்வு குடும்பம் எனும் அமைப்பைக் குலைத்துவிட முடியவில்லை. லேசான காரை உதிர்வது போல சில மாற்றங்கள் நடந்தேறின.

நூற்றாண்டுகளாகத் தமிழ்க் குடும்பத்தினை இறுகக் கட்டி வைத்திருக்கும் மற்றொரு சரடு “கடவுள்”. அதாவது சமய நம்பிக்கை இந்த நம்பிக்கையின் முற்றான சடங்குகள் பெரிதும் பெண்சார்ந்தே இயங்கின. பெண் ஒழுக்கம் மிக முக்கியமாகிப் போனது. கடவுள் வழியே கடவுள் மீதான பற்றுப் பெண்ணைத் தனது சமூக நிகழ்வுகளை நேரடியாக எதிர்கொள்ள விடாது. திரையாக்கிவிட்டது. எல்லாவிதமான கஷ்டங்களும் கடவுளால் தீர்த்து வைக்கப் பட்டுவிடும் எனத் தமிழ்ப் பெண் முழுவதுமாக நம்பினாள். தனது துயரத்திற்குக் காரணம் விதி என அவளே முடிவு செய்தாள். இது ஆண் வகையிலும் நடந்தேறியது. பொருளாதார உயர்வு, சிதைவு எது நடந்த போதும் அது கடவுளின் விரல் வழியே நடப்பதாகவே கருதப்பட்டது. கடவுள் சுவர்களில் ஊரும் பல்லி வழியாகக் குரல் கொடுக்கவும், பருந்தாகத் தலைக்குமேல் வட்டமிடுவதையும் பெண்கள் ஏற்றுக் கொண்டனர். சமயம் ஒரு வகையில் பெண்களின் உள் மனதை ஆறுதல்படுத்தியது. சமயக் கோட்பாடுகளில் பெண் தெய்வாம்ச மானவள் எனக் கூறப்பட்டது அவளுக்குச் சொற்ப சக்தி அளித்தது. பண்டிகை, சடங்கு, திருவிழா என கடவுள் சார்ந்த வைபோகங்களின் வழிக் குடும்பம் தன்னைத் தானே மறு உருவாக்கம் செய்து கொண்டது.

தமிழ்க் குடும்பத்தின் சிதைவு அல்லது மாற்றம் தொடங்கப்படுவதற்கு மூன்று கூறுகளின் மேல் விழுந்த அடியைக் காரணமாக்கலாம். அதாவது உணவு, படுக்கை, கடவுள் இந்த மூன்று குறித்த மாற்றங்கள்தாம் குடும்பத்தின் ஆதார வேரை உலுக்கின. சமூக மாற்றங்களான புரட்சிக் கருத்துக்களோ, அல்லது சுதந்திர உணர்வோ ஒட்டு மொத்தமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதே தவிர, அது ஒவ்வொரு குடும்பத்தின் உள்ளும் புகுந்து செயல்படவில்லை.

கடவுளை முதன்மைப்படுத்தி அமைக்கப்பட்ட மத, சாஸ்திர பேதங்கள் கேள்விக்கு உட்படுத்தப்பட்ட போது, தமிழ்க்குடும்பம் மட்டுமல்ல, இந்தியக் குடும்பமே ஒரு நிமிடம் நிலைகுலைந்தது.  காலம் காலமான நம்பிக்கையாகத் தொடர்ந்து வரும் பிறப்பு, வர்ணம், சாதிய முறைகளின் ஆதாரப் புள்ளியைப் பற்றிய சிந்தனைகள் விஷக்கிருமிகளாகக் கருதப்பட்டன. ஆயினும் இவை விரைந்து பரவுவதைத் தவிர்க்க முடியவில்லை.

மேற்கத்தியக் கலாச்சாரத்தின் நுண் கிருமிகள் மெல்லத் தங்களை உயிர்ப்பிக்கத் துவங்கின. இந்த மாற்றம் முதலில் உடை, மொழி, பண்பாடு என்ற தளத்தில் துவங்கியது. இந்த மாற்றங்களை உருவாக்கத் தொடர்புச் சாதனங்கள் உருவாக்கப்பட்டன. இந்த மாற்றங்களால் தமிழர்குடும்பம் தன்னை விரிவுபடுத்திக் கொண்டதெனவும் கூறலாம். இந்நேரம் தன் நுண் வலைகளை அறுத்துவிட்டது என்றும் கூறலாம். தனி நபரின் வாழ்வு, சுகம், போகம், நோக்கம் முதன்மையாக்கப்பட்டதால் அதன் வேர்கள் குடும்பத்திலும் ஓடத் துவங்கின. தனி நபரின் இருப்பு அவரது பொருளாதார நிலையால் அளவிடப்படும் கதி உருவானது. நேற்று வரை பிரம்மசாரிகளாக இருந்து, துறவிகள் போலப் பற்று அற்று வீட்டோடு இருந்தவர்களும், வயதானவர்களும், இந்த நோக்கின் அம்புகளுக்கு முதல் பலியாகினர். இவர்களைக் குடும்பம் விலக்கிவைக்கத் துவங்கியது. தனித் தனிக் குடும்பங்கள் என்ற சிந்தனையின் பல்வகை ரூபம் வளர வளரக் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு ஆட்டம் காணத் துவங்கியது. இத்தனைக் காலமாக அதைத் தாங்கிய தூண்கள் ஆட்டம் கண்டன.

ஓரிடத்தில் தலைமுறையாக வாழ்ந்த மனிதார்கள், இடம் விட்டு இடம் பெயரத் துவங்கினர். பணம் தேடும் இந்த முயற்சியில் வெளி மாவட்டமும், தேசமும் சென்று அடையும் தூரங்களாகிப் போய்விட்டன. அப்போதும் பெண்கள் வீடுகளின் உள்ளேதான் வாழ்ந்தனர். ஆணின் புதிய செயல்திட்டங்கள் இந்தக் குடும்ப அமைப்பைப் புத்துருவாக்கம் செய்தது. படிப்பும், விஞ்ஞானமும், சமூக மாற்றங்களும் ஏற்படுத்திய தொடர் தாக்குதல்கள் பெண்ணிற்கு அற்பச் சலுகைகளை வழங்கின. அந்த அற்பச் சலுகைகளே இந்தக் குடும்பத்தை மாறச் செய்துவிட்டன என இன்னும் எண்ணும் ஆண்கள் இருக்கவே செய்கின்றனர்.

சுதந்திரத்திற்கு முந்திய தமிழ்க் குடும்பம் எனக்கு நினைவூட்டுவது முயல், ஆமை கதையையே. முயலுக்கும், ஆமைக்கும் பந்தயம் நடந்து ஆமை ஜெயித்ததாகக் கூறப்படும் தந்திரக் கதைதான் தமிழர் வாழ்வு. முயல்தான் தமிழ்ர்க்குடும்பத்தின் ஆண். பொதபொதவென உடலும், சாப்பாட்டில் ப்ரீதியும், வசீகரமான உடலும், அதே நேரம் அதிக தூரம் செல்லாது ஓய்வு கொள்ளும் சோம்பலும், பயந்த சுபாவமும், தாவும் தன்மையுடையதுமான முயலே ஆண் எனக் கூறப்படுகின்றது. ஆமையைப் போல எப்போதும் தன் கூட்டிற்குள் உடலைக் குறுக்கிக் கொண்டு, சதா காலமும் தண்ணீரில் உழன்றபடி, பயந்த சுபாவமாய், ஒரு நீர்ச்சிதறல் கண்டால்கூட உடலை உள் இழுத்துக் கொள்ளும் அகன்ற மென்பாதம் கொண்ட வசீகரமான ஆமைதான் பெண். ஆமையும், முயலும் நடத்தும் குடித்தனமே தமிழ் வாழ்க்கையாக இருக்கின்றது. முயலின் வீரவேச தாவல்களும், அகன்ற மீசையும் ஆணிடம் மாறவேயில்லை. ஆமையான பெண்ணும் அப்படியே.

ஆனால் இந்தப் போட்டி முடிந்துவிட்டதா, இல்லை தினமும் நடந்தபடியிருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கின்றது. ஒரு வகையில் இந்தப் போட்டியின் முடிவு முயலுக்கு உகந்ததாக இல்லை என்பதால் முயல் ஆமையைக் கடுமையாக விமர்சிக்கலாம். ஆமை முயலைவிடவும் இரண்டு வாழ்நிலை உயிர் என்பதால் நிலம், நீர், இரண்டிலும் மாறி வாழலாம். ஆயினும் இந்தப் பந்தயம் ஓரு முற்றுப்பெறாத பந்தயமே.

சுதந்திரத்திற்குப் பிந்திய தமிழ்க் குடும்பத்தின் நிலைபேறு முற்றிலும் மாறுபட்டது. அரசாங்க ஊழியர்கள் என்ற ஒரு தனிப்பிரிவு தொடங்கிய காலம் இது. கல்வியின் வழி ஜீவனம் செய்ய முயன்ற மனிதர்கள் இவர்கள். அரசாங்க அலுவலகப் பேரேடுகளில் வரிகளை எழுதத் துவங்கி, நகல் வாழ்க்கையைத் துவங்கும் பெரும்பான்மையினர் உருவாகினர். கற்ற கல்வி வழி அமைந்த வேலைகளான உபாத்தியாயர், பொறியாளர், குமாஸ்தா என்னும் மத்திய தரவர்க்கம் என ஒரு தனி வகைப் பிரிவாக உருவானது. இந்த மனிதர்தாம் காலங்காலமாக இறுகியிருந்த தமிழ்க் குடும்ப வடிவத்தைத் தாங்கள் அறியாமலே உருமாற்றினர். உயர்தர மக்களின் வாழ்வும், விவசாயக் குடும்ப வாழ்வும், அதிக மாற்றம் கொள்ளவில்லை. ஆனால் புதிதாகச் சம்பாதிக்கத் துவங்கிய அரசு ஊழியர்கள் தங்கள் குடும்ப வாழ்வைக் கனவின் தளமாக உருவாக்கினர். இவர்களைக் கனவுலகவாசிகள் எனலாம்.

கூட்டுக் குடும்பத்தை விட்டுப் பிரிந்த இந்த் மனிதனை வியாபார நாகரீகப் பொருட்களின் உலகம் வசீகரித்தது. இதுவரைத் தங்கள் குடும்பத்தில் கிடைத்திராத சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நினைத்துக் கொண்ட இவர்கள் வணிகக் கலாச்சாரம் ஒன்றினைத் தோற்றுவித்த கர்த்தாக்கள் ஆயினர். பணத்தைக் கொண்டு நாகரீக உடைகளும், நவீன மோஸ்தர் பொருட்களும், பயணமும் இவர்கள் வாழ்வில் இடம்பெறத் துவங்கின.  தங்கள் வாழ்வின் நவீனப் பொருட்களைத் தேடி அடைவதைத் தம் அத்தியாவசியமான ஆசையாகக் கொண்டனர். இந்தக் குடும்பத்திலும் கூட பழைய சமையற்கூடமும், படுக்கையறையும், கடவுளும் இடம் மாறவில்லை. ஆனாலும் இதுநாள் வரை கூண்டு வண்டிகளில், மூடுதிரைப் பல்லக்குகளில் ஒளிந்து வந்த பெண்கள் வெளி உலகின் கண்களுக்கு நேரடியாகக் காட்டப்பட்ட மாற்றம் நிகழ்ந்தது. கணவனும், மனைவியுமாக வெளியே செல்வது உணவு உண்பது நாகரீக உலகில் பிரவேசிப்பது என மாறினர்.

பெண்களின் நிலைப்பற்றி எழுந்த உரத்த குரல்களால் சில பெண்கள் படிக்கவும், சமூக அளவில் பங்கேற்கவும் துவங்கினர். இதனால் சமூக அந்தஸ்து உயரக் கூடும் என நினைவுகொண்ட ஆண்கள் இதை ஒரு வரையறைக்குள் அனுமதித்தனர். என்றாலும் திருமணம், உறவு எல்லாமும் குடும்பத்தின் மூத்த உறுப்பினர் வழியே தீர்மானிக்கப்பட்டன.

ஆனால் கலாச்சாரச் சாதனங்களின் வருகை மெல்லக் குடும்பத்தில் பல விபரீத கனவுகளை உருவாக்கத் துவங்கியதைப் பலரும் அன்று அறியவில்லை. சினிமா எனும் கற்பனா உலகமும், பத்திரிகைகளும், மேடை நாடகங்களும் வாழ்வைப் பற்றியப் பல புதிய கற்பனா ரூபங்களை உருவாக்கின. ஆண், பெண் உறவில் இருந்து, ஆடை, உணவு, கல்வி, பயணம் என யாவும் இந்தக் கலாச்சாரச் சாதனத்தால் உருவாக்கப்பட்ட பிம்பங்களால் தீர்மானிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆணும் கற்பனைப் பிம்பத்தின் நகலாகத் தன்னை உருமாற்ற முனைந்தான். பெண் அதே போல சினிமாவின் திரை உருவம் போலத் தானும் காட்சியளிக்க வேண்டும் என விரும்பினாள். நவீன மோஸ்தர்கள் வரத் துவங்கின.

பெண்கள் கல்வியறிவு பெறுவதும், வேலைக்குப் போவதும் எளிதாக வரவேற்கப்படவில்லை. இந்தப் பிரச்சினை பொருளாதார சார்பால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இயங்கத் துவங்கியது. ஒன்றிரண்டு குடும்பத்தில் இருந்து பெண்கள் வெளி உலகில் காலடி வைத்தனர். சுய சம்பாத்தியம் கொண்டனர். ஆயினும் பதிவிரதாக்களாகத் தன்னைக் கருதிக் கொண்ட மனோபாவம் மாறவில்லை.

கலாச்சாரத்தின் இடைக்கலப்புகள், மெல்ல இந்தக் குடும்பத்தின் வர்ணத்தினை மாற்றின. குடும்ப ரீதியான உறவுகள் பிரிவு படத் துவங்கின. மத்திய தர வாழ்வு தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்ள பெண் சுதந்திரத்தை விட்டுக் கொடுத்தது. ஆயினும் இதன் ஒழுக்கம், கடவுள் சார்ந்த பிடிப்புகள் இறுகியேயிருந்தன.

1950 களின் மத்தியில் கிராமத்தின் தெருவில் சைக்கிள் கற்றுக் கொள்ளும் பெண் ஒருத்தி, கூட்டமாக வேடிக்கைப் பார்க்கப் பட்டாள். நகரத்தில் வேலை பார்க்கும் பெண் பரிகாசத்திற்கு உள்ளானாள். இதே கால ஆண் பழைய ஆணைவிட உடை ரீதியில் மாறியிருந்தாலும் கூட அவன் மனம் முந்தியகால ஆணின் சமையல், போகம் எதில் இருந்தும் விலகவில்லை. பதிலாக இவற்றைப் பற்றி பேச உரிமை கொடுப்பதன் வழியே தனது நாகரீகம் காப்பாற்றப்படும் என நம்பினான்.

கூட்டுக் குடும்பத்தின் சிதைவால் இழந்து போன உறவு முறைகள் இப்போதும் அவனுக்குத் தேவையாக இருந்தது. விட்டுப்போன உறவுகளும், வீடும், கிராமமும் அவனுக்குள் ஊசலாடிக் கொண்டேயிருந்தன. சுதந்திரத்தின் பிந்திய தமிழ்க் குடும்பத்தில் பெரிய மாற்றம் கொண்டது மத்திய தர வர்க்கமே. வணிகக் கலாச்சாரத்தால் பிடித்துக் கொள்ளப்பட்ட இவர்கள் காகிதப் பணத்தில் தங்கள் வாழ்வின் எல்லா வரிகளும் எழுதப்பட்டுள்ளதாக நம்பினர். ஆணுக்கும், பெண்ணுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே போனது. மிகப்பெரிய வீடுகள் பிரிக்கப்பட்டு, நான்கு, ஐந்து தனி வீடுகளாயின. ஒண்டிக் குடித்தன வாழ்வு உருவானது.

இந்தக் காலகட்டக் குடும்பத்தின் வேர் சொல்லாகச் சமரசம் என்பது உருவாகியது. உணவில், உடையில் என எதிலும் சமரசம் செய்து கொண்டால் மட்டுமே இனிக் குடும்பம் எனும் அமைப்பு நீடிக்கும் என உணர்ந்து சுய சமாதானமும், சமரசமும் கொண்ட மனிதர்கள் உருவாகினர். இது மன உணர்வுகளை வெளிப்படுத்த வழியின்றிப் பாட்டிலில் அடைப்பட்ட பூதம் போல உள்ளேயே அமுக்கிக் கொண்டு இருக்கச்செய்தது. அது வெடிக்கும் காலம் ஆண், பெண்களை, விட்டுப் பிரிவதும் பெண், ஆணை விலக்குவதும் நடந்தேறியது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழர் குடும்பம் சுத்தமாகப் புது உருவம் கொண்டு விட்டது. இப்போது உள்ள குடும்பம் வேலைக்குப் போகும், ஆண், பெண் நவீன வாகனங்கள், சமையல் யந்திரம், படுக்கைகள், சோபா, வண்ணத் தொலைக்காட்சி, திரைச் சீலைகள், இரண்டு, மூன்று  குழந்தைகள் பணம் மற்றும் நவமோஸதர் பொருட்கள் தீர்மானிக்க முடியாத ஒரு சுழலும் சரடைப் போல  ஒழுங்கற்று இருக்கிறது. தனி நபர்களின் வாழ்வு முதன்மையாக்கப் பட்டுவிட்டது. சமூக நிகழ்வுகளுடன் வாழ்ந்த போதும் அவற்றினை விட்டு விலகி தன் வட்டத்தினைத் தானே உருவாக்கி விட்டான். மனிதன் தன்னை நேரடியாகப் பாதிக்காத எந்த விஷயத்தின் மீதும் அவனுக்கு ஆர்வமும், ஈடுபாடும் காட்டுவதில்லை.

கலாச்சாரத் தளத்தில் குடும்பத்தின் நெடிய பின்னணி மறைந்து வரும் பாடல்களாக ஒலிக்கின்றன. தாலாட்டுப் பாடும் ஒலி நாடாக்கள், பால் புட்டிகள், டின்னில் பேக் செய்யப்பட்ட உணவுகள் பிளாஸ்டிக் காகிதத்தால் மூடி வளர்க்கப்படும் காய்கறிகள், ரெடிமேட் உடைகள், ரெடிமேட் கனவுகள். தமிழ் வாழ்வின் நுண்ணிய கூறுகள் அழிந்து விட்டன. விவசாயக் குடும்பங்களின் அழிவு நகரங்களைப் பெருநகரமாகவும், சிறு நகரமாகவும் உருமாற்றிவிட்டது. வயல்கள் வீடுகளாகின்றன. மின்சார ரயில்களில் தொங்கிப் போகிறார்கள் மக்கள். பம்பாய் நகரத் தெருவில் குரங்குடன் வித்தை காட்டிப் பிழைக்கிறான் கரிசல் விவசாயி. மத்திய தர வாழ்வே தமிழ் வாழ்வு எனவாகிப்போனது. இதுநாள் வரைத் தன்பிடியை இறுக வைத்திருந்த கடவுளின் பிடிகள் கூட இன்று தளரத் துவங்கிவிட்டன. அவசரப் பூஜைகளும், ஐந்து நிமிடப் பாசுரங்களும் வந்துவிட்டன. கடவுளின் திருவுருவங்கள் சுவரில் இருந்து இறங்கின. சலவைக் கற்கள் இடப்பட்ட குளியல் அறையில் ஒரு சதுரக் கல்லாக மௌனித்திருக்கிறார் கடவுள்.

புதிய உணவு வகைகளும், பால் உறவுகளும் பேசப்படுவதும் விவாதிக்கப்படுவதும் நாகரீகமாகக் கருதப்படுகின்றன. இவை இரண்டுமே தமிழ்க் குடும்பத்தை அதிகம் வசீகரித்தன. குடும்ப ரீதியாக வாழ்ந்த போதும் ஒற்றை மனிதர்களாக ஆணும், பெண்ணும் வாழவே மனரீதியில் முயலுகின்றனர். கலாச்சாரச் சாதனங்கள் இந்த இரண்டு கருத்துக்களை அதிகம் உற்பத்திச் செய்து மிதக்க விடுகின்றன. தனிநபரின் வாழ்வைப் பற்றிக்கொண்டிருந்த சுயக்கட்டுப்பாடு, ஒழுக்கம் எனும் கலசங்களைக் கழட்டி எறிய ஒவ்வொருவரும் முயல்கிறார்கள். சண்டையும் வேதனையும், கசப்பும் கொண்ட இந்தக் குடும்பத்தில் பெரிதும் கவலைக் குரியவர்கள் குழந்தைகளும், வயதானவர்களுமே. கவனிப்பார் அற்ற குழந்தைகள் வீட்டின் தனி அறையில் விரும்பியபடியும், பூட்டிய கதவிற்கு வெளியே காத்துக் கிடந்தும், விடாது தொலைக்காட்சிப் பிம்பங்களால் விழுங்கப்பட்டு வருவதும் துரதிருஷ்டமே.

இதுவேதான் வயதானவர்களுக்கும். பாதுகாப்பற்ற தன்மையை அவர்களுக்கு உருவாக்குவதுடன், அவர்களைப் புறக்கணித்துத் தனியே முகாம்களில் விட்டுவிடும் புதிய கலாச்சாரம் பெருகிவருகிறது. குழந்தையைப் போல கண்ணீர் ததும்பும் முகத்துடன் தன்னை அநாதை போல் முகாமில் விடாதே எனப் புலம்பும் வயதான பெண்ணின் குரல் சப்தமற்று ஓய்ந்து மறைகிறது.

இந்தக் குடும்ப அமைப்பின் சிதைவே சமூகத்தில் உருவாகிவரும் வன்முறை, பலாத்காரம் போன்ற சிதைவுகளாகின்றன. குடும்பத்தை மன ரீதியான வன்முறை ஒன்று ஆட்சி செய்யத் துவங்கிவிட்டது. இந்நிலையில் இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழர் குடும்பம் எப்படியிருக்கும் என யோசிப்பது கசப்பாகவும், நிஜமானதாகவுமிருக்கிறது. எதிர்காலத் தமிழர் குடும்பம் ஒற்றை மனிதனின் வாழ்வாகத் தானிருக்கும். தனி அறையும் மூடிய கதவுகளும், தொடர்புச் சாதனங்களும் கொண்ட தனி மனிதன் ஒற்றையாகவே வாழ விரும்புகின்றான். இந்த வாழ்வு தரும் சுதந்திரம், மனிதனால் சமூகத்தினை மேம்படுத்துவது இயலாது. ஆண் – பெண் இருவருக்குமிடையே ஜனனம் முதல் தொடங்கிய உறவு எதிர்த்திசை கொண்டால் விளைவு வெகு அபாயமாகியிருக்கும். இத்தகைய சமூகம் உருவாக்கப்படாமல் தவிர்க்க வேண்டுமாயின், சமூக ரீதியில் ஒவ்வொரு குடும்பமும் ஸ்திரப்படவேண்டும். இதற்கான விதைகள் விதைக்கப்படவேண்டும். சரிந்த வீடுகளும், காலித் தெருக்களுமான கிராமங்கள் புராதன அகழ்வு இடமாக மாறப்போவதை அனுமதிக்கக்கூடாது. நகரம் நோக்கி குவியும் கோடிக்கணக்கான மக்கள் உலர்ந்த ஓட்டில் திரியும் எறும்புக் கூட்டம் போல அலைவுறுவார்கள். இயற்கையோடும், கலாச்சார நுண்துகள் உடனும் வாழ்வு திரும்பப் பொருந்தப் படாவிடின் இந்தத் தமிழர் வாழ்வின் சிதைவு கலாச்சாரத்தின் வீழ்ச்சியாகவேயிருக்கும்.

ஆப்பிரிக்காவில் உள்ள தொல் இந்திய இனக்குழு ஒன்றில் எவருக்காவது ஓர் உறவுமுறை இல்லாவிட்டால் அதாவது ஒருவருக்கு மாமா இல்லாவிட்டால், அந்தக் கிராமத்தில் ஒருவரைத் தேர்வுசெய்து சம்பந்தப்பட்டவருக்கு அவரை மாமாவாக இருக்கச் செய்வார்களாம். தமிழ்ச் சமூகத்திற்கும் அதுதான் எதிர்காலத் தீர்வோ என்னவோ!.

 

You Might Also Like