Star Mountain

My travels and other interests

நானும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கமும் (2014)

நானும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கமும்
ஆனந்த் முருகானந்தம்
ஹில்ஸ்பரோ
நியூ ஜெர்சி

1987 ஆம் ஆண்டு நான் எனது குடும்பத்தாருடன் நியூ ஜெர்சி குடி பெயர்ந்தேன். கல்லூரிப்  படிப்பை ஆஸ்டின், டெக்சாசில் முடித்து வேலை நிமித்தம் இங்கு வந்த எனக்கு  இங்கு ஒரு தமிழ்ச்  சங்கம் இல்லை என்பது ஒரு குறையாயிருந்தது. ஓராண்டிற்கு பின்னர், 1988-இல்  திடீரென்று ஒரு நாள் டாக்டர் சுந்தரம் அவர்களிடமிருந்து   லிவிங்க்ஸ்டன் நகரில் இலக்கியக்  கூட்டம் ஒன்று நடைபெறப்போகும் செய்தி வந்தது. பேராசிரியர். சத்தியசீலனின் அருமையான சொற்பொழிவு அது. அதைக்கேட்டு அகம் மகிழ்ந்தேன்.  மேலும் ஒரு இலக்கியக் கூட்டத்தையும் திரு. சுந்தரம் ஏற்பாடு செய்திருந்தார். அதில் பக்தி இலக்கியம் பற்றி மூவர் உரையாற்றினர். கலந்து கொண்ட அனைவருக்கும் மிகவும் திருப்தி. அடுத்து 1989 ஜனவரியில் பொங்கல் விழா. அதையும் டாக்டர் சுந்தரம் அவர்களே லிவிங்க்ஸ்டன் நகரில் ஏற்பாடு செய்திருந்தார். இவ்விழாவின் இறுதியில் நண்பரகள் பலரும் நியூ ஜெர்சிக்கு ஒரு தமிழ்ச்  சங்கம் தேவை என்பதை வலியுறுத்தினர்.  இதன்படி டாக்டர் சுந்தரம் அவர்களும் அவருக்கு இதுகாறும் பக்க பலமாய் இருந்த நண்பர்களும் லிவிங்ஸ்டனில் பிப்ரவரி  11, 1989 இல் கூடினர்.  ஒரு நிர்வாகக் குழு அமைத்து, மே 20 ஆம் நாள்,  நியூ ஜெர்சி தமிழ்ச்  சங்கத்தை ஆரம்பிக்கத்  திட்டங்கள் வகுத்தனர்.

மே 20, 1989,  அன்று ரட்கர்ஸ் பல்கலைகழக அரங்கில் தமிழ்ப்  பெரியார் திருமுருக. கிருபானந்த வாரியார் அவர்கள் குத்து விளக்கேற்ற  நியூ ஜெர்சி தமிழ்ச்  சங்கம் பிறந்தது. வாரியார் வாழ்த்துடன் பிறந்த  இந்த தமிழ்ச்  சங்கம் 25 ஆண்டுகள் நல்ல முறையில் வளர்ந்து,  இன்று வெள்ளி விழாக்  கொண்டாடுகிறது. நான் அன்று முதல் இன்று வரை சங்கத்துடன் நேர்முறையாகவோ,  மறைமுகமாகவோ  தொடர்பு கொண்டுள்ளேன்.

இத்தொடர்பினை விளக்குவது இந்தக்கட்டுரை. இதனால் இன்றைய நிர்வாகத்தினர்க்கும், வருங்கால நிர்வாகத்தினர்க்கும், அங்கத்தினர்க்கும்  ஓரளவு சங்கத்தின் சரித்திரம், வளர்ச்சி தெரியுமென்றால் அதுவே என் மகிழ்ச்சி.

நியூ ஜெர்சி தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலம். தமிழர் பலருக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கும் மாநிலம். இத்துடன் உலகத்  தலைநகராம்  நியூயார்க் நகரத்தின் அருகே இருப்பது  இன்னொரு நன்மை. நியூ யார்க் நகரில் வேலை செய்யும் தமிழரும் நியூ ஜெர்சியில் வசிக்கின்றனர். எனவே நியூ ஜெர்சியில் தமிழர் மற்றும் இந்தியர்கள் எண்ணிக்கை எப்பொழுதும் அதிகம்.

அது மட்டுமல்ல. இவ்வெண்ணிக்கை  ஆண்டுதோறும் அதிகரித்துவருவது கண்கூடு. இச்சூழ்நிலையில் தமிழ்ச் சங்கம், இங்கு வாழும் தமிழரின் கலாச்சார தேவைகளை  பூர்த்தி செய்வது அவசியமாகிறது.இதன்படி பொங்கல், புத்தாண்டு, தீபாவளி நாட்களில் கூடுவது அடிப்படை தேவையாக அமைந்தது.

இந்நிகழ்ச்சிகளில் பெரியவர்களும், குழந்தைகளும் கலந்து கலைநிகழ்ச்சிகளால் அவையோரையும் , பெற்றோரையும் மகிழ்வித்தனர். இத்துடன் சில சிறப்பு நிகழ்ச்சிகளும் சேர்க்கப்பட்டன.  அமெரிக்கா வரும்  தமிழறிஞர்களின் பேச்சு, கலைஞர்களின் மெல்லிசை, நாடகம் முதலியன  அவ்வப்போது அரங்கேறின. இவை யாவும் பெரிய அரங்கத்தில், அதிகம் பேர் பங்கு கொள்ளும் வகையில்  நடைபெற்றன. நீண்ட பேச்சை பெரிய அரங்கத்தில் குழந்தைகளோடு  கேட்பது சிரமம். எனவே நீண்ட சொற்பொழிவுகளை தனிப்பட்ட முறையில் அன்பர்களின் இல்லத்திலோ, தனி அரங்கத்திலோ ஏற்பாடு செய்தோம். குறைவான எண்ணிக்கையில் தமிழ், சமூக ஆர்வலர் மட்டுமே கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் இவை.   இது பேசுவருக்கும் நல்லது. கேட்பவருக்கும் நல்லது என்ற முறையில் இருந்தது மட்டுமல்ல. பேச்சு முடிந்தவுடன் பேச்சாளருடன் அவையோர் உரையாடவும், விவாதிக்கவும் வாய்ப்புக்கள் அளித்தன. அவ்வப்போது சில சிறப்பு விருந்தினரையும் தமிழ் சங்கம் வரவேற்று சிறப்பு நிகழ்சிகளை நியூ ஜெர்சி தமிழர்க்கு வழங்கியது. உதாரணத்திற்கு உலகம் சுற்றும் வாலிபர்கள் இருவர்  தம் பயணத்தை மாருதி வேனில் இந்தியாவில் தொடங்கி ஐக்கிய நாடுகள் சபையில் முடித்தனர். அவர்களை அறிமுகப்படுத்தும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.  நான் சங்கத்தின் சார்பில் மூன்று மலர்களுக்கு ஆசிரியராய் இருந்து வெளியுட்டுள்ளேன்.  இவ்விவரங்கள் யாவையும் இணைப்பு 1. நியூ ஜெர்சி தமிழ்ச்  சங்கம் என்ற அட்டவணையில் காண்க. அதில் காணப்படும் குறிப்பிடத்தக்க நிகழ்சிகளைப்  பற்றியோ அல்லது பேச்சாளர்கள் பற்றியோ    சுருக்கமாக இங்கு நான் தருகிறேன்.

1988: சத்தியசீலன்

திருமந்திரம் பற்றிப்  பேசினார். இன்னும் என் நினைவில் உள்ளது. திருமூலர் ஒரு புரட்சி துறவி. அவர் மதம் பற்றி மட்டும் சொல்லவில்லை. மனித மேம்பாட்டையும் வலியுறுத்தியுள்ளார். உதாரணத்திற்கு “உடம்பார் அழியின் உயிரார்  அழிவர். உடம்பை வளர்க்கும் உபாயமறிந்து உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே” போன்ற பாடல்கள்  என்று  சொல்லி மேலும் பல உதாரணங்களால்  திருமூலரை நன்கு அறிமுகப்படுத்தினார். இன்று வரை என் மனதில் நிறைந்த பேச்சு இது. மூல நூலோடு எனக்கு வந்த பத்தாண்டு ஈடுபாட்டிற்கு இப்பேச்சே காரணம்.

1989: அமரர் கிருபானந்த வாரியார்

மரியாதைக்குரிய பெரியவர் என்பதைப்  பார்த்தவுடன் உணர்த்தும் தோற்றம். தமிழ்ச் சங்கத்தை தொடங்கிவைத்து ஆசிகள் வழங்கினார். பேசாத சமயங்களில் எப்பொழுதும் படித்துக் கொண்டே இருந்தார். பக்தி இலக்கியம் அனைத்தும் இவருக்கு மனப்பாடம் என்று சொல்லும் வகையில் எதை கேட்டாலும் உடனே மூலப்பாடலை சொல்லும் திறம் இவருக்கு இருந்தது.  அபார ஞாபக சக்தி. வியக்கத்தக்க தமிழறிஞர்.

1991: அமரர் குன்றக்குடி அடிகளார்

காவியுடை. நீண்ட தாடி. மத குரு. துறவி. ஆனால் புரட்சி துறவி. மக்கள் பணியே மகேசன் பணி என்பது இவரது தாரக  மந்திரம். வாரியாரை போன்று தமிழ் இலக்கியத்தை கரைத்து குடித்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சமூக சிந்தனையாளர். இவரது பேச்சு கணீர் என்று இருக்கும். எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற வரைமுறைகளைக்  கொண்டு தெளிவானதாக இருக்கும். இவருக்கு நான் host ஆக இருந்து சில இடங்களை சுற்றி காண்பித்தேன். இவர் மிகவும் ரசித்த இடம் Princeton இல் உள்ள ஐன்ஸ்டீன் வேலை செய்த Institute for Advanced Studies. இதிலிருந்து அறிவியிலில் இவருக்கு இருந்த நாட்டம்  தெரிந்தது. குன்றக்குடி ஆதீனத்தின் மூலம் குடிசை தொழில் வளரச்சிக்காக பல திட்டங்களை உருவாக்கியுள்ளார். இந்திய அரசாங்கம் இவரது திட்டங்களை மற்ற மாநிலங்களிலும் பரப்ப முன் வந்தது. இங்குள்ள விவசாய பண்ணை (agricultural farm), பால் பண்ணை (dairy farm) முதலிய இடங்களை பார்த்து குறிப்புகள் எடுத்துக்கொண்டார்.

தமிழர் வாழ்வு நெறி என்று தலைப்பு கொடுத்திருந்தோம். இத்தலைப்பு ஓர் ஆழமான தலைப்பு. இதை ஒட்டி பேசலாமே தவிர, ஆழமாக பேசுவதற்கு முன்னாய்வு தேவை. அதற்குரிய நேரமோ, இடமோ இங்கில்லை என்று நேர்மையோடு ஆரம்பித்து, சில பொருள் பற்றி பேசி, அழகாக முடித்தார்.

தனிப்பட்ட முறையில் அவருடன் நான் பழகிய  ஓரிரு நாட்களில் அவர் மத குருவாக நடந்து கொள்ளாமல் நெருக்கமான நண்பராக பழகியது அவர் மேலிருந்த மரியாதையை அதிகரித்தது. அன்பே சிவம் என்பதை நன்கறிந்த அடிகள் குன்றக்குடி அடிகள்.

இவரை வழியனுப்ப நான் நியூ யார்க் விமான நிலையத்திற்கு சென்றிருந்தேன். அப்பொழுது இவரது காவியுடை தோற்றத்தை கண்ட  காவலாளி  எங்கள் இருவரையும் பரிசோதனை பண்ணாமலேயே உள்ளே நுழைய  அனுமதித்தார். அடிகள் என்னிடம் இதனால் பிரச்சனைகள் வரலாம். உதாரணத்திற்கு சிலப்பதிகாரத்தில்  சிலம்பைத்  திருடிய பொற்கொல்லன்கூட    பரிசோதனை இல்லாமல்  உள்ளேயும் வெளியேயும் விடப்பட்டான் என்று நகைச்சுவையாக கூறினார். இருவரையும் சிறப்பு பயணிகள் காத்திருக்கும் loungeஇல் இருக்க முதலில் அனுமதித்தனர். அப்படி நாங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கையில் விமானப் பணிப்பெண்கள் வந்து தங்கள் கை ரேகையை பார்த்து எப்பொழுது இந்த Air India விமான வேலையை விட்டு வேறு நல்ல வேலைக்கு போவோம் என்று சொல்லுங்கள் என்று கேட்டார்கள். நான் அவர்களிடம் இவர் அது மாதிரி சாமியார் இல்லை. உங்கள் ரேகையை பார்க்காமலேயே உங்கள் எதிர்காலத்தை சொல்வார் என்றேன். அடிகளிடம் ஏதாவது குறள்  ஒன்றை சொல்லுமாறு வேண்டினேன். அவர் சிரித்துக்கொண்டே “God bless you” என்று பணிப்பெண்களை வாழ்த்தினார்.அச்சமயத்தில் lounge-இல் ஒரே சலசலப்பு . யாரோ உலக வங்கி பிரமுகர் (World Bank Officer) வருவதாகவும், பாதுகாப்பு விதிப்படி நாங்கள் இருவரும் lounge-ஐ விட்டு வெளியேபோய் காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அதன்படி அடிகளும் நானும் வெளியே சென்று கொண்டிருந்தபோது அந்த வட இந்திய உலக வங்கி பிரமுகர் புடை சூழ உள்ளே வந்து கொண்டிருந்தார். அடிகளை பார்த்த அவர், அவரை கை கூப்பி நமஸ்கரித்து , பின்னர் அவரது காலையும்  தொட்டு  வணங்கினார். இம்மரியாதையை கண்ட  ஏர் இந்தியா அதிகாரி அடிகளின்  பையை தன்  கைகளில் எடுத்துக்கொண்டு  மீண்டும் lounge-இல் கொண்டுவிட்டது மட்டுமல்ல,  தகுந்த சமயத்தில் விமானத்தில் அவரது இருக்கைக்கே  கொண்டுபோய்ச்  சேர்த்து மரியாதைகள் செய்தார்.

1992: அ.ச. ஞானசம்பந்தன்

பழுத்த தமிழறிஞர்.  பேராசிரியர் என்று  பலரும் போற்றுகிற அமரர் அ.ச. ஞானசம்பந்தன் இரண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அவரது ஆய்வுக்கு பேர் போன கம்ப ராமாயணம் பற்றியும், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் பற்றியும் கருத்தான பேச்சு அவையிரண்டும். தனிப்பட்ட முறையில் பழகும்போது, குழந்தைகளிடம் அவருக்கிருக்கும் அன்பு தெரிந்தது. குழந்தைகளோடு சிரித்து  மகிழ்ந்து உற்சாகமோடு அளவளாவினார் . அவர்களை அறிவு பூர்வமாக வளர்க்கவேண்டும்  என்று பெற்றோரிடம் கூறினார். அவர் தமிழ் பேராசிரியரா இல்லை அறிவியல் பேராசிரியரா  என்று  வியக்க வேண்டியிருந்தது . தி. மு. க. கட்சியின் பெருந்தலைவர்கள்  பலரும் பச்சையப்பன்  கல்லூரியில் தன்னிடம் படித்தவர்கள் என்று கூறினார்.

1993: ஜார்ஜ் ஹார்ட்

பர்க்லி, கலிபோர்னியா பல்கலை கழகத்தில் தமிழ் துறை வாழவும் , வளரவும் தமிழ் பீடம் (Tamil Chair) உருவாக்க முயற்சிகள் எடுத்துக்கொண்ட சமயமிது. நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பேராசிரியர் ஹார்ட் அவர்களிடம் $ 23000-ஐ அன்பளிப்பாக  வழங்கினார் சங்கத் தலைவர் டாக்டர் அழகு கணேசன். ஹார்ட்  அவர்கள் மலர் ஒன்றை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

1993: உலகும் சுற்றும் வாலிபர்கள்

T.S.ஸ்ரீனிவாச ராவ் , R. ஞானசேகரன் இருவரும் பாண்டிச்சேரி கல்லூரி  மாணவர்கள். தங்கள் படிப்பு முடிந்ததும் எல்லோரும் போல் வேலையில் சேர்ந்து வாழும் வாழ்க்கை இவர்களுக்கு பிடிக்கவில்லை. சுற்றுப்புறத்தை பாதுகாக்கவேண்டும் என்ற நல்லுணர்வு உடையவர்கள். முதலில் சைக்கிளில் பல நாடுகள் சென்று சுற்றுப்புறத்தை பாதுகாக்க வேண்டும் என்ற தங்கள் கொள்கையை பரப்பினர். 1993-இல்  மாருதி ஜிப்சி வேனில் உலகப்பயணம் செய்து காடுகளை வெட்டக்கூடாது, மரங்களை நடவேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர். இதன்படி ஆசியா (இந்தியா, சீனா), ஆப்பிரிக்கா ,  தென் அமெரிக்கா, கனடா முதலிய கண்டங்களைக்  கடந்து  முடிவாக  நியூ யார்க்கில்  உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் தங்கள் பயணத்தை நிறைவு செய்தனர். குறைந்த  டாலர்களோடும், நிறைந்த மன உறுதியோடும் பயணத்தை தொடங்கிய இந்த இளைஞர்கள் உலகம் சுற்றிய அனுபவம் நமக்கு புதுமையாகவும், சாகசமாகவும்  இருந்தது. நியூ யார்க் வந்த இளைஞர்கள் கையில் போதிய பணம் இல்லை. அவர்கள் விமான செலவிற்கும். மாருதி வேனை கப்பலில் அனுப்பும்  செலவுகளுக்கும்  தமிழ் சங்கம் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி அவர்களை வாழ்த்தி இந்தியாவிற்கு அனுப்பியது. இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் தமிழ் சங்க தலைவர் டாக்டர் அழகு கணேசனும், சங்க ஸ்தாபகர் டாக்டர் சுந்தரம் அவர்களும் ஆவர்.

இவர்களது கருத்தரங்கில் (seminar)-இல் கேட்ட சுவையான அனுபவங்கள் சில:

சீன அரசு இவர்களை தகுந்த விசா இல்லாது  நுழைந்தவர்கள் என்று சிறையில் அடைத்தது. இவர்கள் உலகெங்கும் உள்ள சுற்றப்புற காப்பு ஆர்வலர் அமைப்பு மூலம் இந்த செய்தியை உலகம் முழுவதும் அறிவிப்பு செய்வதாக மிரட்டவும்  இவர்களை எல்லைக்கு வெளியே கொண்டுவந்து மீண்டும் இங்கு வராதீர்கள் என்று அதிகாரிகள் இவர்களை வேண்டி அனுப்பினர்.

மங்கோலியா நாட்டில் பனியில் மாட்டிக்கொண்ட வேனை இழுக்க ஒரு ஒட்டகத்தை விலைக்கு வாங்கினர். அங்கே இருந்த பெளத்த சந்நியாசிகள் இவர்களுக்கு வேனை இழுக்க உதவினர். ஒட்டகத்தை அவர்களுக்கே பரிசாக தந்தவுடன், அந்த ஒட்டகத்தையே அவர்கள் சாப்பிட்ட செய்தி எங்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. எதுவும் விளையாத பூமியில் சில கோட்பாடுகள் மாறும் என்ற நடை முறையை நன்றாக சொல்லி video-வையும் காட்டினர்.

சாம்பியா நாடு அக்காலத்தில் ஊழலுக்கு பேர்  போனது. இவர்களது

ஜீப்பின்   நான்கு டயர்களையும் யாரோ இரவு நேரத்தில் திருடிவிட்டனர். போலீசிடம் புகார் செய்தவுடன் , போலீஸ் கடைவீதி சென்று தங்கள் பணத்தை கொடுத்து  அதே டயர்களை விலைக்கு வாங்கி இவர்களிடம் கொடுத்தனர். காவல் துறைக்கு யார் திருடுகிறார்கள், எங்கு விற்பார்கள் என்ற விபரம் நன்றாகத்  தெரியுமாம்.

தென் அமெரிக்காவில் இரவு நேரத்தில் பயணம் செய்யும்போது ஒருவர் மெதுவாக ஜீப்பை  ஓட்டுவார். மற்றொருவர் அரிவாள் மாதிரி ஆயுதத்துடன் ஜீப்பின் முன்னே செல்வாராம்.. இது jaguar புலியை விரட்ட ஊர்காரர் சொல்லிகொடுத்த தந்திரமாம்.

காசு பணம் அதிகம் இல்லாத இவர்கள் பெரும்பாலும் உலகின் பல பாகத்தில் தங்குவதற்கு உதவியவர்கள் சுவாமி லக்ஷ்மி நாராயணா அமைப்பை சேர்ந்தவர்கள். அந்த அமைப்பு டெலிபோன் புத்தகம் மிகவும் உதவியது என்று நன்றியுடன் கூறினர். அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் தங்கள் இல்லத்தில் உலகெங்கும் இவர்களை விருந்தினர்களாக ஏற்றுக்கொண்டார்கள் என்ற செய்தி இந்த அமைப்புக்கு நல்ல செய்தி.

நட்பு பற்றி பேசியவர்கள்  கயமை பற்றியும் பேசினார்கள். கனடா ரேடியோ, டிவி யில் பிரபலமான ஒரு சென்னைத் தமிழர் இவர்களை பேட்டி  கண்டு பேட்டியையும், பல வீடியோ சீன்களையும்  டிவியில் ஒளி பரப்பி பணம் வசூல் செய்து கொடுப்பதாக இவர்களிடம் சொன்னார்.  இவர்களும் தம்மிடமிருந்த கடைசி டாலர்களை  பயண வீடியோ தயாரிப்பதில் செலவு செய்து இவரிடம் கொடுத்தனர். பணமும் வரவில்லை, பயண வீடியோவும் திரும்பி  வரவில்லை. சீனாவையும், Jaguar-ஐயும்  சமாளித்தவர்களுக்கு  இவரைச் சமாளிக்க முடியவில்லையென்று நகைச்சுவையாகக்  கூறினர்  .

1995: V.P.K.சுந்தரம்

அமரர்  சுந்தரம் அவர்கள் தமிழ் இசை ஆய்வாளர். தமிழிசையின் தொன்மை, பலவிதமான பண்கள், பண்டை தமிழகத்தின் இசை கருவிகள், கர்நாடக சங்கீதம் எப்படி தமிழ் பண்களை பயன்படுத்திக்  கொண்டது போன்ற விவரங்களை நுணுக்கமாகச் சொல்லும் திறம் வாய்ந்த அறிஞர். இவரை ஆசிரியராய் கொண்டு பாரதி தாசன் பல்கலை கழகம் தமிழிசைக் கலைக்களஞ்சியத்தின்  பல தொகுதிகளை வெளியிட்டுள்ளது.  முனைவர் சுந்தரம் அவர்கள் தமிழிசை பற்றி சொற்பொழிவாற்றி, இசைக்கருவிகள் பலவற்றை வாசித்தும் காட்டினார். இது ஒரு அபூர்வ அனுபவம்.

1997: ஜெகன்னாதன்

டைரக்டர்  ஜெகன்னாதன்  தமிழ்த்  தாத்தா உ. வே. சாமிநாதன் அவர்களின் டிவி ஆவணப்படம் ஒன்றை தயாரித்து இந்தியாவில் வெளியிட்டார். இந்த ஆவணப்படத்தின் சில பகுதிகளை திரையிட்டு காட்டி, வீடியோ கேசட்டுகளையும் வேண்டுபவர்களுக்குக் கொடுத்தார்.

1999: சரோஜினி தனபாலசிங்கம்

தமிழிசையை நியூ ஜெர்சியில் குழந்தைகள் மத்தியில் பரப்பி வருபவர் திருமதி. சரோஜினி தனபாலசிங்கம். இவரது  தமிழிசை கச்சேரி,  மாணவர் திருமதி . விமலா அருணாச்சலத்துடன் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்றது. குறிப்பாக சொல்லுமாறு இருந்தது ஒரு பாட்டு. அது பாரதிதாசன் அவர்கள் எழுதிய –

செங்கதிர் எழுந்ததடி
எங்கும் ஒளி ஆனதடி
பொங்கல்  திரு நாளடியே   என்னருந்தோழி- அதோ
பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந்தோழி!

இப்பாட்டை  கரகோஷத்துடன் வரவேற்றது மட்டுமல்ல; பாட்டு  முழுவதற்கும் தாளம் சபையிடமிருந்து வந்தது.

1999: பத்தாவது ஆண்டு விழா

டிசம்பர் மாதம் சங்கத்தின் பத்தாவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. சங்கத்தின் வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமூக வளர்ச்சிக்கும் அக்கறைகாட்டிய பல தமிழர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

2000: ஜெயகாந்தன்

இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியச் சிற்பிகளில் மிகவும்  முக்கியமானவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். நீண்ட  காலம் அமெரிக்கா வர மறுத்த அவர், பாரதி ஆவணப்படத்தை தயாரித்தேன் என்ற ஒரே காரணத்தால் என்  அழைப்பை ஏற்று இவ்வாண்டு அமெரிக்கா  வருகை புரிந்தார். இவரது வருகையை கௌரவிக்கும் வண்ணம், தமிழ் சங்கம் ஒரு வரவேற்பு விழா  நடத்தியது. இவரது இரு கட்டுரைகளை கனெக்டிகட் ராஜாராம் நாடகமாக்க,அவற்றை , நியூ ஜெர்சி வாழ் நாடகக்கலைஞர்கள் நடித்துக்காட்டினர். சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற பிரபல சினிமா காட்டப்பட்டது. மாட்சிமை விருது வழங்கப்பட்டது. வாழ்வின் மகத்துவம் என்ற தலைப்பில் ஜெயகாந்தன் பேசிய பேச்சு மிகவும் உன்னதமான பேச்சு. தனது வாழ்வின் மகத்துவத்தை இங்கு வந்து உணர்வதாகக் கூறிய  ஜெயகாந்தன், தன்னை பாதித்த, தன்னை உருவாக்கிய, தமிழ் மற்றும்  உலக இலக்கியம் பற்றியும், மனிதர்களைப்   பற்றியும் மனம் விட்டுப்பேசினார். அப்பேச்சை இம்மலரில் இணைத்துள்ளோம்.

சுமார் ஏழு வாரங்கள் என்னுடன் தங்கி இருந்து அமெரிக்காவில் பல மாநிலங்களுக்கும் சென்று தமிழர்களை சந்தித்தும், சொற்பொழிவுகள் ஆற்றியும் வந்தார். அதனால் அவரை என்னால் நன்கு  புரிந்துகொள்ள முடிந்தது. மேதாவிக்குரிய குணங்கள் நிறைந்த படைப்பாளி. எந்த பேச்சிற்கும் முன்கூட்டி ஆய்வு பண்ணுவதோ, குறிப்புகள்  எடுப்பதோ  கிடையாது. ஆடு மயில் போன்றவர். அவையில் தகுந்த mood இருந்தால் மழையெனப்பொழிவார். இல்லையேல்  அவையினருக்கு பேரிழப்பைத் தருவார். அபார ஞாபக சக்தியுடைய இவருக்கு தமிழும், சிந்தனைகளும் தங்கு தடையின்றி எந்நேரமும் வருவதைக்  கண் கூடாய் கண்டேன். பழகுவதற்கு இனியவர். நண்பர் குழாமில் இவர் இருக்கும்பொழுது சிரிப்புக்கு பஞ்சமில்லை. சிந்தனைக்குக் குறைவில்லை.

சிந்தனை வட்டம்

தமிழ் சங்க பொது மேடைகளில் இலக்கியம், சமூகம் பற்றி மேலெழுந்தவாறு பேசலாமே ஒழிய ஆழமாக பேச முடியாது. விரிவாக பேச முடியாது. வினா விடை நேரம் ஒதுக்க முடியாது. சிறுவர் முதல் பெரியவர் வரை கூடி இருப்பதும், .அவையோர் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதும் தான்  காரணங்கள்.   இச்சமயங்களில் கலை நிகழ்சிகளுக்கு தான் முக்கியம் தர வேண்டும்.  தரப்படுகிறது என்பது எல்லா தமிழ் சங்கங்களுக்கும் பொதுவான நடைமுறை உண்மை. இதற்கு  பரிகாரமாய் சிந்தனை வட்டம் (Study Circle) என்னும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று நான் சங்கத்தினரை கேட்டு கொண்டேன். அவர்களும் இது நல்ல யோசனை என்று சொல்லவே சிந்தனை வட்டம் 1996 மார்ச் மாதம் என்னால் தொடங்கப்பட்டது. குறைவான எண்ணிகையில் தான் கூட்டம் இருக்கும் என்பதால்    கூட்டங்கள் விருப்பமுள்ளவர்கள் வீட்டிலே கூட  வைக்கலாம். எண்ணிக்கை அதிகமானால் பொது இடத்தில வைக்கலாம்    என்று முடிவு செய்தோம்.

சுமார் பத்தாண்டுகள் சிந்தனைவட்டத்திற்கு பொறுப்பேற்றி பல நிகழ்சிகளை நடத்தினேன். விவரங்களை இணைப்பு அட்டவணை இரண்டில் காண்க. காலம் சென்ற எனது மனைவி சாரதாம்பாள், அருமை நண்பர் கனெக்டிகட்  ராஜாராம் மற்றும்பல நியூ ஜெர்சி வாழ் நண்பர்கள், தமிழ் ஆர்வலர்கள் இந்நிகழ்சிகளை நடத்த உதவினர். சில முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகிறேன்.

1996: முருகானந்தம்

முதல் கூட்டம் என் இல்லத்தில் நடந்தது. உவமையும் உதாரணமும் என்ற தலைப்பில் ஔவையார், திருவள்ளுவர், பாரதியார் பாடல்களை slide format-இல் seminar வடிவில் தந்தேன், . தாம் சொல்ல வந்த  கருத்துக்களை எப்படி உவமையோடும், உதாரணத்தோடும் சொல்லி விளக்கினர் என்பதை ஆய்வு செய்தோம்.

1996: நெடுமாறன்/ நல்லுசாமி

பழ. நெடுமாறன் அவர்கள்  அரசியல்வாதி மட்டுமல்ல நல்ல ஆய்வாளரும் கூட. இந்திய நதி நீர் பிரச்சனைகள் பற்றி பல காலம் ஆய்வுகள் செய்து புத்தகங்களும் எழுதியுள்ளார் என்ற செய்தி அறிந்ததும் அமெரிக்கா வந்த அவரை சிந்தனை வட்டத்தில் ஒரு seminar கொடுக்க வேண்டினேன். அவரும் அதற்கு இணங்கி  பல மணி நேரம் நதி நீர் பிரச்சனைகள் பற்றி ஆழமாகப்  பேசினார். பல செய்திகளை அறிந்துகொண்டோம். அரசியல் பற்றி ஒரு  வார்த்தை கூட கூறாது, முழுக்க முழுக்க ஆய்வுப் பேச்சாக அமைந்தது இந்த seminar.

பொறியாளர் நல்லுசாமி இந்திய நதிகளை இணைக்கும் திட்டங்கள்  பற்றி புள்ளி விவரங்களுடன் பேசினார்.

1996: முருகானந்தம்

பாரதியின் வாழ்க்கை வரலாறு நல்ல முறையில் படங்களுடன் சித்திர பாரதி என்ற நூலில் வெளியிடப்பட்டுள்ளது. R.A.பத்மநாபன் எழுதிய இந்நூல் பாரதி வரலாற்றை எளிய  முறையில் சிறுவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இதை slide formatஇல் நமது குழந்தைகள் , மாணவர்களுக்கென காட்டி கருத்து பரிமாற்றம்  செய்தோம்.

பின்னால் மகாகவி பாரதியின் ஆவணப்படம் எடுப்பதற்கு முன்மாதிரியாய் அமைந்தது இந்த நிகழ்ச்சி. டாக்டர் சுந்தரம் இல்லத்தில் நடந்தது.

1997: தனபாலசிங்கம் தம்பதியினர்

தமிழ் இசை புலமையுடையவர் திருமதி. சரோஜினி. பல கச்சேரிகளை, இலங்கையிலும், மலேசியாவிலும், அமெரிக்காவிலும் நிகழ்த்தியுள்ளார். இவரது கணவர் திரு தனபாலசிங்கம் தமிழ் இசையின் வரலாற்றை

நன்கறிந்தவர். சுமார் 3 மணி நேர கருத்தரங்கில் , தமிழ் பண்கள்   பற்றியும்,   அதிலிருந்து  வந்த கர்நாடக சங்கீத ராகங்கள் பற்றியும் அமரர் தனபால சிங்கம் விளக்கிச்  சொல்ல திருமதி சரோஜினி அந்த பண்களை, ராகங்களைப்  பாடி காட்டினார். கருத்துக்கும், காதுக்கும் விருந்தளித்த நிகழ்ச்சி இது.

1997: எக்ஸ்னோரா நிர்மல்

சென்னை நகரச சுற்று புறத்தை தூய்மையாக வைப்பதற்கு பல திட்டங்களை உருவாக்கி , அரசு செய்யத்தவறிய பணிகளை பொதுமக்களே  செய்யக்கூடும் என்று சொல்லி நிரூபித்துக்காட்டியவர். அத்திட்டங்கள் பற்றியும், சுற்றுப்புற தூய்மையின் அவசியத்தையும் பற்றியும் விரிவாக பேசினார்.

1997: மங்கை

சமூக சேவகியும், எழுத்தாளருமான மங்கை, தமிழ் நாட்டில் சேலம் போன்ற மாவட்டங்களில் ஒரு சமயம் இருந்துவந்த  கொடிய வழக்கமான பிறந்த பெண் குழந்தைகளை கொல்லும்  வழக்கத்தை பற்றி பேசி, பச்சை மண்  என்ற videoவையும் காட்டினார். இப்பொருள் பற்றிய விவாதம் நடந்தது. லிவிங்க்ஸ்டனில்  டாக்டர் சுந்தரம் இல்லத்தில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1998: முருகானந்தம்

தமிழ் விஞ்ஞானிகளான ஸ்ரீனிவாச  ராமானுஜன், சர். சி, வி. ராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர்  ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மாணவருக்கு சொல்லும் seminar. விரிவாக 3 மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சி டாக்டர் K.M.சுந்தரம் இல்லத்தில் நடந்தது.

இதன் அடிப்படையில் பின்னர் சி.வி. ராமன் ஆவணப்படம் தமிழிலும், ஆங்கிலத்திலும் தயாரிக்கப்பட்டது.

2000: கருத்தரங்கம்

ஜெயகாந்தனின் அமெரிக்க பயண நிறைவு விழா. Commentaries on living- என்ற தலைப்பில் காளிதாசன், பாரதியார் , J. கிருஷ்ணமுர்த்தி,  ஜெயகாந்தன் பற்றி நால்வர் seminar கொடுத்தனர்.

ஜெயகாந்தனின் “உன்னைப்போல் ஒருவன்” திரைப்படம் காட்டப்பட்டது.

ஜெயகாந்தன் அனைத்தையும் செவிமடுத்து, தனது மகிழ்ச்சியைத்  தெரிவித்துக் கொண்டார்.

மலர்கள்

1989: துவக்கவிழாச்  சிறப்பிதழ்

முதல்வர்  கருணாநிதி, திருமுருக. கிருபானந்த வாரியார், நியூ ஜெர்சி தமிழர்  வாழ்த்துகளுடன்  “old is gold” என்ற பழமொழிக்கேற்றவாறு ஏற்கனவே வெளியாகியுள்ள இலக்கிய பகுதிகளை கொண்டு, வெளிவந்தது இந்த மலர். தமிழ் எழுத்துக்கள் அன்று முதல் இன்று வரை, கல்வெட்டு எழுத்துக்களில் திருக்குறள், ரா .பி. சேதுப்பிள்ளையின் சரம கவிராயர் போன்ற இயல் தமிழ்  கட்டுரைகளையும், இசைப்பாடல்கள் சிலவற்றையும், நாடகத் தந்தை சங்கரதாஸ் ஸ்வாமிகள் பற்றிய கட்டுரைகளும் அடங்கியது இம்மலர்.முருகானந்தம், சுப்பு முத்துசாமி அவர்கள் இதன் பதிப்பாசிரியர்கள்.

1993:தமிழ் நாடு : நேற்று-இன்று-நாளை  (மாணவர் பார்வை )

தமிழகம் எவ்வாறு இருந்தது, எப்படி இருக்கிறது, எங்கு போகிறது, எங்கு போகவேண்டும் என்ற வினாக்களை சமூகத்திற்கு எழுப்பி அதன் பதில்களை மலர்களாக வெளியிடவேண்டும் என்ற திட்டத்தை முருகானந்தம் சங்க நிர்வாகத்திற்கு அறிவித்தார். மாணவர், வித்தகர், மக்கள், அரசாங்கம்  என்று சமூகம் நான்காக பிரிக்கப்பட்டது. இதன் முதல் கட்டமான மாணவர் பார்வைக்கு  (student’s angle), சங்கத் தலைவர் அய்யாதுரை அவர்களும், உபதலைவர் டாக்டர் கணேசன் அவர்களும் உதவினார்கள். கணேசன் அவர்கள் தனது சேது அறக்கட்டளை மூலம்  தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் உள்ள 265 கல்லூரி முதல்வர்களுக்கு எழுதி 454 கட்டுரைகளை பெற்றுத்தந்தார். இவையாவும் போட்டி கட்டுரைகள். விவசாயம், கல்வி, விஞ்ஞானம், தொழில்துறை, மருத்துவம், சுற்றுப்புறப்  பாதுகாப்பு, இலக்கியம் , இசை,   குடும்பம்   முதலிய 12 தலைப்புகளில் கட்டுரைகள் வந்தன. இவற்றை நான்கு பேர் கொண்ட தேர்வுக்குழு பரிசீலித்து மூன்று பரிசுக் கட்டுரைகளையும், பன்னிரண்டு  பிற கட்டுரைகளையும் தேர்வு செய்தது . இக்கட்டுரைகளையும், தேர்வுக்குழுவினரின் கட்டுரைகளையும் தாங்கி வந்தது, 200 பக்கங்கள் கொண்ட இந்த மலர். பங்குபெற்ற மாணவர்க்கு பரிசுத்தொகையும், மலரும்  அனுப்பப்பட்டது. மலரில் வந்த “கட்டுரை எழுதுவது எப்படி” என்ற எனது கட்டுரை, பாண்டிச்சேரி பல்கலைகழக வகுப்பில் பயன்பட்டதாய் பேராசிரியர் அறவாணன் கூறினார். இம்மலர் வெளியிட எனக்குத் துணை புரிந்தோர்: கோ.இராஜாராம், நா. கோபால்சாமி, வி. ரவிசங்கர்.

1997:தமிழ் நாடு : நேற்று-இன்று-நாளை  (வித்தகர் பார்வை )

இத்தலைப்பின் இரண்டாம் கட்டமான வித்தகர் பார்வை (expert’s angle)க்கு ஏற்ற ஆய்வாளர்களை தேர்ந்தெடுக்க பலர் உதவினர். இதில் குறிப்பிடத்தக்கவர்கள்- குன்றக்குடி அடிகளாரும் , பழ. நெடுமாறனும். வேளாண்மை, பாசனமும் பிரச்சனைகளும், நீதியும்  ஒழுக்கமும், ஊராட்சி, மைய மாநில  உறவுகள்,  இலக்கியம்,தமிழிசை, கணிப்பொறி, தமிழ் நாடகம் , தமிழ் சினிமா , அறிவியல், மருத்துவம், உடல் ஊனமற்றோர் மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டோர் போன்ற 34 தலைப்புகளில் ஓரிரு ஆண்டுகள் முயற்சி செய்து கட்டுரைகள் வாங்கினோம். இப்பணிக்கு அமெரிக்காவில் திரு ராஜாரம் அவர்களும், டாக்டர் குப்புசாமி  அவர்களும் பக்க பலமாய் இருந்தனர். சங்கத்தலைவர் அன்பரசன் இதற்கு மிகவும் ஊக்கம் கொடுத்தார். இந்தியாவில் பாண்டிச்சேரி பல்கலைகழகப் பேராசிரியர் க.ப. அறவாணன் இணையாசிரியராய் இருந்து மலர் வெற்றியடைய முற்சிகள் பல எடுத்துக்கொண்டார். முதல் பதிப்பு நியூ ஜெர்சி இல் ஏப்ரல் 1997 இலும், இரண்டாம் பதிப்பு இந்தியாவில் அக்டோபர் 1997-இலும் வெளியிடப்பட்டன. இந்தியப்பதிப்பு புத்தக வடிவில் 580 பக்கங்களை கொண்டது. பேராசிரியர் அறவாணன் அவர்கள் இந்தப்  பதிப்பை, தமிழகம், பாண்டிச் சேரியில் உள்ள முக்கியமான  நூலகங்களிற்கு தமிழ்  சங்கத்தின் சார்பில் அனுப்பி வைத்தார். இந்தியாவில் இதற்கு நல்ல வரவேற்பு.  பொதுமக்களிடமிருந்து நன்றிக்  கடிதங்கள்  வந்தன. தினமணி இதழில் இப்புத்தகம் நியூ ஜெர்சி தமிழர் தமிழகத்திற்கு கொடுத்த அறிவு தீபம் , அன்புப் பரிசு  என்று விமர்சனம் வந்தது.

2000: Trial by fire and other stories (அக்கினிப் பிரவேசம் முதலிய சிறுகதைகள்)

ஜெயகாந்தன் வருகையையொட்டி ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட சிறுகதைத்  தொகுப்பு ஒன்றை  வெளியிடமுடியுமா என்று பர்க்லி   பேராசிரியர் ஹார்ட் அவர்கள் என்னிடம் கேட்டார் . நானும் சரியெனச் சொல்லவே கலிபோர்னியா ஆனந்தரங்கன்  சுந்தரேசன் (Andy Sundaresan)  எழுதிய ஜெயகாந்தனின் 12 மொழியாக்கம் செய்யப்பட்ட கதைகள் வந்தன. இக்கதைகளை இந்தியாவில் அச்சுக்கோர்ப்பு செய்து புத்தக வடிவில் கொடுக்குமாறு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை வேண்டினேன். அவரும் தயங்காமல் இப்பணியை நன்கு செய்து புத்தகங்களை சிந்தனை வட்டக்கூட்டத்தில் ஜெயகாந்தன் பேசும்போது கிடைக்குமாறு செய்தார். 150 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பேராசிரியர். ஹார்ட் அவர்கள் ஜெயகாந்தன் பற்றி எழுதிய அணிந்துரையும் உள்ளது.

2008: அமெரிக்காவில் ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் அமெரிக்கப்பயணம் பற்றி தமிழகத்தில் இலக்கிய வட்டத்தில் விரிவாகப பேசப்பட்டு வந்தது. அமெரிக்க நண்பர்களால் சோதனைமுறையில் ஆரம்பிக்கப்பட்ட  எனி இந்தியன் பதிப்பகம் இதை  உணர்ந்தது.  என்னை தொகுப்பாசிரியராய் கொண்டு ஜெயகாந்தன் அமெரிக்காவில் பேசிய சில சொற்பொழிவுகளையும், உரையாடல்களையும், பாரதி ஆவணப்பட விழா பேச்சையும்,  அமெரிக்க நண்பர்கள் கட்டுரைகளையும் சேர்த்து ஒரு புத்தகமாய் போட்டால் தமிழ்நாடு இலக்கிய வட்டாரம் பயனுறும்  என்று என்னை அணுகியது. நண்பர்கள் ராஜாராம், சிவக்குமார் அவர்களின் முயற்சியால் 140 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் இந்தியாவில் வெளியானது. நல்ல வரவேற்பும் பெற்றது.

ஆவணப்படங்கள்  (Documentaries)

1999: சுப்பிரமணிய  பாரதி  (65 நிமிடங்கள் தமிழ்-ஆங்கிலம்)

குழந்தைகளுக்காக அவ்வப்போது பாரதி வரலாற்றை  slide show வாக காட்டி  வந்த எனக்கு, பாரதி மேல் ஆவணப்படம் ஒன்று எடுக்க வேண்டும் என்று நெடு நாளாய் ஆசை இருந்தது .  தமிழ் சினிமா பற்றி நேற்று-இன்று-நாளை  மலரில் கட்டுரை எழுதிய அம்ஷன் குமார் அவர்களுக்கும்  அம்மாதிரிப்படத்தை இயக்க  ஆசையிருப்பதை ஒரு நாள் கடிதம் மூலம் அறிந்தேன். இருவரும் இணைந்து இப்பணியை முடிக்கவேண்டும் என்று தீர்மானித்தோம். தமிழ் சங்க நிர்வாகம்  எனக்கு இந்த முயற்சியில் ஆதரவு கொடுக்க முன்வரவில்லை. இருப்பினும் நான் இதுகாறும் நடத்திவந்த சிந்தனைவட்டம் மூலம், நண்பர்களின் உதவியுடன் இதனை எடுத்து முடித்தேன். பாரதி ஆய்வாளர் சீனி விஸ்வநாதன் இதற்கு ஆலோசகர். படத்தின் தமிழ் வசனத்தை இந்திரா பார்த்தசாரதியும், ஆங்கில வசனத்தை அசோகமித்திரன் அவர்களும் எழுதியுள்ளார்கள். பிரபல இசையமைப்பாளரான L.வைத்யநாதன் இதற்கு இசை அமைத்திருக்கிறார்கள். சுமார் 65 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் முக்கிய அம்சம் பாரதியாருடன் பழகிய இருவர்  பேட்டிதான்.  சுமார் நூறு வயதான ராமசாமி அய்யர்  திருவல்லிகேணியில் பாரதி இருந்த வீட்டில் குடித்தனம் இருந்தவர்.  அதேபோல் சுமார் நூறு வயதான கல்யாண சுந்தரம்,  கடையத்தில் பாரதியோடு இருந்த சிறுவர் குழாமில் ஒருவர். மனம் விட்டு பேசி, பாரதியை நேரில் பார்க்கும்படி செய்த இவர்களது பேட்டி காலத்தால் அழியாதது. ஆவணப்படத்தை சென்னையில் ஜெயகாந்தன் வெளியிட்டார். இதன் முதல் பிரதியை இராமசாமி அய்யர் அவர்கள் பெற்றுக்கொண்டார். நாம் எல்லோருமே பாரதியின் வாரிசுகள் என்ற தலைப்பில் ஜெயகாந்தன் பேசிய பேச்சு மறக்கமுடியாத பேச்சு.  விழாவிற்கு பிரபல எழுத்தாளர்கள் பலர் வந்திருந்தனர். அன்று அரங்கத்தில் குண்டு வெடித்திருந்தால், தமிழ் எழுத்துலகம் மறைந்திருக்கும் என்று  ஒரு பேராசிரியர் குறிப்பிட்டார்.  1999 ஆம் ஆண்டு சிறந்த டாகுமெண்டரி பரிசை Mylapore Academy சிந்தனைவட்டத்திற்கு அளித்தது. லண்டன் குறும்படவிழாவில், சிறந்த டாகுமெண்டரி, சிறந்த டைரக்டர் (அம்ஷன் குமார்) பரிசுகளை வென்றது. தமிழகத்தின் பல இலக்கிய  மன்றங்களும்,சினிமா குழுக்களும் இதை திரையிட்டன. பல கல்லூரிகள் திரையிட்டன. பிரபல செய்திதாள்களிலும், பத்திரிகைகளிலும்  பாராட்டு  விமர்சனங்கள் வந்துள்ளன. இந்த டாகுமெண்டரி எடுத்ததின் இன்னொரு பலன், ஜெயகாந்தன் அமெரிக்கா வர ஒத்துக்கொண்டதுதான். கும்மிடிபூண்டியைப் பார்த்து முடிக்கவே இன்னொரு ஜென்மம் வேண்டும். அதனால் அமெரிக்கா இப்போது வேண்டாம் என்று அழைத்தவர்களுக்கெல்லாம் சாக்கு சொல்லி தட்டிக்கழித்தவர் ஜெயகாந்தன், நான் அவரை டாகுமெண்டரி விழாவில் அமெரிக்கா வருமாறு அழைக்க, அவரும் பாரதி வெளிச்சத்தில் நம்மை இனங்கண்டு  அமெரிக்கா வந்து மகிழ்வித்தார்.இது  வெளிவந்த அடுத்த ஆண்டுதான்  ஞான ராஜசேகரனின் பாரதி திரைப்படம் வந்தது. Frontline இதழ் இப்பட விமர்சனத்தில் இதற்கு முன்னோடி சிந்தனைவட்டம் எடுத்த   சுப்ரமணிய பாரதி என்று எழுதியது.

2008-இல் ஆயிரம்  வீடியோ தட்டுகளை தமிழக பள்ளி கல்வி துறை இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து பள்ளிகளுக்கு அனுப்புமாறு வேண்டினோம். கல்வித்துறை secretary அவர்கள் கையில் அடையாளமாக ஒரு தட்டையும் பொதுமக்கள் முன்னிலையில் அளித்தோம். இருப்பினும் ஒரு பள்ளியிலிருந்து  கூட வீடியோதகடு  வந்து சேர்ந்த செய்தி இல்லை. நிர்வாகம் இன்னும் முன்னேறவேண்டும் என்பது சொல்லித்தெரிவதில்லை.

2006: சி.வி.ராமன்  (35 நிமிடங்கள், ஆங்கிலம்-தமிழ்)

1998-இல் சிந்தனை வட்டக்கூட்டமொன்றில் சி.வி. ராமன் அவர்களின் வரலாற்றை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் slide show format-இல் seminar ஆக கொடுத்தேன். இதன்பிறகு டாக்டர். ஜெயராமன் என்ற பெல் ஆய்வுக்கூட விஞ்ஞானியோடு பழகும் பாக்கியம் கிடைத்தது. இவர் ராமன் பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இவர் ராமனின் முதல் மாணவர்களில் ஒருவர். இவரை ஆலோசகராய் வைத்து சிந்தனை வட்டத்தின் மூலம் ஒரு ஆவணப்படம் எடுக்கவேண்டும் என்ற கருத்திற்கு டைரக்டர் அம்ஷன் குமார் ஆதரவு அளித்தார். திருச்சி, கல்கத்தா , பெங்களூர்  முதலிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. பெங்களூர் ராமன் ஆய்வுக்கூடம் முழு ஒத்துழைப்பு கொடுத்தது. ராமனோடு பழகிய பிரபல விஞ்ஞானிகளான டாக்டர். சுவாமிநாதன், டாக்டர். C.N.R. ராவ்  உள்பட பலருடைய  பேட்டிகள் இடம்  பெற்றன. குறைவான வசதிகளைக் கொண்டே  நிறைவான ஆராய்ச்சிகள் செய்து நோபல் பரிசும் வாங்க முடியும் என்று நிரூபித்தவரின் வாழ்வு மாணவர்களுக்கு மட்டும் ஊக்கம் கொடுப்பதல்ல. மற்றெல்லோர்க்கும்  ஊக்கம் கொடுப்பது என்று இதை கண்டோர் பாராட்டினர்.டாக்டர். M.S. சுவாமிநாதன் இதனை சென்னையில் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். பிரின்ஸ்டன் பௌதிக துறை அரங்கில், வடக்கு-தெற்கு அறக்கட்டளை  இந்திய மாணவர்களுக்கு இதை காட்டியது. இப்படத்தில் உணர்ச்சிகரமான பேட்டி தந்த டாக்டர். C.N.R. ராவிற்கு இந்திய அரசு சென்ற ஆண்டு, சர்.சி.வி.ராமனைப்  போலவே,  பாரத ரத்னா பட்டம் கொடுத்து கௌரவித்தது.

குறும்பட விழாக்கள்

2004:  தமிழ் கலைப்பட விழா (Tamil Art Film Festival)

தரமான திரைப்படங்கள் தமிழில் அதிகம் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இது தரமான படங்களை எடுக்கத் தகுதியுள்ளோர் இல்லை  என்பதால் அல்ல. தகுதியுள்ளோர்க்கு சினிமா தயாரிப்பாளர்கள் வாய்ப்புக்கொடுப்பதில்லை என்பதால் தான் என்பதை நன்கறிவோம். Camcorder-தொழில் நுட்பம் இந்நிலையை மாற்றிவிட்டது. உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் camcorder மூலம் சோதனை முறையில்  நல்ல குறும்படங்களை உருவாக்க முயன்றது தமிழ் படத்தின் தரத்தை உயர்த்துவதற்கு கிடைத்த வாய்ப்பு.  இருப்பினும் இவற்றை வெளியிட அரங்கம் கிடைப்பதில்லை. இப்படங்களைப்  பற்றி எழுத பத்திரிகைகள் இல்லை.மக்களுக்கு இப்படங்களை பார்க்க வாய்ப்புக்கள் இல்லை. சிந்தனை வட்டம் இக்குறையை போக்க, 25 குறும் படங்களை தேர்வு செய்து 12 படங்களை குறும்பட விழா நாளன்று திரையிட்டது. 15 படங்களை இந்தியாவிலிருந்தும், 10 படங்களை லண்டன், சுவிட்சர்லாந்து குறும்பட விழாக்களிலிருந்தும்  தேர்ந்தெடுத்தோம். அனைத்து படங்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜூன் 5, 2004 இல் ஹில்ஸ்பரோவில் மூணரை  மணி நேரத்தில் 12 படங்களை காட்டினோம். இத்துடன் அம்ஷன் குமார் இயக்கிய ஒருத்தி என்ற கலைப்படம் ஒன்றையும் ஒண்ணரை  மணி நேரம் காட்டினோம். குறும்பட விழாவையொட்டி ஒரு சிறப்பு மலரை நிழல் என்ற பெயரில் சென்னையில் இருந்து வெளிவரும் சினிமா இதழ் மூலம் வெளியிட்டோம். இவ்விதழில் சிறப்பு கட்டுரைகள் நான்கு வெளியாயின. அவற்றில் ஒன்று. தியோடோர் பாஸ்கரன் எழுதிய தமிழ் சினிமா வரலாறு. இது தவிர மற்றும் ஆவணப்படங்கள், குறும்படங்கள், குறும்பட விழாக்கள் பற்றியும் கட்டுரைகள் வெளியாகின. பரிசு பெற்றவர்களுக்கு சென்னையில் ஜெயகாந்தன் முன்னிலையில் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்காக  சுமார் 5000 டாலர்களை  நண்பர்கள் வசூல்  செய்தனர்.  இவ்விழாவை நடத்த சிந்தனை வட்ட பொறுப்பாளர்களும், இந்தியாவிலிருந்து வெளி என்ற நாடக இதழ் நடத்தும் ரங்கராஜன் அவர்களும் , நிழல் பத்திரிக்கை நடத்தும் திருநாவுக்கரசு அவர்களும் இடைவிடாது பாடுபட்டனர். திரையிட்ட  படங்களில் மூன்று 5 நிமிடங்களுக்கும் குறைவாகவே எடுக்கப்பட்டது   என்பது சுவையான செய்தி.  விழாவிற்கு  நியூ ஜெர்சி, கனெக்டிகட், நியூ யார்க் மாநிலங்களில் இருந்தும்  பாஸ்டன், வாஷிங்டன் நகரங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வந்து சிறப்பித்தனர்.

2006: தமிழ் பட விழா (Tamil Film Festival)

முதல் குறும்பட விழாவிற்கு பின்னர் பல நல்ல ஆவணப்படங்களும் கலைப்படங்களும் குறைவான பட்ஜெட்டில் இந்தியாவில் எடுக்கப்பட்டன. இவற்றில் சிலவற்றை தேர்ந்தெடுத்தோம். வாழ்கை வரலாற்று படங்கள் ஆறும்  (சி.வி.ராமன், அப்துல்கலாம், எம்.எஸ். சுவாமிநாதன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி), ஊருக்கு நூறு பேர் என்ற கலைப்படமும் திரையிடப்பட்டன. இதில் சிந்தனை வட்டம் எடுத்தது சி.வி.ராமன். ஊருக்கு நூறு பேர் என்ற கலைப்படம் மரண தண்டனையை எதிர்க்கும் வண்ணம் ஜெயகாந்தன் எழுதிய குறு நாவலை டைரக்டர் லெனின் திரைப்படமாக எடுத்தது. பல விருதுகள் வாங்கிய படம்.பட விழா ஹில்ஸ்பரோவில்  செப்டம்பர் 6 ஆம் நாள் நடந்தது. பார்வையாளர்களின் அபிப்பிராயங்களை  முடிவில் எழுத்துவடிவில் வாங்கினோம். ஒவ்வொரு படத்தை பற்றியும் விவாதம் நடைபெற்றது. சிந்தனைக்கு விருந்தாய் பட விழா முடிந்தது.

2006- ஆம் ஆண்டிற்குப்பின் அலுவலக வேலைப்பளு, குடும்ப   வேலைகள், இதர துறைகளில் ஆர்வம் முதலிய காரணங்களினால் தமிழ்ச்  சங்க ஈடுபாடு குறைந்தது.. சிந்தனை வட்ட  பணிகளை மேலும் மேலும் தொடர்ந்து  நடத்த முடியவில்லை. எனினும் நியூ ஜெர்சி தமிழ் சங்கம் நல்ல முறையில் நடந்துவருவதை இணையத்தளம் மூலமும், அவ்வப்போது கலை நிகழ்ச்சிகளை பார்வையாளனாக  பார்த்து ரசித்தும்  வந்துள்ளேன். 25 ஆண்டுகள் கழித்து, வெள்ளி விழாக் கொண்டாடும் தருணத்தில் கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது மிகவும் நன்றாகவே உள்ளது. நிகழ் காலமும் நன்றாகவே இருக்கிறது என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளில்  நடந்த நிகழ்ச்சிகளும், இன்றைய வெள்ளிவிழாவும் நிரூபிக்கின்றன. இந்த உற்சாகமும், இளம் தலை முறையினரின் பங்களிப்பும் தொடருமானால் சங்கத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்பதிலும்  சந்தேகமில்லை.

இதுகாறும் எனது தமிழ்ச்  சங்கம் மற்றும் சிந்தனை வட்டப்பணிகளுக்கு உறுதுணையாய் இருந்த காலம் சென்ற என் மனைவி சாரதாம்பாள், அருமை நண்பர்கள் ராஜாராம், P. சுந்தரம், K.M.சுந்தரம், சிவராமன், அன்பரசன், சிவக்குமார் , துக்காராம், சோமசுந்தரம், பாரி அவர்களையும், அவர்களது குடும்பத்தாரையும் இத்தருணத்தில் நினைவு கூறுவது என் கடமையும், இன்பமுமாகும்.

தமிழ்ச் சங்கம் வாழ்க! வளர்க !

அட்டவணை 1.   தமிழ்ச்  சங்கம்

நாள் இடம் பங்கு பெற்றவர் /பேச்சாளர் தலைப்பு/சிறப்பு நிகழ்ச்சி
ஏப்ரல் 30, 1988 லிவிங்க்ஸ்டன் , நி.ஜெ .; இலக்கிய உரை; டாக்டர். சுந்தரம் ஏற்பாடு சத்தியசீலன் பெரிய புராணம்
ஜூன் 4, 1988 லிவிங்க்ஸ்டன் , நி.ஜெ .; இலக்கிய உரை; டாக்டர். சுந்தரம் ஏற்பாடு சத்தியசீலன், கோபாலசுந்தரம், நடராஜன் பக்தி இலக்கியம்
ஜனவரி 28, 1989 லிவிங்க்ஸ்டன் , நி.ஜெ ; பொங்கல் விழா;  டாக்டர். சுந்தரம் ஏற்பாடு நண்பர்கள், உறவினர்கள்,

தமிழ் ஆர்வலர்

தமிழ்ச்  சங்கம் ஆரம்பிக்க வேண்டுகோள்
பிப்ரவரி 11, 1989

 

லிவிங்க்ஸ்டன் , நி.ஜெ; டாக்டர் சுந்தரம் இல்லம் தமிழ் ஆர்வலர்

 

நிர்வாகக் குழு,

ஆரம்ப விழா தீர்மானங்கள்

மே 20, 1989 Rutgers University, New Brunswick  கிருபானந்த வாரியார் நியூ ஜெர்சி  தமிழ் சங்கம்- தொடக்க விழா-

சிறப்புரை  

ஜூன் 25, 1989 டாக்டர் குமரேசன் இல்லம் கிருபானந்த வாரியார் வள்ளலார்
ஜூன் 9-10, 1989 லிவிங்க்ஸ்டன் , நி.ஜெ. சொல்விளங்கும் பெருமாள்

சக்தி பெருமாள்

இரண்டு நாள்

கருத்தரங்கம்

ஜூன் 5, 1991 குன்றக்குடி அடிகளார் தமிழர் வாழ்வு நெறி
அக்டோபர் 4, 1992 அ .ச ஞானசம்பந்தன் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்
அக்டோபர் 10, 1992 அ .ச ஞானசம்பந்தன் கம்பன் என்றதோர் மானிடன்
ஏப்ரல் 24, 1993 தமிழ் புத்தாண்டு விழா பேராசிரியர் . ஹார்ட், பெர்க்லி, கலிபோர்னியா சங்க தலைவர் அழகு கணேசன் சங்கத்தின்  நன்கொடையாக $23000 கலிபோர்னியா பல்கலைகழக தமிழ் துறைக்கு வழங்குதல்
ஏப்ரல் 24, 1993 தமிழ் புத்தாண்டு விழா பேராசிரியர் . ஹார்ட், பெர்க்லி, கலிபோர்னியா மலர் வெளியீடு

தமிழ்நாடு:நேற்று -இன்று-நாளை

தமிழக கல்லூரி  மாணவர் கட்டுரைகள்

செப்டம்பர் 5, 1993 சிலம்பொலி செல்லப்பன்

பெருங்கவிக்கோ

இலக்கிய உரை
நவம்பர் 13, 1993 சிறப்பு நிகழ்ச்சி:மாருதி ஜிப்சி வேன் பயண நிறைவு விழா உலகம் சுற்றும் வாலிபர்கள்- ஞானசேகரன்

ஸ்ரீனிவாச ராவ்

சங்க நன்கொடை

$2800

நவம்பர் 20, 1993 லிவிங்க்ஸ்டன் , நி.ஜெ; டாக்டர் சுந்தரம் இல்லம் உலகம் சுற்றும் வாலிபர்கள்- R. ஞானசேகரன்

T. S. ஸ்ரீனிவாச ராவ்

தமிழ் ஆர்வலர் நன்கொடை

$1500

ஜூலை 29, 1995 பேராசிரியர். வி.பி.கே. சுந்தரம்;

தமிழ் இசை ஆய்வாளர்

சிறப்பு சொற்பொழிவு

தமிழ் செவ்வியல் இசை;பண்டை தமிழ் இசைக் கருவிகள்

ஜூலை 27, 1996 தமிழண்ணல்

தமிழன்பன்

இலக்கிய உரை
ஆகஸ்ட்  11, 1996 கங்கை  அமரன் இசை குழு மெல்லிசை
ஏப்ரல் 19, 1997 தமிழ் புத்தாண்டு விழா மலர் வெளியீடு

தமிழ்நாடு:நேற்று -இன்று-நாளை

தமிழக   வல்லுனர்  கட்டுரைகள்

செப்டம்பர் 7, 1997 பேராசிரியர் சிற்பி பால சுப்பிரமணியம்;

டைரக்டர் ஜெகன்னாதன்

தமிழ் இலக்கியம்

 

 

டாகுமெண்டரி – தமிழ் தாத்தா -உ.வே.சா.

ஜனவரி 31, 1998 சரோஜினி தனபாலசிங்கம்

விமலா அருணாசலம்

தமிழ் இசை கச்சேரி
ஏப்ரல்  17, 1999 தமிழ் புத்தாண்டு விழா புதிய நிர்வாகக் குழு பதவியேற்றம்
ஆகஸ்ட்  22, 1999 பெரியசாமி

இன்குலாப்

இளசை சுந்தரம்

இலக்கிய சொற்பொழிவுகள்
டிசம்பர் 4, 1999 NJTS-10 சங்கத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா சமூக விருதுகள்
ஜனவரி 22, 2000 பொங்கல் விழா மாணவர் பங்கு

பரிசளிப்பு

ஜூலை 22, 2000 ஹில்ஸ்பரோ , நியூ ஜெர்சி

வரவேற்பு விழா

எழுத்தாளர் ஜெயகாந்தன் வாழ்வின் மகத்துவம்-சிறப்பு சொற்பொழிவு
ஜூலை 22, 2000 ஹில்ஸ்பரோ , நியூ ஜெர்சி

வரவேற்பு விழா

எழுத்தாளர் ஜெயகாந்தன் நடைபாதை ஞானோபதேசம் – நாடகம்

பாவம்  பக்தர் தானே – நாடகம்

ஜூலை 22, 2000 ஹில்ஸ்பரோ , நியூ ஜெர்சி

வரவேற்பு விழா

எழுத்தாளர் ஜெயகாந்தன் சில நேரங்களில் சில மனிதர்கள்- சினிமா
ஆகஸ்ட்  19, 2000 கண்ணப்பன்

அதிசய  சிறுமி ஆதிரை

சொற்பொழிவு; ஆதிரை அறிவுத்திறன் சோதனை

அட்டவணை 2: சிந்தனை வட்டம்

மார்ச் 23, 1996 நிகழ்ச்சி # 1 ஆனந்த் முருகானந்தம் உவமையும் உதாரணமும்
மார்ச் 27, 1996 நிகழ்ச்சி # 2 க்ரிஷ் வெங்கட் மூதாதையரைத்   தேடி
ஜூன் 16, 1996 நிகழ்ச்சி # 3 கோ. ராஜாராம் நவீன இலக்கியம்
அக்டோபர் 12, 1996 நிகழ்ச்சி # 4 பழ. நெடுமாறன் இந்திய நதி நீர் பிரச்சினைகள்
அக்டோபர் 12, 1996 நிகழ்ச்சி # 4 பொறியாளர் நல்லுசாமி இந்திய நதி நீர் இணைப்பு திட்டங்கள்
டிசம்பர்  7, 1996 நிகழ்ச்சி # 5

 

ஆனந்த் முருகானந்தம் பாரதி  வாழ்க்கை வரலாறு:Slide Show
பிப்ரவரி 22, 1997 நிகழ்ச்சி # 6

 

தனபால சிங்கம் தம்பதியினர் – சொற்பொழிவும் பாட்டும் தமிழ் இசை -தொன்மையும் வளர்ச்சியும் – கருத்தரங்கம்
மே 11, 1997 நிகழ்ச்சி # 7

 

எக்ஸ்னோரா நிர்மல் சுற்றுப்புறத் தூய்மை
மே 17, 1997 நிகழ்ச்சி # 8

 

டாக்டர் குப்புசாமி

 

தமிழ் கணினி மென்பொருள்  (Tamil software)
மே 17, 1997 நிகழ்ச்சி # 8

 

டாக்டர் சீனிவாசன்

 

தமிழ் மொழி-கல்வி முறைகள்
அக்டோபர் 11, 1997 சிறப்பு நிகழ்ச்சி :

சென்னை

அமைச்சர் RM வீரப்பன்,  கவிஞர் வைரமுத்து , பழ. நெடுமாறன், பேராசிரியர்கள் , தமிழறிஞர்கள் பங்கேற்பு

 

க.ப.அறவாணன்

ஆனந்த் முருகானந்தம்

மலர் வெளியீடு

தமிழ்நாடு:நேற்று -இன்று-நாளை

தமிழக   வல்லுனர்  கட்டுரைகள்; தமிழகம், பாண்டிச்சேரி நூலகங்களுக்கு அன்பளிப்பு  விழா

நவம்பர் 7, 1997 பத்திரிகை செய்தி தினமணி ; ஜான் சாமுவேல் மலர் விமர்சனம்:

அமெரிக்கத் தமிழரின் பரிசு

டிசம்பர் 13, 1997 நிகழ்ச்சி # 9

லிவிங்க்ஸ்டன் , நி.ஜெ; டாக்டர் சுந்தரம் இல்லம்

 

சமூக சேவகர் –

எழுத்தாளர்  மங்கை

பச்சை மண் : பிறந்த பெண் குழந்தைகளை கொல்லும்  வழக்கம் பற்றிய  வீடியோ படம்

விவாதம்

பிப்ரவரி 21, 1998 நிகழ்ச்சி # 10

ஓல்ட் ப்ரிட்ஜ்

டாக்டர் K.M. சுந்தரம் இல்லம்

ஆனந்த் முருகானந்தம் தமிழ் விஞ்ஞானிகள் :

ராமானுஜன் , சி .வி.ராமன் , சந்திரசேகர்

ஏப்ரல் 12, 1998 நிகழ்ச்சி # 11

 

பேராசிரியர் மறைமலை
டிசம்பர் 20, 1998 நிகழ்ச்சி # 12

பாரதி விழா

 

ஸ்ரீநித்யா கிருஷ்ணன் பாரதியார் இன்னிசை பாடல்கள்
ஜூலை 30, 1999 சிறப்பு நிகழ்ச்சி :

சென்னை

சுப்ரமணிய பாரதி – ஆவணப்படம் வெளியீடு நிகழ்ச்சி ஏற்பாடு: முருகானந்தம்

சிறப்பு  சொற்பொழிவு:

எழுத்தாளர்

ஜெயகாந்தன்

பாரதி நண்பர் திரு. இராமசாமி முதல் பிரதியை பெற்று கொள்ளுதல்
நவம்பர் 7, 1999 நிகழ்ச்சி # 13

மில்போர்ட், கனெக்டிகட்

கோ.ராஜாராம் இல்லம்

 

ஆய்வாளர் வேங்கடாசலபதி
டிசம்பர் 11, 1999 நிகழ்ச்சி # 14

ஹில்ஸ்பரோ

நகராட்சி வளாகம்

பாரதி ஆவணப்படம்  அமெரிக்க வெளியீடு
ஆகஸ்ட் 13, 2000 நிகழ்ச்சி # 15

ஹில்ஸ்பரோ

நகராட்சி வளாகம்

ஜெயகாந்தன் வழியனுப்பு கருத்தரங்கம்

 

நடராஜன்

கோ. ராஜாராம்

ரவி சுப்பிரமணியம்

முருகானந்தம்

வாழ்க்கை பற்றிய  படைப்பாளர்      விமர்சனம் :

காளிதாசர்,

பாரதியார்,

ஜே .கிருஷ்ணமுர்த்தி

ஜெயகாந்தன்

 

சினிமா தேசிய விருது பெற்ற கலை படம் ஜெயகாந்தனின்

“உன்னைப்போல்

ஒருவன்”

ஜூன் 5, 2004 நிகழ்ச்சி # 16

ஹில்ஸ்பரோ

நகராட்சி வளாகம்

குறும்பட விழா ;

கனெக்டிகட், நியூ யார்க், நியூ ஜெர்சி, பாஸ்டன் , வாஷிங்டன் , பால்டிமோர்  தமிழர்கள் வந்து பங்கேற்ற நிகழ்ச்சி

இந்தியா , இலங்கை,அமெரிக்கா, சுவிட்சர்லாந்து  நாடுகளிலிருந்து  தேர்வு செய்த படங்கள் பன்னிரெண்டு குறும்படங்களும்  ஒரு முழு

நீளப்படமும்

நாள் முழுதும் திரையிடப் பட்டன

ஜூன் 14, 2006 சிறப்பு நிகழ்ச்சி

சென்னை

ஆவணப்பட வெளியீடு

சிறப்பு சொற்பொழிவு:

விஞ்ஞானி

டாக்டர். M.S.சுவாமிநாதன்

சர் சி.வி.ராமன் –

நோபல்  பரிசு வாங்கிய தமிழன்  வரலாறு  (தமிழ், ஆங்கிலம் )

செப்டம்பர் 23, 2006 நிகழ்ச்சி # 16

ஹில்ஸ்பரோ

நகராட்சி வளாகம்

குறும்பட விழா ;

கனெக்டிகட், நியூ யார்க், நியூ ஜெர்சி, பாஸ்டன் , வாஷிங்டன் , பால்டிமோர்  தமிழர்கள் வந்து பங்கேற்ற நிகழ்ச்சி

ஆவணப்படம் ;

அப்துல் கலாம்,ஜெயகாந்தன்,அசோகா மித்திரன் , இந்திரா பார்த்தசாரதி

கலை படம்

ஜெயகாந்தன் எழுதிய

ஊருக்கு நூறு பேர்

(This article was published in the silver jubilee souvenir of New Jersey Tamil Sangam on Oct 18, 2014)

 

[supsystic-gallery id=’54’]

You Might Also Like