Star Mountain

My travels and other interests

மலரும் நினைவுகள் (2015)

மலரும் நினைவுகள்

ஜெயகாந்தன் (1934-2015)

நடராஜன் முருகானந்தம்

நியூ ஜெர்சி

ஜெயகாந்தன் அவர்களை முதலில் சிறந்த எழுத்தாளராய்  அறிந்த நான், பின்னர் அவரைச்  சிறந்த பேச்சாளராய் , சிறந்த நண்பராய்  அறிந்தேன். இன்று அவர் இல்லை. அமெரிக்காவில் கடந்த 38 ஆண்டுகளாய்  இருக்கும் நான் சென்னை போகும்போதெல்லாம் இங்கு மெரினா மட்டுமில்லை பாரதி இருந்த வீடும் ஜெயகாந்தன் இருக்கும்  வீடும் உள்ளன என்று நினைத்துக்கொள்வேன். இன்று அவர் இல்லை என்றாலும், சென்னை என்றும் அவர் இருந்த இடமாகத்தான் இருக்கும். அவரது நினைவுகள் மலரும் நினைவுகள். மணம் வீசும் நினைவுகள்.  

சிறுவயதில் இருந்தே  ஜெயகாந்தன் எனக்கு நன்கு அறிமுகமானவர் தான். நேரில் அல்ல. அவரது எழுத்துக்கள் மூலம். சிறுகதை, நாவல், கட்டுரை என்று பல துறைகளிலும் அவர் சிறந்து விளங்குவதை நான் கல்லூரி நாட்களில்  வாசித்துத் தெரிந்துகொண்டேன். இது  1967-72 ஆண்டுகளில் கோவை தொழில் நுட்பக் கல்லூரியில் நான் கெமிக்கல் இன்ஜினீ ரிங் படித்துக்கொண்டிருந்த  காலம். பின்னர் ஐ.ஐ.டியில் மேல்  படிப்பிற்காக  1972 இல் சென்னை சென்றேன். அடுத்த ஆண்டு  ஜெயகாந்தன் அவர்கள் அங்கு உரையாற்ற வந்தார்.

கூட்டம் திறந்தவெளி அரங்கில் நடந்தது. ஜெயகாந்தன்  சற்று காலம் தாழ்த்தியே வந்தார். முதலில் மிகுதியாய்  இருந்த எங்களது கோபம்  அவர் பேச ஆரம்பித்ததும்  வெகுவாகத் தணிந்தது. நேரம் ஆக, ஆக அவரது பேச்சு  சூடு பிடித்துக் கொண்டிருந்தது.  அனைவரும்  மகுடி கேட்ட பாம்பானோம்.  அவர் சாகித்ய அகாடமி விருது வாங்கப்  போன செய்தியை சொல்லிக் கொண்டிருந்தார். விருதிற்காக  அவர் டில்லி சென்று ஹோட்டலில் தங்கி இருந்தாராம். திடீரென்று கதவை யாரோ தட்டி, விருது வாங்கும் இடத்திற்கு வரவேண்டும் என்று அழைத்தார்களாம்.  ஜெயகாந்தன் அவரிடம் நாளை தானே விழா. இன்று ஏன்  வரவேண்டும் என்று கேட்க, வந்தவர் “நாளை ஜனாதிபதியிடம் விருது  வாங்கப்போகிறீர்கள். அதனால் இன்றைக்கு ரிகர்சல்” என்றார் . உடனே ஜெயகாந்தன் “ ஜனாதிபதியும் ரிகர்சலிற்கு வருவாரா?” என்று கேட்டுவிட்டு, அவரிடம் சாகித்ய அகாடமி என்றால் ஒரு ஈ,காக்கைக்கு கூட தமிழ் நாட்டில் தெரியாது. ஜெயகாந்தனுக்குக் கொடுக்கின்ற காரணத்தால்தான்  தெரியவருகிறது. நீங்கள் என்னை ரிகர்சல், கிகர்சல் என்று அவமதித்தால் அடுத்த விமானம் ஏறி சென்னைக்கு சென்று விடுவேன் என்று சொல்லிக்  கதவை சாத்தினாராம். விருது பின்னர் ரிகர்சல் இல்லாமலேயே வழங்கப்பட்டதாம். அனைவரையும் மகிழ்ச்சிக்  கடலில் மூழ்கியடித்தது இந்தப்பேச்சு.

இப்பேச்சு முடியம் சமயம்,  அவசியம் இல்லாமல் யாரோ கைதட்டியதும்  அவருக்குக் கோபம் வந்துவிட்டது. ஐ கேன் ஸ்டார்ட் எனி  டைம் அண்ட் ஐ கேன் ஸ்டாப் எனி டைம்  (I can start any time and I can stop any time)  என்று சட்டென முடித்து வணக்கம் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். எங்களுக்கு ஒருவகையில் ஏமாற்றமாய் இருந்தாலும், அதுவரையிலும் ஒரு அருமையான பேச்சைக் கேட்ட திருப்தி இருந்தது.

ஐ.ஐ.டியில் படிப்பு முடிந்ததும் நான் ஹைதராபாத்தில் உள்ள பிராந்திய  ஆய்வுக்கூடத்தில் (Regional research laboratory) சேர்ந்து ஆராய்ச்சிப பணியாற்றி வந்தேன். அங்கும் ஜெயகாந்தன் புத்தகங்களைப்  படிப்பது எனக்கு பயனுள்ள பொழுது போக்கு. ஒரு முறை,  1977 என்று நினைக்கிறேன் ; டில்லிக்கு வெளிநாடு  சென்று படிக்க உதவித்தொகை (scholarship)  கொடுக்கும் நேர்காணலுக்காக (interview) சென்றிருந்தேன். பயணத்தின் போது படிக்க ஜெயகாந்தன் புத்தகம் ஒன்று என் கைவசம் இருந்தது. பொதுவாக இது மாதிரி உதவித்தொகை (scholarship) கிடைப்பது மிகவும்  அரிது. குதிரைக் கொம்பு என்றெல்லாம்  என்னோடு வேலை செய்தவர்கள் கூறினார்கள். நானும் முயற்சி செய்வதில் குறை ஒன்றும் இல்லை என்று பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் சென்றேன். நேர்காணலுக்கெனத்  தனி புத்தகம் ஏதும்  இல்லை. அதனால் நான் கொண்டுபோன ஜெயகாந்தன் புத்தகத்தை மாத்திரம் படித்துக்கொண்டிருந்தேன். புத்தகத்தின் பெயர் ஞாபகம் இல்லை. “நான் தொட்டால் சிணுங்கி இல்லை” என்று சூடாக யாருக்கோ முன்னுரையில்  பதில் சொல்லிக்கொண்டிருந்தார் ஜெயகாந்தன்.   அச்சமயத்தில் என்னை இன்டெர்வியூவிற்கு  அழைத்தார்கள். நானும் இதே உத்வேகத்துடன்  இன்டெர்வியூ கேள்விகளுக்கு பதில் சொன்னேன்.    உதவித்தொகை கிடைத்தது.   அமெரிக்கா  வந்து சேர்ந்தேன். உற்சாகமும் உத்வேகமும் தருவது நல்ல இலக்கியம் என்றால் பாரதியும், ஜெயகாந்தனும் எனக்கு நல்ல இலக்கிய கர்த்தாக்கள்.

காலச்சக்கரம் மிகவும் வேகமாய்ச் சுழன்றது. இருபது ஆண்டுகள் ஓடி விட்டன. ஆய்வுப் படிப்பு, திருமணம், குழந்தைகள், வேலை என்று வாழ்க்கையும் வேகமாய் ஓடியது. நான் நியூ ஜெர்சி வந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்டன. இங்குள்ள தமிழர் சங்கத்தில் தீவிரமாய் பங்கெடுத்துப்  பணிபுரிந்த காலம் அது. மகாகவி பாரதி மேல் ஒரு டாகுமெண்டரி படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு நெடு நாள் ஆசை இருந்தது. இதே ஆசை சென்னையில் உள்ள நண்பர் அம்ஷன் குமார் அவர்களுக்கும் இருப்பதை அறிந்தேன். இருவரும் இணைந்து நான் தயாரித்து அவர் டைரக்ட் செய்வது என்று முடிவு செய்து, பணியில் இறங்கினோம்.  ஜெயகாந்தனை படத்தில் இன்டெர்வியூ பண்ணவேண்டும் என்று அவரை அணுகினோம். அவரோ எனக்கு காமெராவின் முன்னால் வந்து பேசுவது செயற்கையாக இருக்கிறது. முடியாது என்று சொல்லிவிட்டார். பின்னர் டாகுமெண்டரி முடிந்து, சென்னையில் அதை வெளியிட முடிவு செய்து, வெளியீட்டு விழாவிற்கு ஜெயகாந்தனை சிறப்புரையாற்ற அழைத்தோம். அவரும் உடனே ஒத்துக்கொண்டார்.

1999-ஆம்  ஆண்டு ஜூலை 30 அன்று வெளியீட்டு விழா. முதன் முதலாக ஜெயகாந்தன் அவர்களை சந்திப்பதில்  புளகாங்கிதம்  அடைந்தேன். திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் விழாவை நடத்தி வைத்தார். நான் வரவேற்புரை நிகழ்த்த, ஜெயகாந்தன் சிறப்புரை ஆற்றினார். பாரதியார் பற்றி ஜெயகாந்தன் பேசியது ஓர் அற்புதம் என்று  மின்னம்பலம் இதழில் எழுதினார்  திருப்பூர் கிருஷ்ணன். அத்துடன்  முருகானந்தம் ஜெயகாந்தனைப்  பற்றிப் பேசியது இன்னொரு அற்புதம் என்று அவர் எழுதியிருந்தது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி தந்தது. எனது வரவேற்புரையிலிருந்து நான் அவரது தீவிர வாசகன் என்பது ஜெயகாந்தனுக்கு  எளிதில்  புரிந்திருக்கும் என்று எண்ணினேன். அதற்கு மேல் சுப்பிரமணிய பாரதி  டாக்குமெண்டரி எடுத்தேன் என்ற காரணம் என் மேல் நெருக்கம் கொள்ளச் செய்ததையும்  உணர்ந்தேன். சமயோசிதமாக மேடையிலேயே அமெரிக்கா  வரமுடியமா என்று கேட்டேன். அவரும் ஒத்துக்கொண்டார். இதுவரை அமெரிக்காவிற்கு யாரழைத்தாலும் சாக்கு போக்கு சொல்லி வந்தது எனக்குத் தெரியும். கும்மிடிப்பூண்டியிலும், கூடுவாஞ்சேரியிலும் பார்த்து முடிக்கவே இன்னும் ஒரு யுகம் வேண்டும். அமெரிக்கா இப்போது வேண்டாம் என்று ஒரு முறை சொன்னார். இன்னொருமுறை நான் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறேன். உங்களோடு பேசவேண்டும் என்று தொலைபேசியில் அழைத்த பெண்மணியிடம், அடுத்த முறை ரஷ்யாவிலிருந்து வாருங்கள், பேசுகிறேன் என்று சொன்னதும் எனக்குத் தெரியும். அப்படிஇருந்தும் பாரதியிடம் அவருக்கிருந்த பற்றால்  எனது வேண்டுகோளை நிராகரிக்கவில்லை.

படவெளியீடு நடந்த இரண்டு நாட்களில் ஜெயகாந்தன் வீட்டில் அவரது “சபை” (வீட்டு மாடியில் நடக்கும் நண்பர்கள் கூட்டம் ) கூடியது. திருப்பூர் கிருஷ்ணன், அம்ஷன் குமார், நான்- மூன்று பெரும் கலந்து  கொண்டோம். அங்கு வழக்கமாய் வரும் நண்பர்கள் பலரின்  அறிமுகம் கிடைத்தது. ஜெயகாந்தன் மிகவும் ரிலாக்ஸ் ஆக இருந்தார். கஞ்சா, அபினியுடன் கள்ளுண்டு வாடாமல் பஞ்சாமிர்தம் பருகுவதும் இக்காலம் என்ற சித்தர் பாட்டும் அதை பாரதியே மேற்கோள் காட்டியதும் என்   நினைவிற்கு  வந்தது. சபை களை கட்டுவதற்கு மது ஒரு கருவியே தவிர, கருத்துக்கள் தடம் புரளவோ, கண்ணியம் குறைவதற்கோ சாதனம் அல்ல என்பதை அந்த சபையும், அதன் நடு நாயகமாய் வீற்றிருந்த ஜெயகாந்தனும் உறுதி செய்தனர். பல தலைப்புக்களில் ஐந்து  மணி  நேரம் நண்பர்கள் ஆத்மார்த்தமாய  கருத்துப் பரிமாற்றம் செய்தனர். இச்சந்திப்புக்குப் பின் ஜெயகாந்தன் எனக்கு ஜே.கே. ஆனார்.

அடுத்த வருடம் (2000)  ஜூன் 25 ஆம் தேதி ஜே.கே., திருமதி. கௌசல்யா அவர்களுடன் அமெரிக்கா வந்து சேர்ந்தார். என்னுடைய விருந்தினராய் ஆகஸ்ட் 16 வரை இருந்தார்கள்.  வெளியூர்  நிகழ்ச்சிகளுக்கு செல்லும் நாட்கள் (நான்கு வாரங்கள்) தவிர மற்ற நாட்களில் (மூன்று வாரங்கள்) என் இல்லத்தில் தான் தங்கினர். அந்த நாட்கள்  மறக்கமுடியாத நாட்கள். அவரது பயண விபரம் மற்றும் தமிழ்ச்  சங்க பங்கேற்பு    பற்றி ஏற்கனவே ஒரு கட்டுரையில் விரிவாக எழுதி இருக்கிறேன் (அமெரிக்காவில் ஜெயகாந்தன்  புத்தகம்). எனவே அந்த விவரங்களைத்  தவிர்த்து தனிப்பட்ட முறையில் நான், எனது குடும்பத்தார், மற்றும் நண்பர்கள் ஜே.கே.யுடன்  பழகிய  அனுபவங்களை மட்டும் குறிப்பிடுகிறேன்.

எனது வேண்டுகோள்படி ஜே.கே அவர்கள் அவர்  எழுதிய புத்தகங்கள் பலவற்றை பார்சல் ஆகக்  கொண்டு வந்திருந்தார். இது நான் இங்குள்ள ஜே.கே.ஆர்வலர்களுக்கும், வாசகர்களுக்கும் கொடுப்பதற்காக. இப்புத்தகங்கள் இங்கு கிடைப்பது அக்காலத்தில் சிரமம்.    அப்புத்தகங்கள் அனைத்தையும் லிவிங் ரூமில் அடுக்கடுக்காக தரையில் பரப்பி வைத்திருந்தேன்.  அதற்கு பின்னால் சோபா இருந்தது.  காலையில் உற்சாகமாய் எழுந்த ஜே.கே. சோபாவில் உட்கார்ந்து, தனக்கு முன்னால் இருந்த புத்தகங்களை காட்டி, கடை விரித்தேன் கொள்வாருண்டு என்று சொல்லி சிரித்தார். “கடை விரித்தேன் கொள்வார் இல்லை” என்று வடலூர் இராமலிங்க அடிகள் சொன்னது என் நினைவிற்கு வந்தது.

அவரை நான்  ஒரு நாள் நியூ யார்க் கூட்டி சென்றபோது, எனக்கு அறிமுகமானவர்  ஒருவர் ஜே.கே. யை அங்குள்ள டி.வி. ஒன்றிற்கு பேட்டி எடுக்கவேண்டும். தயவு செய்து டி .வி. ஸ்டேஷனுக்கு அவரைக் கூட்டி வரவேண்டும் என்று என்னை வேண்டினார். நானும் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்தாயிற்று. இந்த பேட்டியும்    நடந்தால் ஜே.கே.வந்திருக்கிற செய்தி பரவும் என்ற  எண்ணத்தில் ஜே.கே. யை சம்மதமா என்று கேட்டேன். அவர் இந்த டி வி.  சமாச்சாரங்களுக்குச்  சம்மதம் இல்லை இருந்தாலும் உனக்காகச செய்கிறேன் என்று  பெருந்தனமையாகச சொன்னார்.  இதிலிருந்து நண்பர்களுக்காக ஜே.கே. விட்டுக்கொடுப்பதுண்டு என்று தெரிந்து கொண்டேன்.  அப்படி இருந்தும் ஏதோ சில காரணங்களால் அந்த பேட்டி நடைபெறவில்லை.

பிலடெல்பியா நகரில் இருக்கும் பிராங்களின் மியூசியத்திற்கு, ஜே.கே. கௌசல்யா  அவர்களை அழைத்துச் சென்றிருந்தேன். சயன்ஸ் மியூசியம் அது. அதிலிருந்த வான ஆராய்ச்சி (astronomy) பிரிவில் விஞ்ஞானிகள்  பலரின் மேற்கோள்களோடு அவ்வையார் மேற்கோளும் இருந்தது  கண்டு ஜே,கே, பெரிதும் ஆச்சர்யம் அடைந்தார். கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு  என்ற அவ்வையின் பாட்டு  “What we have learned is like a handful of Earth ; What we have yet to learn is like the whole world”  என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. இந்த மேற்கோள் இங்கு போட என்ன காரணம், யார் காரணம் என்று கண்டு பிடிக்குமாறு என்னிடம் கூறினார். நானும் காரணங்களை கண்டு பிடித்துக் கொடுத்தேன். அவருக்கு அதில் மிகுந்த திருப்தி.

எனது வீட்டில் இருக்கும்போது பொழுது போவதற்காக ட்வைலைட்  சோன்  (Twilight Zone) என்ற 1960 களில் வந்த ராட் செர்லிங்  (Rod Serling) தயாரித்த டி .வி. தொடரை போட்டுக் காண்பித்தேன். ஜே.கே. அதை வெகுவாக ரசித்தார். அரை மணி நேரத்தில் முடியும் குறுகிய டி. வி. காட்சி இது. சிறுகதை வடிவில் அமைக்கப்பட்டு,  மாய தந்திரக்  கற்பனையும் (fantasy), அதே சமயம் நவீனமும், கருத்தாழமும்  மிக்க தொடர்  இது. ஜேகே. யின் “பாவம் பக்தர்தானே” கதையில குருட்டுக் கிழவியின் சாப்பாடில்லாமல்,  கோவில் பாலகிருஷ்ணன் இளைத்துப்  போவது போல் கற்பனையும், கருத்தும் கொண்ட டி.வி. தொடர் இது.

அமெரிக்கக்   கூட்டுத் தமிழ்சங்கம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற  ப்ளாரிடாவில் உள்ள டாம்பா நகரம் சென்றோம். திரளான கூட்டம். முதலில் ஜே.கே. பேச்சு. அடுத்து சினிமா நடிகர்கள், கலை நிகழ்ச்சிகள் என்று நிகழ்ச்சி நிரல் இருந்தது. நான் ஜே.கே.வை அறிமுகப்படுத்தினேன். ஜே.கே. என்ற எழுத்தாளரையும்   அவரது  எழுத்தையும் அறிமுகம் செய்யும் வகையில் பேசிக்கொண்டிருந்த  பொழுது, சபையில் சல சலப்பு வருவதை  ஜே.கே. கவனித்தார். பின்னர் அவர் பேசத் தொடங்கினார். “பாரதியின் கனவுகள் நனவாவதை இங்கு நான் காண்கிறேன். நான் இங்கு வந்தது நீங்கள் என் பேச்சை கேட்பதற்காக அல்ல. நான் உங்கள் பேச்சைக் கேட்பதற்கே” என்று சுருக்கமாக முடித்துவிட்டார். பின்னர் என்னிடம் நீ என்னைப்  பற்றி பேசும்போது வந்த சல சலப்பு,  உனக்கு வந்த சல சலப்பு அல்ல. எனக்கு வந்த சல சலப்பு என்று கண்கள் சிவக்கக் கூறினார். ஜே.கே.யின் சென்சிடிவிடி  (sensitivity)யை மறுபடியும் உணர்ந்த எனக்கு நண்பனையும் தன்னையும் பாகுபாடின்றி நினைக்கும் மனிதர்  ஜே.கே. அவர்  தனது கொள்கைகளை என்றும், எங்கும் நிலை நிறுத்துவார் என்று தோன்றியது.

இந்தப்  பேச்சிற்குப் பின்னோ, முன்னோ, தமிழகத்தில் இருந்த வந்த ஒரு அரசியல் தலைவர் வெளிநாட்டுத் தமிழர்களை ஆதரிக்கும் அதே சமயம் இந்திய அரசாங்கத்தை மட்டம் தட்டிப்பேசினார். ஜே.கே. இதை ரசிக்கவில்லை. அந்த பேச்சாளர் பேசி முடித்து ஜே.கே. பக்கம் நடந்து இருக்கைக்கு போகும்போது,  அவரைப்பார்த்து, வெளியூர் வந்து  நம்மை அவமதிக்கிறாய்,  ஊருக்கு வா உனக்கு பதில் சொல்லுகிறேன் என்றார்.

ஹாலில் கூட்டம் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. ஜே.கே.யும் நானும்  ஹோட்டலில் இருந்த நெப்ராஸ்கா நண்பர் டாக்டர். செல்வகுமர்ர் ரூமிற்கு சென்றுவிட்டோம். அங்கு ஒரு சிற்சபை (drink session). அப்பொழுது  ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் குடிக்காமலேயே, கண் சிவந்திருந்த ஜே.கே., பாரதி போல் தலைப்பாகை கட்டிக்கொண்டு ஆவேசமாய் வந்தார். அன்றிரவு எங்களுக்கு  ஓர்  அற்புதமான இலக்கிய விருந்தைக் கொடுத்தார்.  அவர் சொல்லிய பாட்டுக்களும், தமிழும் சொல்லியவிதமும், அது வரை நான் கேட்டறியாதது.  கண்டறியாதது. எப்புத்தகத்திலும் படித்தறியாதது. மடை திறந்த வெள்ளம் போல் இலக்கியம் வந்தது.  நானும் என் பங்கிற்கு ஜே.கே. கதைகளிலும், நாவல்களிலும் வரும் சுவையான சிறுவர்களையும், மனிதர்களையும் அவரது மொழியிலேயே கூறினேன். ஜே.கே. நெஞ்சாரப் பாராட்டினார்.

அடுத்த நாள் கூட்டுத்  தமிழ் சங்கத்தின் கடைசி நாள் விழா. ஜே.கே. கேள்வி, பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்பொழுது  கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று- பெண்களின் மன நிலையை துல்லியமாய் அறிந்து வைத்திருக்கிறீர்களே!.  சில நேரங்களில் சில மனிதர்களில் வரும் கங்கா பாத்திரத்தை ரசித்து எழுதியிருக்கிறீர்கள். அதை எப்படி படைத்தீர்கள்?. அதற்கு அவர் தந்த பதில்- மகற்குத் தாய் தன்  மணாளனோடு ஆடிய சுகத்தை சொல்லினில் சொல்லுமாறு எங்கனே ?. இது திருமூலர் சொன்னது. திருமந்திரத்தில் உள்ளது  என்பதை   பல நாட்கள் கழித்தே தெரிந்துகொண்டேன். ஜே.கே. யின் அறிவு விசாலத்தையும், அவர் ஒரு சிந்தனையாளர் என்பதையும்  கேள்வி பதில் நிகழ்ச்சிகளில்  எளிதில் புரிந்து கொள்ளலாம்.  

கோம்ஷ் கணபதி என்ற நண்பர் ஜே.கே.வின் தீவிர வாசகர்.  டென்னசி மாநிலத்தில் தான் வசித்து வரும் ஓக்ரிட்ஜ் நகரத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த ஊர் மேயரின் மூலம் ஜே.கே.-ஐ கௌரவப் பிரஜையாக்கினார். ஜே.கே, நெகிழ்ந்து போனார். அந்த இடத்தில் இயற்கை வனப்பு மிக்க மலைத்தொடர் ஒன்று உள்ளது. மேக மூட்டத்தால், அது புகை மலை (smokey mountain) என்று அழைக்கப்படும். நான் தொலைபேசியில் பேசும்போது புகைமலை பார்த்தீர்களா  என்று கேட்க, ஜே.கே.,  கோம்ஷ் கணபதியின் வீட்டிலிருந்தே பார்த்தேன். அந்த மலை தெரிந்தது. புகை தான் தெரியவில்லை.   நான் புகைத்த சிகரெட்டால் அது  புகைமலை  ஆனது என்று  சொல்லிச்  சிரித்தார்.

ஒருமுறை கனெக்டிகட் நண்பர் ராஜாராம் அவர்கள் ஜே.கே. தம்பதியரை நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்று பின் நியூ ஜெர்சியில் உள்ள எனது இல்லத்திற்கு கொண்டுவந்து  சேர்த்தார்கள்.  நீர்வீழ்ச்சியை மிகவும் ரசித்ததாக திருமதி. கௌசல்யா அவர்கள் கூறினார்கள். அடுத்த நாள் ஒய்வு நாள். நான் அவர்களுக்கு போஸ்ட்மேன் (Il Postman: The Postman)  என்ற இத்தாலியப் படத்தை போட்டுக்காண்பித்தேன். சிலி நாட்டுக் கவிஞரான பாப்லோ நெருடா அரசியல் காரணங்களால் இத்தாலிய நாட்டு சிறு தீவொன்றிற்கு ஓடிப்போனபோது  நடந்த கதை. கற்பனைக் கதை. நோபல் பரிசு வாங்கும் கவிஞனுக்கும், சாதாரண போஸ்ட் மேனுக்கும் இடையே மலரும் நட்பை தத்ரூபமாக எடுத்த படம். படம் முடிந்தவுடன், ஜே,கே, என் கையைக் குலுக்கி, இது ஒரு கவிதை. நயாகராவை விட நன்றாக இருந்தது என்றார்.

டெலவேர்  பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள தமிழர்கள் வில்லனோவா பல்கலைக்கழக அரங்கில் ஜே.கே.யை கல்வி பற்றி பேச அழைத்திருந்தார்கள். அறிமுக உரையில் நான், கல்லூரி சென்று பட்டம் வாங்காதவர்  ஜெயகாந்தன். ஆனால் இவர்  பற்றி ஆராய்ச்சி செய்து பலர் பட்டம் வாங்கியுள்ளார்கள் என்றேன். அடுத்து ஜே,கே. கல்வி பற்றி பேசினார்.அவையில் டாக்டர் வீராசாமி என்ற ஒரு ஆங்கில பேராசிரியர் இருந்தார். அவரது பேச்சை கேட்ட பேராசிரியர் இவர் ஒரு சிந்தனாவாதி. இன்று தான் முதல் முறையாக இவர் பேச்சை கேட்கிறேன். இவரது புத்தகம் ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பேன் என்று சொல்லி, சொல்லியவண்ணமே “பிரம்மோபதேசம்” நாவலை   மொழிபெயர்த்தார்.

ஜெயகாந்தன் மாலைப் பொழுது என்று ஒரு நிகழ்ச்சியை நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்அமைத்திருந்தது. ஜே.கே.வின் அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் புத்தகத்தில் இருந்து இரண்டு கட்டுரைகளை நண்பர் ராஜாராம் நாடகமாக்கி இருந்தார். பக்தர் மற்றும் நடை பாதை ஞானோபதேசம் என்ற இவ்விரு நாடகங்களை குறுகிய காலத்தில் தயாரித்து ஜே.கே.வை கௌரவிக்கும் எண்ணத்தில் ஒத்திகை மாதிரி (informal ஆக) தத்ரூபமாக அரங்கேற்றினர், இங்குள்ள கலைஞர்கள். இதை சரியாகப்   புரிந்து கொண்ட ஜே.கே., ஒய்வுநேரக் கலைஞர்களின்( amateur artists) முயற்சியை மேன்மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்தினார். வாழ்வின் மகத்துவம் என்ற தலைப்பில் பேசும்போது தன்  வாழ்வின் மகத்துவத்தை இங்கு வந்து உணர்வதாகக் கூறினார். நல்ல இலக்கியத்தைத்  தேடிப்பிடித்து படிக்கவேண்டும். இது நல்ல பண்புகளை வளர்க்கும். விக்டர் ஹ்யூகோவின் ஏழை படும் பாடு  (Les Miserables) கதையில் வரும் பாதிரியாரைப் போலவே தானும் தன்  வீட்டில் தேங்காய் திருடவந்தவனை மன்னித்து, நண்பனாக்கிக் கொண்ட  செய்தியை சொன்னார். வாழ்வின் மகத்துவத்தை அறிவதற்கு பெரிய ஆடம்பரமான அமெரிக்க வாழ்க்கை தான் வேண்டுமென்பதில்லை. அது ஒரு குடிசையிலும், ஒரு அகல் விளக்கிலும், ஒரு வாய்க் கூழிலும் கூட மனிதர்க்குக் கிடைக்கும் என்றார். சில நேரங்களில் சில மனிதர்கள் சினிமா காட்டப்பட்டது. அவரும் அது முடியும் வரை இருந்து பார்த்தார்.

எனது வீட்டில் இருக்கும்போது நண்பர்களோடு மிகவும் ரிலாக்ஸ் ஆக இருந்தார். தான் சந்தித்த பலரைப் பற்றியும்  பேசுவார். பலர் ஜே.கே.விடம்  ஆலோசனை கேட்க வந்ததாகவும், ஒரு முறை பாரதி தாசன் அவர்களே வந்து, தான் சினிமா எடுக்க விரும்புவது தெரிந்து ஒரு பிரபல நடிகர் தன்னை வைத்து சினிமா எடுத்தால் அவருக்குப்  பொருளுதவி செய்வதாக சொல்கிறார் அவரை நம்பலாமா என்று கேட்டாராம்.  ஜே.கே. அவரிடம் “அவர்  ஒரு நடிகர். அவர்  நடிக்கிறாரா  இல்லையா என்பதை நீங்கள் தான் முடிவு பண்ணவேண்டும்” என்று சொன்னாராம்.  வீட்டுக் காரியங்களில் அவர் எங்களுக்கு உதவ முயற்சிகள் எடுத்துக்கொண்டார்.  ஒரு முறை பேசிக்கொண்டே அழகான முறையில் ஊறவைத்த பாதாம் கொட்டைகளின்  தோலுரித்துக் கொடுத்தார். வீட்டின் வெளியே  இருந்த புல்லை  வெட்டவும்  எனக்கு உதவி செய்யும் எண்ணத்தில் புல்வெட்டும் கருவியை (lawn mower) ஓட்டிப்பார்த்தார்.

ஒருமுறை நான் அவரிடம் துல்லியமாக எழுத எப்படி வருகிறது ? ஒருவரைப்பார்க்கும்போது அவர் எப்படிப் பேசுகிறார், எப்படி குனிகிறார், எப்படி நிமிருகிறார் போன்ற அசைவுகள் கூட உங்களுக்கு ஞாபகம் வருமோ என்ற கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே ஆமாம் என்று  தலை அசைத்தார். எனக்கு  எந்தெந்த சமயத்தில் அவரது கதைகள் உருவாகின என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம். எனவே எனக்கு மிகவும் பிடித்த நந்தவனத்திலோர் ஆண்டி கதை பற்றிக்கேட்டேன். அவர் “நான் வெளியூர் சென்றிருந்தபோது  ( ஊரின் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை)  அந்த கதையில் வரும் ஆண்டி மாதிரி ஒரு வெட்டியானை பகல் நேரத்தில் பார்த்தேன். பின்னர் ஹோட்டலில் வந்து தங்கிவிட்டேன். அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து,  மனதில் உருவான அந்த கதையை எழுதி முடித்தேன்” என்றார். சாதாரண சூழ்நிலையில் இருந்து அசாதாரண படைப்புகள் அனாயசமாய் வருவதை கேட்டு வியப்படைந்தேன். ஜே,கே, விற்கு நல்ல ஞாபக சக்தி. ஒரு முறை நான் அவரிடம், உங்களை நான் எழுத்தாளனாக பார்க்காமல் கலைஞனாகவே பார்க்கிறேன் என்றேன். அவர் கம்யூனிஸ்ட் தலைவர் பால தண்டாயுதம் கூட இதையே சொன்னார் என்பதை உடனே நினைவு கூர்ந்தார்.

ஜே.கே.யின் பயணம் முடிவடையும் தருணம் வந்தது. நிறைவு விழா ஒன்றை நான் வாழும் ஹில்ஸ்பரோ நகரில் நடத்தினோம். வாழ்க்கை  பற்றிய விமர்சனம் (Commentaries on Living)  என்ற தலைப்பில் காளிதாசன், ஜே. கிருஷ்ண மூர்த்தி, பாரதி பற்றி மூன்று நண்பர்களும், ஜெயகாந்தன் பற்றி நானும் செமினார் கொடுத்தோம். ஜே.கே. இந்த ஸ்லைடு பார்மேட்டை  கூர்ந்து கவனித்தார். எனது செமினார்-இல் என்னை மிகவும் கவர்ந்த ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகத்தில் ஒவ்வொரு பாத்திரமும் போட்டி போட்டுக்கொண்டு நல்லவராய் இருப்பதை சொல்லி, அதில் வரும் ஹென்றி கூட கிராமத்தார்க்கு  ஹென்றிப்  பிள்ளை தான் என்று  குறிப்பிட்டேன்.  இதையெல்லாம் வெகுவாக ரசித்தார் ஜே.கே. இதற்குப்பின் உன்னைப்போல் ஒருவன் படம் காண்பிக்கப்பட்டது. சில நேரங்களில் சில மனிதர்களுக்கு ஏதும் பேசாத ஜே.கே. இப்படத்தை பற்றி சிறிது பேச முன்வந்தார்  – “நான் இப்படத்தை முதன் முதலில் வெளியிடும்போது  சொன்னேன். நாற்பது வருடம் கழித்துகூட இது பற்றி உலகம் பேசும் என்று.  அது நனவாவதை  இன்று  காண்கிறேன்” என்றார். பின்னர் எல்லோருக்கும் நன்றி கூறி  விடை பெற்றுக்கொண்டார். ஓரிரு நாட்களில் இந்தியா திரும்பிச் சென்றார்.

தனிப்பட்ட முறையில் ஜே.கே.யுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது அவரது தெளிவான எண்ணங்கள் புலனாயின. அவற்றுள் சில-

  • நிறையப் படிப்பதை விட நிறைய சிந்திக்கவேண்டும்
  • பிரிவினை வாதம் நாட்டுக்கு நல்லதல்ல. பிரிவினை வாதம் பேசும் கட்சிகள் சமூகத்திற்கு ஊறு (menace to the society) விளைவிக்கின்றன
  • திருமூலர் மக்களிடையே பிரபலம் ஆகாமல் இருக்கிறாரே என்று கேட்டதற்கு, திருவள்ளுவர் ஆகியிருக்கிறார். அதுவரையில் திருப்தி. அதுவரையில் மகிழ்ச்சி.
  • புதுமைப்பித்தனை கண்டிப்பாய் படிக்கவேண்டும்

இப்பயணத்திற்குப்பின் ஜே.கே.யுடன் நான் தொலைபேசியில் சுமார் 14 வருடங்கள் பேசி இருக்கிறேன்.  இந்தியா போகும்போதெல்லாம்  அவரைச்  சந்தித்திருக்கிறேன். தொலைபேசியில் என் குடும்பத்தார் மறைவு ஒவ்வொன்றிற்கும் என்னை அழைத்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். கடைசி சில வருடங்களில் பேசுவதை வெகுவாகக்  குறைத்துக்கொண்டார். ஒரு வேதாந்தி போல் எனக்குத்  தென்பட்டார்.   கடைசியாக அவரை இறப்பதற்கு நான்கு மாதங்கள் முன்பு (2014 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் நாள்) சந்தித்தேன். அப்பொழுதுகூட  அவர் மிகவும் அலெர்ட் (alert) ஆக இருந்தார். நான் பர்வதப்பாட்டி  என்று தவறாக அழைத்த  பாத்திரத்தை  பஞ்சவர்ணத்தம்மாள் என்று திருத்தினார். நான் கொடுத்த நியூ ஜெர்சி மலரில் இருந்த பேராசிரியர் ஹார்ட் அவர்களின் புகைப்படத்தை காட்டி ஹார்ட் தானே என்று கேட்டார்? முடியாத நிலையிலும் என்னை வெளியில் வந்து வழியனுப்ப முயற்சி செய்தார். இதுவே எனது நீங்கா நினைவு.

ஜெயகாந்தன்  ஒரு நல்ல நண்பர். நல்ல எழுத்தாளர். நல்ல மனிதர். உள்ளும் புறமும் ஒன்றாய் இருந்து, உள்ளும்  புறமும்  நன்றாய் இருந்தால் மகத்தான படைப்புக்கள் வரும் என்பதற்கு இவரே சாட்சி. சமூகத்தின் பல தரப்பு மனிதரிடமும் உறவாடி அவர்களின் மொழியையும், பிரச்சனைகளையும், மகத்துவத்தையும், வெளியுலகம் உணரச்செய்தார். மனிதாபிமானம் என்னும் அடித்தளத்தில் யதார்த்தமாய் எழுந்த  எழுத்துக்கள் இவர் எழுத்துக்கள்.  பாரதியின் மாணவனாய்த் தொடங்கி, பாரதியின் வாரிசாய் முடிந்தது இவர் எழுத்துலக வாழ்க்கை. இது  வெறும் புகழ்ச்சியல்ல. இது இவர் பெற்ற  வரம். இறவா வரம்.

(இக்கட்டுரை ஜூன் 2015-இல் ஜெயகாந்தன் நண்பர் ஒருவரின் வேண்டுகோளின்படி அவரது மலருக்காக எழுதப்பட்டது. மலர் வெளியான விபரம் தெரியவில்லை.)

You Might Also Like