பிரச்சனைக்கான பொதுக் காரணங்கள் (2000)

பிரச்சனைக்கான பொதுக்காரணங்கள்

தமிழக கிராமங்களில் காணப்படும் பெரும்பான்மை பிரச்சனைகளுக்குக் காரணம் நிர்வாகச் சீர்கேடு மற்றும் அரசு அமைப்புகள் சரிவர இயங்காததால் ஏற்படும் விளைவுகளே. ஒவ்வொரு பஞ்சாயத்தும் அதன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான பண உதவி பெற்றுக் கொள்கிறது. திட்டமிடுகிறது. இந்தத் திட்டம் பெரிதும் சுயலாப நோக்கில் செயல்படுவதாலும், முறையான எதிர்கால திட்டமின்மையாலுமே குடிநீர், கழிவு நீர், சாலை, போன்றவை கிடைப்பதில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

அரசாங்கத் திட்டங்கள் உதவிகள் பற்றிய அறிமுகமோ அதற்கான வழிமுறைகளோ மக்களுக்குத் தெரிவதேயில்லை. சொந்த விருப்பத்தில் எவரேனும் இதைச் செயல்படுத்த விரும்பி அணுகும்போது அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் நடைமுறைப்படுத்துதலில் ஏற்படும் சிக்கல்கள், கெடுபிடிகள் திட்டங்களை நெருங்கவிடாமல் செய்கின்றன. தங்களது கிராமத் தேவைக்கான வீடு கட்டும் கடன் உதவி, பெண் சுயதொழில் கடன், வேலையற்றோர் கடன், விதவை உதவித் தொகை, திருமணமாகாத பெண்ணிற்குத் திருமண உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான காலனி வீடுகள், புதிய சாலை வசதிகள் போன்றவை முறையாகக் கிடைக்காமல் போவதற்கு உரிய அரசு அதிகாரிகளே காரணமாக இருக்கிறார்கள். மேலும் அரசியல் தலையீடு இதனை அதிகம் சீரழிக்கின்றது. மாவட்ட ரீதியான வளர்ச்சிப் பணிகள் திட்டமிடும் போது அரசியல் மற்றும் சாதிய தலையீடுகளால் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கே அரசுத் திட்டங்கள் வருகின்றன.

புதிய தொழில் துவங்காமை மற்றும் படித்தவர்களுக்கு வேலை தரும் முயற்சிகள் கிராம அளவில் குறைவாகவே நடைபெறுகின்றன.

குறிப்பாக ரேஷன் முறையானது தமிழகம் முழுவதும் முறையாக விநியோகிக்கப்படுவது சிதைவுற்றுள்ளது. இதனை முற்றாக மாற்றி அமைப்பதால் மட்டுமே இதிலிருந்து விடுபட முடியும்.

கிராம வாழ்வில் குடும்ப அமைப்பிலும் மண உறவுகள், கல்வி, வேலை வாய்ப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபக்கம் கிராமிய வாழ்வின் தன்மையை மாற்றியதோடு இது  போன்ற தீராப்பிரச்சனைகள் கிராமங்களை மெல்ல காலி செய்து நகரை நோக்கி இடம் பெயர்தலைத் தொடர்ந்து தூண்டிக்கொண்டே இருக்கின்றன.